Saturday, November 17, 2018

சட்டரீதியாக வந்தால் பதவி விலக தயாராகவுள்ளேன். பலாத்காரமாக செய்ய முடியாதாம்! மஹிந்தர் எச்சரிக்கை

பாராளுமன்றம் இன்று கேலிக் கூத்தாக மாறியுள்ளதாகவும், சட்ட ரீதியான முறையில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்வைத்தால் பதவியை கைவிட்டுவிட்டுப் போவதற்கு தயார் எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று (16), வீரகெட்டிய – கசாகல, புராண விகாரையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில் :

நாங்கள் அரசாங்கத்தைக் கொண்டுசெல்வோம். விட்டுச்செல்ல மாட்டோம். அதை நான் தெளிவாகக் கூறுகிறேன். சட்டத்திற்கு அமைய நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை கொண்டுவந்து நிறைவேற்றினால், விட்டுச்செல்ல நாங்கள் தயார்.

ஆனால், பலாத்காரமாக அகௌரவத்தை ஏற்படுத்தும் வகையில் பெற்றுக்கொள்ள முயற்சித்தால் எங்களை விரட்டுவது அவ்வளவு எளிதான விடயமல்ல.

ஜனாதிபதிக்கு மாத்திரமே என்னை அவ்வாறு செயற்படுத்த முடியும். ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்தை வேறு ஒருவரும் எடுத்துக்கொள்ள முடியாது. அரசியலமைப்பிற்கு அமைய அந்த அதிகாரத்தை நீதிமன்றத்திற்கு கூட பறிக்க முடியாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது எதிர்ப்புகளை வெளிப்படுத்துவதில் எந்தவித பிரச்சினையும் இல்லை எனத் தெரிவித்த அவர் பாராளுமன்றில் கத்தி போன்ற கூரிய ஆயுதங்கள் எடுத்து வரப்பட்டமை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதுவரையில் எந்தவித சட்ட நடவடிக்கையோ, ஒழுக்காற்று நடவடிக்கையோ எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ள மகிந்த ராஜபக்ஸ பாராளுமன்றத்திற்குள் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியாவிட்டால், அதனை பொதுமக்களிடம் ஒப்படைக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படாது சட்டவிரோதமாக அவர்கள் செயற்பட்டால், தமது தரப்பினரும் உரிய வகையில் பதிலடி கொடுப்பார்கள் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


No comments:

Post a Comment