வெளிநாடுகளின் தலையீடு இலங்கையில் அதிகரிக்குமாயின் ஆயுதம் தூக்குவாராம் அருண் தம்பிமுத்து.
இலங்கையில் நிலவுகின்ற அரசியல் அசமந்த போக்கினை சாட்டாக வைத்து வெளிநாட்டுசக்திகள் உள்நாட்டில் விவகாரங்களில் தலைநுழைக்க முற்படுவார்களாயின் அவர்களுக்கு எதிராக ஆயுதம் தூக்கவும் தயங்கமாட்டேன் எனத் தெரிவித்துள்ளார் அருண் தம்பிமுத்து.
கடந்த 15ம் திகதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பாராளுமன்றில் மேற்கொண்ட உரையை அடுத்து தனது முகப்புத்தகத்தில் பதிவொன்றை மேற்கொண்ட அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அத்துடன் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:
பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்ச அவர்கள் இன்று (15.11.2018) பாராளுமன்றில் நிகழ்த்திய உரை, நான் ஏன் அவருடன் எட்டுவருடங்களுக்கு முன்னர் இணைந்து கொண்டேன் என்பதை நினைவூட்டியுள்ளது. அத்துடன் கரு ஜெயசூரிய அவர்களினால் அவர்களது கட்சியில் இணைந்து கொள்ளுமாறு விடுக்கப்பட்ட வேண்டுதலை நான் கணக்கிலெடுக்காதது பற்றியும் பெரு மகிழ்சியடைகின்றேன்.
இந்நாட்டின் இறைமையை விட எனக்கு மேலானது எதுவும் கிடையாது. ஜனநாயகம், மனித உரிமைகள், நல்லாட்சி, வெளிநாட்டு உறவு அல்லது வேறு ஏதாவது காரணங்களின் போர்வையில் எமது தேசிய நலனை அடகு வைப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
கரு ஜெயசூரிய அவர்கள் வெளிநாட்டு நபர்களை பாரளுமன்றில் உள்நாட்டு விடயங்களை அவதானிக்க அனுமதித்த விடயத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்னைப்பொறுத்தவரை மேற்குலகின் ராஜதந்திரிகளை கண்காணிப்பாளர்களாக அல்லது மேற்பார்வையாளர்களாக வைத்துக்கொள்வது என்பது இந்நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு விரோமானதாகும். இது தொடர்பில் மேலும் நான் விரிவாக சொல்வதாயின், இந்நாட்டின் மீது நான் கொண்டுள்ள பெருமதிப்புக்கு, கரு ஜெயசூரியவின் நவகாலனித்துவ செயற்பாடு அவமானத்தை தேடித்தந்துள்ளது.
உங்களில் சிலர் என்னை ஓர் தேசியவாதி அல்லது வெளிநாட்டினருக்கு எதிரானவன் என்று அழைக்கலாம். ஆனால் இந்த நாடு வெளிநாட்டு சக்திகளின் அச்சுறுத்தலை எதிர்நோக்குமானால், அது எந்த பலம்வாய்ந்த சக்தியாக இருந்தாலும், அவர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்த தயங்கமாட்டேன் என்பதை உங்களுக்கு காட்டுவேன்.
நான் என்றும் உங்களுக்கு கூறுகின்ற மாதிரி எனக்கு ஒரு தாயும் ஒரு தாய்நாடும் மாத்திரமே உண்டு என்று குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment