Thursday, November 29, 2018

கரைச்சி பிரதேச சபையில் அமளிதுமளி. களவு பிடிபட்டதால் பாதுகாப்புக்கு பொலிஸை அழைத்த வேழமாலிகிதன்.

உரிய கேள்வி கோரல் விடுக்காமல், லஞ்சம் வாங்கிக்கொண்டு கடை ஒன்றை குத்தகைக்கு கொடுத்தமை தொடர்பில் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் நேற்று (28.11.2018) பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

நேற்று சபையில் ஆதனவரி தொடர்பான உரையாடல் இடம்பெற்றது. அதன்போது எதிர்கட்சி உறுப்பினர் ஒருவர், பசுமை பூங்கா பிரதேசத்தில் உரிய முறையில் கேள்வி கோரல் விடுக்காமல், மக்களுக்கு அது தொடர்பில் தெரியப்படுத்தாமல், அனைவருக்கும் கேள்வி பத்திரத்தை சமர்பிக்கும் சந்தர்ப்பத்தை மறுத்து, உரிய நடைமுறைகள் பின்பற்றாமல் நபர் ஒருவருக்கு கடையொன்று வழங்கப்பட்டிருப்பது தொடர்பில் கேள்வி எழுப்பினார்.

அதன்போது குறுக்கிட்ட தவிசாளரான சிறிதரனின் சகா வேழமாலிகிதன், பதில் தரமுடியாது என மறுத்துரைத்தபோது, உறுப்பினர்கள் தவிசாளரின் நடவடிக்கையை எதிர்த்து வாதிட்டனர். உறுப்பினர்களுக்கு பதில் கொடுக்க முடியாத வேழமாலிகிதன், இளங்கோ என்ற உறுப்பினரை சபையிலிருந்து வெளியேற்ற முற்பட்டபோது அவர் அங்கிருந்து வெளியேற மறுத்துவிட பொலிஸாரை அழைத்துள்ளார் வேழமாலிகிதன்.

வேழமாலிகிதனின் அழைப்பில் சபைக்கு வந்த பொலிஸாருக்கு எதிர்கட்சி உறுப்பினர்கள் பெரும் எதிர்ப்பை காட்டியதை தொடர்ந்து அவர்கள் சபையினுள் நுழைவதை தவிர்த்து பார்வையாளர்கள் பகுதியிலிருந்து சபை நடவடிக்கைகளை அவதானித்துள்ளனர்.

கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரின் நெருங்கிய சகாவாவார் என்பதும் இவர் மீது பல்வேறுபட்ட மோசடிக்குற்றச்சாட்டுக்களும் பாலியல்குற்றச்சாட்டுக்களும் சமூக வலைத்தளங்களில் உலாவருவது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.




0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com