இந்நாட்டின் அரசியல்வாதிகளை உச்ச நீதிமன்றில் முழங்காலிட - வைப்பேன்! சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு சபதம்.
இலங்கையில் இடம்பெறும் அரசியல் யாப்பு மீறல்கள், மோசடிகள், அதிகார துஷ்பிரயோகம் என்பவற்றுக்கு எதிராக தனி மனிதனாக செயற்பட்டு வருகின்றார் சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு. தமிழ் மக்கள் மத்தியில் பெரிதும் பிரபல்யம் அற்ற அவர் மக்களின் உரிமைகள் சார்ந்து உச்ச நீதிமன்றில் பல்வேறு வழக்குகளை பதிவு செய்து அதற்காக போராடி வருகின்றார்.
அண்மையில் ஜனாதிபதி பாராளுமன்று 16ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டபோது, அரசியல் கட்சிகள் எதுவும் அவ்விடயம் தொடர்பில் நீதிமன்றை அணுகாதபோது நாகானந்த தனி மனிதனாக ஜனாதபதியின் செயற்பாட்டை நீதிமன்றில் கேள்விக்குட்படுத்தியிருந்தார்.
அவ்வேளையில் நீதிமன்றில் ஆஜராகிய சட்ட மா அதிபர் இந்நாட்டின் ஜனாதிபதியின் செயற்பாட்டை நீதிமன்றில் எவராலும் கேள்விக்குட்படுத்த முடியாது என நீதிமன்றுக்கு அறிவித்திருந்தார். சட்ட மா அதிபதிரின் அவ்வறிவித்தலை செய்தியாக்கிய ஊடகங்கள் சட்டத்தரணி நாகானந்த சட்ட மா அதிபரின் விளக்கத்தை மறுத்துரைத்த விடயத்தை கண்டுகொள்ளவில்லை.
அரசியல் யாப்பின் 19 வது திருத்தத்தின் பிரகாரம் ஜனாதிபதி உட்பட இந்நாட்டின் எந்தப் பிரஜையையும் நீதிமன்றுக்கு கொண்டுவரும் உரிமை இந்நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று மறுத்துரைத்ததுடன் வழக்கு விசாரணை செய்யப்படவேண்டும் என வாதிட்டிருந்தார். அவரின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் நாளை 12.11.2018 வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவித்திருந்தனர்-
பாராளுமன்று பிற்போடப்பட்டது தவறு என்ற வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ள நிலையிலேயே பாராளுமன்று கலைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்று கலைக்கப்பட்டது தவறு என நாளை மீண்டுமொரு வழக்கை தாக்கல்செய்யவுள்ளார் சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு.
இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில், அரசியல் யாப்பின் 19ம் திருத்தத்தின் பிரகாரம், ஜனாதபதி தான் விரும்புகின்ற நேரத்தில் பாராளுமன்றை கலைப்பதற்கு அவருக்கு எவ்வித அதிகாரங்களும் கிடையாது. 19 ன் பிரகாரம் நான்கரை வருடங்கள் செல்லும்வரை ஜனாதிபதியால் பாராளுமன்றை கலைக்க முடியாது. எனவே அவர்கள் தற்போது செய்துள்ளது, முற்றுமுழுதாக அரசியல்யாப்பை மீறும் செயலாகும்.
எனவே நாளை இது தொடர்பில் உச்ச நீதிமன்றுக்கு செல்கின்றேன். அத்துடன், வேட்பாளர் மனுக்களை பாரமெடுக்கும் செயல்களை சபாநாயகர் ஊடாக நிறுத்தி வைப்பதற்குரிய கட்டளை ஒன்றையும் நீதிமன்றிடமிருந்து பெற்றுக்கொள்ளவுள்ளேன்.
மேலும் நாட்டில் அரசியல் குழப்பம் ஒன்று ஏற்பட்டு அசமந்த நிலை ஏற்பட்டிருந்தபோது, சம்பிக்க ரணவக்க மற்றும் சுஜீவ சேரசிங்க போன்றோர் நீதிமன்றை விட மேன்மையான இடம் பாராளுமன்ற என்றும் இவ்வாறான விடயங்களுக்கு பாராளுமன்றுக்கு நாங்கள் போகமாட்டோம் என்றும் கூறியிருந்தார்கள்.
ஆனாலும் அவர்கள் அத்தனைபேரும் உச்ச நீதிமன்றுக்கு வந்து முழங்காலிடும் ஒரு நிலையை நான் உருவாக்குவேன். இந்நாட்டு மக்களின் இறைமையை பாதுகாக்கும் அரசியல் யாப்பினை எவரும் மீறுவதற்கு இடமளியேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment