Saturday, November 3, 2018

வாள்வெட்டு வன்முறைகளை பொலிஸாரே ஊக்குவிக்கின்றனராம் . யாழ் நீதிமன்றில் சட்டத்தரணி

சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்து „தாங்களே வாள் ஒன்றை வைத்துவிட்டு அவரிடம் மீட்டதாக நீதிமன்றில் முற்படுத்துகின்றனர்" என யாழ். நீதிவான் நீதிமன்றில் எடுத்துத்துரைத்துள்ளார் சட்டத்தரணி மேனகா ஜீவதர்ஷன்.

யாழ்ப்பாணம் - கொக்குவில் ரயில் நிலையத்துக்கு அருகில் முச்சக்கர வண்டியில் ஆபத்தான வாள் ஒன்றை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மானிப்பாயைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞன், நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டபோதே சட்டத்தரணி மேற்படி வாதத்தை முன்வைத்துள்ளார்.

முச்சக்கர வண்டி சாரதியான சந்தேகநபர் இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோது, அவரிடமிருந்து கைப்பற்பட்டதான வாள் ஒன்றையும் பொலிஸார் மன்றில் சான்றுப் பொருளாகச் சமர்ப்பித்தனர்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வன்முறைகளை பொலிஸாரே ஊக்குவிக்கின்றனர்' என்றும் தனது கட்சிக்காரருக்கு பிணை வழங்கவேண்டும் என்றும் சட்டத்தரணி மேனகா ஜீவதர்ஷன் மன்றில் கோரிக்கை விடுத்தார்.

சட்டத்தரணியின் சமர்பணத்தை மறுத்துரைத்த பொலிஸார் :

சந்தேகநபரிடமிருந்து கைபேசி ஒன்றை கைப்பற்றினோம். அதில் அவர் பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையில் வீதிச் சுற்றுக்காவலில் ஈடுபடும் இடங்களின் ஒளிப்படங்கள் இருந்தன.

சந்தேகநபர், மானிப்பாய் பகுதியில் எடுத்த அந்தப் படங்களை, வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு அனுப்பி பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் சோதனையில் ஈடுபடும் இடங்கள் தொடர்பில் அவர்களுக்கு தகவல் வழங்கியுள்ளார் என்று நீதிபதிக்கு எடுத்துரைத்தனர்.

இருதரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன், சந்தேகநபரை வரும் 5ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இதேவேளை, சந்தேகநபரால் முச்சக்கர வண்டியில் ஏற்றிவந்து இறக்கிய இருவர், விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர் அவர்கள் மன்றில் முற்படுத்தப்படுவார்கள் என்றும் பொலிஸார் மன்றுக்கு அறிவித்தனர்.

இலங்கையில் சட்டத்தரணிகள் தொடர்சியாக குற்றவாளிகளுக்கு ஒத்தாசை வழங்கி வருகின்றனர் என்பது வரலாறு. அவர்கள் பாரிய குற்றங்களை புரிந்தவர்களைகூட சட்டத்தின் ஓட்டைகளுடாக வெளியே கொண்டு வருகின்றனர் என்பதும் சட்டத்தரணிகளுக்கு பணமே பிரதானமானது என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com