பிரதமர் காரியாலயத்திற்கான நிதியை நிறுத்தும் பிரேரணை நிறைவேறியது.
பிரதமர் செயலகத்துக்கான நிதியை இடைநிறுத்தும் பிரேரணை இன்று முற்பகல் ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதன்மீதான விவாதத்தின் முடிவில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் 123 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர். எந்தவொரு வாக்குகளும் எதிராக அளிக்கப்படவில்லை.
ஆழும் கட்சியினர் பாராளுமன்றை பகிஸ்கரித்துவரும் அதேநேரம் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அரச தரப்புக்கு தாவிய அமைச்சர் விஜயதாச ராஜபக்சவும், ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து விலகி சுதந்திரமான உறுப்பினராக செயற்பட்ட அத்துரலிய ரத்தன தேரரும், இன்றைய நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்றனர். இவர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
அதேவேளை, மகிந்த தரப்புக்கு தாவி அமைச்சர் பதவியை பெற்றுக் கொண்டபின், மீண்டும் ஐக்கிய தேசிய கட்சிக்கு திரும்பி வந்த வசந்த சேனநாயக்க, இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தார்.
பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றிய ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, அரசியலமைப்பிற்கு முரணான வகையில், பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச, பிரதமர் செயலகத்தையும், அரசாங்க வளங்களையும் தவறாக பயன்படுத்தி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
மகிந்த ராஜபக்ச, பிரதமராக பதவியேற்ற பின்னர், கடந்த காலத்தில், உள்நாட்டில் உலங்குவானூர்திகளில் மேற்கொண்ட பயணங்களுக்காக, 800 மில்லியன் ரூபாவை செல்லவிட்டிருப்பதாகவும், அவர் தகவல் வெளியிட்டார்.
இந்தநிலையில், சட்டவிரோதமாக பிரதமர் பதவியில் அமர்ந்துள்ள, மகிந்த ராஜபக்சவின் பிரதமர் செயலகத்துக்கான நிதி ஒதுக்கீடு இடைநிறுத்துவது முக்கியமானது என்றும் அவர் கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment