கைது செய்யப்பட்ட இரு பாராளுமன்ற உறுப்பினர்களும் பிணையில் விடுதலை.
சட்டத்தரணி மேஜர் அஜித் பிரசன்ன மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பாலித்த தெவரப்பெரும மற்றும் ஹேஷான் வித்தானகே ஆகியோருக்கு பிணை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு – கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் இன்று பகல் கைது செய்யப்பட்ட இருவரும் கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டது.
கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள பிரதமர் வாசஸ்தலமான அலரிமாளிகைக்கு முன்பாக ஓய்வுபெற்ற மேஜர் சட்டத்தரணி அஜித் பிரசன்ன மீது கடந்த முதலாம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர்களான பாலித்த தெவரப்பெரும மற்றும் ஹேஷான் வித்தானகே தாக்குதல் நடத்தியதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
தாக்குதலுக்கு இலக்கான சட்டத்தரணி அஜித் பிரசன்ன இந்த முறைப்பாட்டை காயங்களுடன் சென்று கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் வழங்கியிருந்தார்.
இதற்கமைய குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் இன்று பகல் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தனர்.
சரணடைந்த நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இருவரும் கொழும்பு கோட்டை நீதிமன்ற நீதவான் லங்கா ஜயரத்ன முன்பாக முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரணை செய்த நீதவான், சந்தேக நபர்கள் இருவருக்குமான பிணை அனுமதியை ஏற்றுக் கொண்டதோடு தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் செல்வதற்கான அனுமதியையும் வழங்கினார்.
0 comments :
Post a Comment