Friday, November 23, 2018

பாராளுமன்றில் இன்று.

இன்று காலை பாராளுமன்ற கட்டத்தொகுதியில் ஆரம்பமான கட்சித் தலைவர்கள் ஒன்றுகூடலில் தேர்வுக்குழுவுக்கு உறுப்பினர்கள் தேர்வு செய்வது தொடர்பில் சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் பேசப்பட்டது.
ஆழும் கட்சியினர் தமக்கு பெரும்பாண்மை உறுப்பினர்கள் வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க, ஆழும் கட்சி ஒன்று இல்லை எனவும் புதிதாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் மற்றும் அமைச்சரவை தமக்கான பெரும்பாண்மையை இதுவரை பாராளுமன்றில் நிரூபிக்க வில்லை என ஐக்கிய தேசியக் கட்சி மறுப்பு தெரிவித்ததுடன், பெரும்பாண்மை உறுப்பினர்களை கொண்டுள்ள தமக்கே அதிக எண்ணிக்கையான உறுப்பினர்களுக்கான உரித்து வழங்கப்படவேண்டும் என்றது.

விடயத்தில் தீர்வு எட்டப்படாது முடிவடைந்தது கட்சித் தலைவர்கள் ஒன்றுகூடல். அத்துடன் இது தொடர்பாக பாராளுமன்றில் விவாதம் நடாத்தி வாக்கெடுப்புக்கு செல்வதென சபாநாயகர் அறிவித்தார்.

பாராளுமன்று கூடியது, இருதரப்பினரும் தமது தரப்பு நியாயங்களை முன்வைத்தனர்.

தினேஸ் குணவர்த்தன

ஆழும் கட்சிக்கு அதிக படியான உறுப்பினர்களை வழங்கும் பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைவாக எமக்கு 7 உறுப்புரிமைகள் வழங்கப்படவேண்டும். அரசியல் யாப்பின் பிரகாரம் எங்களுக்கு வழங்கப்படவேண்டிய உறுப்புரிமைகள் வழங்கப்படாமையை நாங்கள் நிராகரிக்கின்றோம். சபாநாயகராகிய நீங்கள் இங்கே கூட்டியிருப்பது ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றமே அன்றி நியாயமான பாராளுமன்று அல்ல என்பதை உங்களுக்கு தெரியப்படுத்துகின்றேன் என தெரிவித்தார் தினேஸ் குணவர்த்தன.

லக்ஸ்மன் கிரியல்ல

அரசியலமைப்புக்கு முரணாக மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டு ஒருமாத காலம் முடிவடையும் நிலையில் இன்னும் பாராளுமன்றில் அவர்கள் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் உள்ளனர் என்று தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல, அவ்வாறு தமக்கு பெரும்பான்மை இருக்கின்றது என நிரூபித்தால் தாம் அவர்களுக்கு இடம்விட்டு விலகியிருக்க தயாராக இருக்கின்றோம் என தெரிவித்தார்.

மேலும் பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறிய மஹிந்த ராஜபக்ஷ தரப்பினரை அரசாங்கமாக ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் பிரதமர் என ஒருவர் இல்லை எனவும் சபாநாயகர் ஏற்கனவே அறிவித்திருந்தீர்கள். அதன் அடிப்படையில் ஆட்சியில் இல்லாதவர்களுக்கு எவ்வாறு தெரிவுக்குழுவில் அதிக உறுப்பினர்களை வழங்க முடியும் என கேள்வி எழுப்பினார் லக்ஷ்மன் கிரியெல்ல.

டக்ளஸ் தேவானந்த


தெரிவுக்குழுவில் எனக்கும் ஒரு உறுப்புரிமை தேவையென ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளர் டக்ளஸ் தேவானந்த பாராளுமன்றில் கோரிக்கை விடுத்தார்.

நான் ஆளுங்கட்சியில் இருக்கின்றேனா அல்லது எதிர்க்கட்சியில் இருக்கின்றேனா என்பது எனது முடிவு.

ஆனால் நான் எனது கட்சியின் மூலமே நான் பாராளுமன்றத்திற்கு தெரிவானேன். அதன்படி எனது கட்சிக்கும் தெரிவுக்குழுவில் உறுப்புரிமை வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன் என வேண்டுதல் விடுத்தார் அவர்.

அனுரவும் விமலும் மோதல்.

தற்போது அராசாங்கம் என்று ஒன்று இல்லை, தெரிவுக் குழு குறித்து வாக்கெடுப்பை நடத்துங்கள் என மக்கள் விடுதலை முன்னணியின் அனுரகுமார திஸாநாயக்க மன்றில் வேண்டுகொள் விடுத்தபோது குறுக்கிட்ட அக்கட்சியிலிருந்து வெளியேறி தேசிய சுதந்திர முன்னணி என்ற கட்சியை அமைத்துள்ள விமல் வீரவன்ச பாரளுமன்றில் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று இதுவரை நிறைவேற்றப்படவில்லை என தெரிவித்தார்.

இந்நிலையில் ஆழும் எதிர்கட்சிகளுக்கு தலா 5 உறுப்பினர்களும், ஜேவிபி மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு ஒவ்வொரு உறுப்பினர்களும் வழங்கப்படும் என சபாநாயகர் அறிவித்தபோது, சபாநாயகரின் முன்மொழிவை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என ஆழும் கட்சி சார்பில் டினேஸ் குணவர்த்தன தெரிவித்தார். அதை தொடர்ந்து இலத்திரனியல் வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோது, ஆழும் தரப்பினர் வாக்கெடுப்பை பகிஸ்கரித்து வெளிநடப்பு செய்தனர்.

வாக்கெடுப்பில் சபாநாயகரின் முன்மொழிவுக்கு ஆதரவாக 121 வாக்குகளும் எதிராக 0 வாக்குகளும் பதிவானது. வாக்கெடுப்பின்போது காமினி ஜெயவிக்கரம பெரேரா, லக்ஸ்மன் கிரியல்ல, இரா சம்பந்தன் , கபீர் ஹசீம் ஆகிய நால்வரது இலத்திரனியல் கருவிகள் செயற்படாமையால் அவர்கள் நால்வரும் பெயர் அழைக்கப்பட்டு வாக்களித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் :

லக்ஸ்மன் கிரியல்
ரவூப் ஹக்கீம்
ரிசார்ட் பதுயுதீன்
பாட்டலி சம்பிக்க ரணவக்க

ஆழும் கட்சியின் சார்பில் :

டினேஸ் குணவர்த்தன
எஸ்.பி திஸாநாயக
மஹிந்த சமரசிங்க
நிமால் சிறிபால டி சில்வா
விமல் வீரவன்ச


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில்:

மாவை சேனாதிராஜா

ஜேவிபி சார்பில்:

விஜித ஹேரத்

ஆகியோர் பாராளுமன்ற தெரிவிக்குழுவின் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

முடிவில் பாராளுமன்று எதிர்வரும் 27ம் திகதி மீண்டும் கூடும் என அறிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment