Wednesday, November 28, 2018

என்னை கொல்லப்போறார்கள்! பொலிஸ் பாதுகாப்பு தாங்கோ! விக்கி ஜனாதிபதியிடம் மன்றாடிக் கடிதம்.

ராஜபக்ச குடும்பத்தினரை கொலை செய்ய முயற்சி செய்த அதே பிரதி பொலிஸ் மா அதிபரே தன்னையும் கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் வாபஸ் பெற்றுக்கொண்டுள்ள பொலிஸ் பாதுகாப்பை மீண்டும் தருமாறு வேண்டியும் ஜனாதிபதி மைத்திரிபால விற்கு கடிதம் எழுதியுள்ளார் முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன்.

அவர் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தின் தமிழ் வடிவம் என கீழே குறிப்பிடப்பட்டுள்ள பகுதி ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள அக்கடிதத்தில் மேலதிகமாக என்ன எழுதப்பட்டிருக்கும் என்பது சந்தேகத்திற்கு இடமாகவே உள்ளது.

மஹிந்த குடும்பத்தினரை கொல்ல முயற்சி செய்பவர்கள் விக்கினேஸ்வரனையும் சேர்த்து கொலை செய்ய முயற்சிக்கின்றார்கள் என்றால் ராஜபக்ச குடும்பத்தினருக்கும் விக்கினேஸ்வரனுக்குமிடையேயான தொடர்பு என்ன என்பதே இங்கு எழுப்படவேண்டிய கேள்வியாகும்.

இது தொடர்பான புலனாய்வுகளை இலங்கைநெட் மேற்கொண்டு மக்களுக்கு தெரியப்படுத்தும் என்பதனை தெரிவித்துக்கொள்கின்றோம்.



மேன்மை தங்கிய மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு
ஜனாதிபதி
ஜனாதிபதிசெயலகம்
காலிமுகத்திடல்
கொழும்பு– 01 28.11.2018

மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களுக்கு!

வடமாகாண முதலமைச்சராக என்னுடைய பதவிக்காலம் முடிந்ததன் பின்னர் என்னுடைய பிரத்தியேக பொலிஸ் பாதுகாப்பு அலுவலர்கள் தொடர்ந்து எனக்கு பாதுகாப்பு வழங்கி வந்துள்ளனர்.

சில காலங்களுக்கு முன்னர் என்னுடைய உயிருக்கு ஆபத்து என்பது சம்பந்தமாக பொலிஸ்மா அதிபருக்கும் சிரேஸ்ட உப பொலிஸ்மா அதிபருக்கும் தெரிவித்திருந்தேன். அது சம்பந்தமான செய்திகளை எமக்கு வழங்கியவர் அம்பலாங்கொடையைச் சேர்ந்த டிசில்வா என்பவர். நீங்கள் யாழ்ப்பாணம் வந்தபோது உங்களுக்கும் தனிப்பட்ட ரீதியில் இதுபற்றித் தெரிவித்திருந்தேன். இதில் சந்தேகத்திற்குரியவராகக் கணிக்கப்பட்டவர் தற்போது கைது பண்ணப்பட்டிருக்கும் உப பொலிஸ் அதிபர் நாலக டி சில்வா என்பவர்.

மேற்படி உயிராபத்து சம்பந்தமாக பொலிஸ்மா அதிபரும், சிரேஸ்ட உப பொலிஸ்மா அதிபரும் தெரிந்து வைத்துக் கொண்டிருந்த காரணத்தினால் அவர்களுக்கு இது பற்றி எழுத்தில் தெரிவிக்குமாறு கோரியிருந்தார்கள். இது என்னால் செய்யப்பட்டது. குறித்த கடிதத்தின் பிரதி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. என்னுடைய வாசஸ்தலத்திற்குரிய பாதுகாப்பு கைவாங்கப்பட்டதெனினும் என்னுடைய தனிப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு இற்றைவரையில் தொடர்ந்து வந்துள்ளது.

இன்று காலை யாழ் பொலிஸ் தலைமையக மேற்பார்வையாளர் என்னுடைய பொலிஸ் பாதுகாப்பு அலுவலர்களை உடனே யாழ் பொலிஸ் நிலையத்தில் வந்து கையெழுத்திடுமாறு கோரியிருந்தார்.

நான் தற்போது கொழும்பில் என்னுடைய பாதுகாப்பு அலுவலர்களுடன் தங்கியிருக்கின்றேன். எனினும் இரு அலுவலர்கள் இன்று காலை யாழ் பொலிஸ் நிலையத்தில் கையெழுத்திட்டுள்ளார்கள்.

பொலிஸ்மா அதிபருக்கு அறிகையிடப்பட்ட என்னுடைய உயிராபத்திற்கான காரணங்களை முன்வைத்து என்னுடைய தனிப்பட்ட பொலிஸ் பாதுகாப்பை அனுமதிக்குமாறு மேன்மைதங்கிய உங்களிடம் தயவாகக் கேட்டுக் கொள்கின்றேன். கிழக்கு மாகாண முன்னைய முதலமைச்சர் அவர்களுக்கு தற்போதும் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாகஅறிகின்றேன்.
நன்றி
இப்படிக்கு

நீதியரசர்.க.வி.விக்னேஸ்வரன்
முன்னாள் முதலமைச்சர்
வடமாகாணம்

பிரதி –
1. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்
2. பொலிஸ்மா அதிபர்
3. சிரேஸ்ட உப பொலிஸ்மா அதிபர், வடமாகாணம்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com