Friday, November 16, 2018

ஜனநாயகம் நாடாளுமன்றில் தலைவிரிக்கோலமாய்!

தற்போதைய சூழ்நிலையில் நாட்டின் தேவை தான் என்ன? என்பது தொடர்பாக அரசியல் தலைமைகள் சிந்திக்கின்றனவா? என்ற கேள்வி எம் எல்லோர் மனதிலும் எழுந்துள்ளது. மக்களாட்சியை நிலை நிறுத்துவதற்கு போராடுவதாக அனைவரும் ஊடகங்களுக்கு கருத்துக்களை அள்ளி விடுகின்றனர். ஆனால் இன்றை பாராளுமன்ற சூழ்நிலையானது ஜனநாயகத்தை நிலை நாட்ட போராடுபவர்களின் உண்மையான நிலையினை வெளிப்படுத்தியது. ஜனநாயகம் நாடாளுமன்றத்தில் தலைவிரிக்கோலமாய் நிற்பதை மக்கள் அனைவரும் கண்டனர்.

அந்நியர் ஆட்சியின் போது மாபெரும் தலைவர்கள் நாட்டின் விடுதலைக்கு ஒன்றாக கரம் கோர்த்து போராடினர். தாய் நாட்டின் சுதந்திரத்திற்காக இரத்தம் சிந்தி போராடினர். ஆனால் இன்று மக்கள் பிரதிநிகள் என கூறிக்கொள்ளும் அரசியல் பிரமுகர்கள் நாட்டின் இறைமை காக்கும் நாடாளுமன்றத்தில் கலவரத்தை ஏற்படுத்தி இரத்தம் சிந்தி அதையும் பெரும் தன்மையுடன் கூறிக் கொள்கின்றனர்.

நிலையில்லாத கட்சி கொள்கையினை உடைய இவர்கள் சுயநலத்திற்காகவும் பதவி மோகத்தின் காரணமாகவும் துர் வார்த்தைகளை பேசிக்கொண்டு மக்களை ஏமாற்றும் இவர்களுக்கு தேர்தல் ஒன்று தேவை தானா? என்ற சிந்தனை எமக்கு வேண்டும்.

அதிகாரபோட்டிக்காக ஐந்தறிவு படைத்த ஆட்டு மந்தைகளைப் போல பாராளுமன்றத்தில் முட்டி மோதி திரியும் இவர்களுக்கு அரசாங்கத்தை பொறுப்பளித்தால் என்ன? நடக்கும். நாளைய தலைமுறைக்கு அறிவற்ற அரசியல் தலைமைகளின் வழிநடத்தல் தேவை தானா?

இன்றைய நாட்டிக்கு ஊழல் அற்ற ஜனநாயகத்தை காக்கும் அரசியல் தலைவர்கள் வேண்டும். மக்களை சிந்திக்கும் மக்களின் நலன்களில் அக்கறை செலுத்தும் தலைவர்கள் தேவை.

அன்று தொடக்கம் இன்று வரை அபிவிருத்தியில் பின் தங்கியுள்ளோம். கழுகுகள் போல எம்மையே நோட்டமிட்டு கொண்டிருக்க சர்வதேசத்தின் பசிக்கு தீனி போட்டு கொண்டிருக்கின்றோம்.

இதற்காகவா மக்களாகிய நாம் எவ்வாறு எமது பிரதிநிதிகளை தேர்வு செய்கின்றோம் என்று மறு பரிசீலனை செய்கின்றோமா? இல்லை. நாங்கள் பழக்கப்பட்டுவிட்டோம், இந்த மந்தைகளை மீண்டும் மீண்டும் எங்களை மேய்க்கவிட்டு நாம் பழக்கப்பட்டு விட்டோம்.

எதிர்காலத்திலாவது நாங்கள் மேய்க்கக்கூடிய மந்தைகளை அனுப்புவோமா பாராளுமன்றுக்கு?


No comments:

Post a Comment