Sunday, November 4, 2018

மனித உரிமைகள் என்பது மேற்குலகின் மிரட்டும் ஆயுதமாக மாறியுள்ளது. நாலக்க தேரர்.

மேற்குலகின் பலம்வாய்ந்த நாடுகள் தங்களுக்கு கட்டுப்படாத நாடுகளை கட்டிப்போடுவற்காகவும் மிரட்டி அடிபணிய வைக்கவும் மனித உரிமைகள் என்ற விடயத்தை ஆயுதமாக கொண்டுள்ளனர் என பெங்கமுவ நாலக தேரர் கூறியுள்ளார்.

நாட்டில் இடம்பெற்றுள்ள அசமந்த நிலைதொடர்பாக விளக்கும் பொருட்டு உலக இலங்கையர் பேரவையினரால் மேற்கொள்ளப்பட்ட ஊடக சந்திப்பின்போது மேற்கண்டவாறு கூறிய அவர் தொடர்ந்து பேசுகையில்:

பலர் இங்கு நடைபெற்றிருக்கின்ற மாற்றம் அரசியல்யாப்பிற்கு முரணானது, ஜனநாயக விரோதமானது என்று பேசுகின்றனர், ஆனால் மேற்குலகின் முகவரான ரணில் விக்கரசிங்கவை நீக்கவேண்டும் என்பதற்காகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் இவ்வாறான முடிவொன்றை எடுத்துள்ளார் என்பதை மக்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.

இந்நாட்டிலே 2015ம் ஆண்டு ஏற்பட்டது வெளிநாட்டு சூழ்சியிலாலான ஆட்சிக்கவிழ்ப்பு. அதற்காக அமெரிக்கா பெரும்தொகையான பணத்தை செலவிட்டது. அவ்வாறானதோர் ஆட்சிக்கவிழ்ப்பு கடந்த 26ம் திகதி இடம்பெற்றுள்ளது, ஆனால் அது வேறுவிதமான நடந்தேறியுள்ளது. இவ்வாட்சிக்கவிழ்பு நாட்டை நேசிக்கின்றவர்களால் மேற்கொள்ளப்பட்டது.

தற்போது, பாராளுமன்றை கூட்டு என அமெரிக்க ராஜங்க செயலர் அரசாங்கத்தை கேட்கின்றார். அமெரிக்க ராஜாங்க செயலருக்கு இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதற்கு உள்ள அதிகாரம் யாது? இவ்விடயத்தில் நாங்கள் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். பிறேமதாஸ அவர்கள் இந்நாட்டில் ஜனாதிபதியாக இருந்தபோது கடும் நடவடிக்கைகளை எடுத்தார். தேர்தல் ஒன்று நடைபெற்றபோது, தேர்தல் நிலையம் ஒன்றுக்கு செல்ல முயன்ற பிரித்தானிய தூதரக அதிகாரி ஒருவரை அவர் நாட்டை விட்டு வெளியேற்றினார் என்பதை நான் இங்கு ஞாபகமூட்டுகின்றேன்.

வெளிநாட்டு சக்திகள் இந்நாடு பொருளாதார ரீதியில் முன்னேறுவதை விரும்பவில்லை. அவர்கள் எல்ரீரீயினர் அழித்தொழிக்கப்படுவதையும் விரும்பவில்லை. புலிகளை மஹிந்த ராஜபக்க அவர்கள் அழித்தொழிக்கும் வேலையில் இறங்கியிருந்தபோது, சர்வதேசம் அவர் மீது அழுத்தங்களை பிரயோகித்தது, ஆனாலும் மஹிந்த அவர்களை கணக்கிலெடுக்காது தான் நினைத்ததை செய்து முடித்தார். மஹிந்தவிடம் சில குறைபாடுகள் காணப்பட்டாலும்; மக்கள் அவர் இந்நாட்டுக்கு செய்த சேவைக்காக நன்றியுடையவர்களாக உள்ளனர். கடந்த தேர்தலில் அவரை தோற்கடிக்க வாக்களித்த மக்கள் இன்று வருந்துவதை நாம் காண்கின்றோம்.

அம்மக்கள் ரணில் விக்கரமசிங்க தூக்கியெறியப்பட்டுள்ளதையிட்டு பெரிதும் சந்தோஷமடைகின்றனர். பிரபாகரன் இறந்த செய்திகேட்டு இந்நாட்டு மக்கள் சந்தோஷமடைந்ததைவிட ரணில் தூக்கியெறியப்பட்டதையிட்டு சந்தோஷமடைகின்றனர் என மேலும் தெரிவித்தார்.

தொடர்ந்து அதே ஊடகசந்திப்பில் பேசிய உலக இலங்கையர் பேரவையில் இணைப்பாளர்களில் ஒருவரான ஷாமேந்திர விக்ரமாராச்சி பேசுகையில் : :

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களை ஒன்றிணைத்து உலக இலங்கையர் பேரவை திரு சுனில் சந்திரகுமார அவர்களின் தலைமையில் கீழ் நாட்டின் இறையாண்மை , ஒருமைப்பாடு நாட்டுக்காக பாடுபட்ட படைவீரர்களின் பாதுகாப்பு அவர்களின் கௌரவத்தை பாதுகாத்தல் என்ற கடமைகளை பாதுகாத்தல் என்ற நோக்கங்களை கொண்டு இயங்கி வருகின்றது.

2014ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்டஆட்சிமாற்றமானது உள்நாட்டு, வெளிநாட்டு சக்கிகளால் மேற்கொள்ளப்பட்ட சதியாகும். அதிகார மாற்றத்துக்கு பின்னால் இருந்த குறித்த சக்திகளுக்கு எதிராக ஒன்றுணைவதன் நோக்கத்தை நாம் நன்கு உணர்ந்திருக்கின்றோம்.

அவர்கள் ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக 30ஃ1 என்ற தீர்மானத்தை கொண்டுவந்துள்ளார்கள். அத்தீர்மானத்தை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால் இந்த நாட்டை நேசிக்கின்ற பல்வேறு தேசங்களிலும் வாழுகின்ற மக்கள் இத்தீர்மானத்திற்கு எதிராக எம்முடன் இணைந்துள்ளதுடன் அத்தீர்மானத்தை நாம் ஐ.நா வில் சவாலுக்கு உட்படுத்தியிருக்கின்றோம்.

அரசியல், சமூக, பொருளாதார நிலவரங்கள் மோசமான நிலைக்கு சென்றுள்ள இந்நிலையில், இந்நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில், வெளிநாடுகள் தலையிடுகின்றார்கள். சர்வதேச நாடுகளின் அதிகார கரங்களுக்குள் இந்த நாடு அகப்பட்டுள்ளது.

இதற்கான காரணம் கடந்த மூன்றரை வருடங்களாக ஆண்டவர்கள் நடந்து கொண்ட விதம் என்பது யாவரும் அறிந்தது. அவர்கள் பௌத்த மதத்தை நிந்தித்தார்கள், தேரர்களை சிறையிலடைத்தார்கள், மகா சங்கத்தினரை கோபத்திற்கு ஆளாக்கினார்கள். ஆட்சியாளர்களுக்கு நாம் ஒரு இறையாண்மையுள்ள நாடு என்பது மறந்திருந்தது. அவர்கள் வெளி சக்திகளின் ஏவலாளிகளாகவே செயற்பட்டனர்.

நாட்டு மக்கள் இந்த ஆபத்துக்களை சரியாக புதிந்து கொண்டு இச்செயற்பாடுகளுக்கு எதிராக எழுந்துவரவேண்டும். நாங்கள் நன்றியுள்ள சமூகமாக இருக்கவேண்டும். இந்நாட்டில் கொடிய யுத்தம் ஒன்று இடம்பெற்றது. அந்த யுத்தத்தை எமது படையினர் முடிவுக்கு கொண்டுவந்து, இன்றும் நாம் இவ்விடத்தில் சுதந்திரமாக பேசும் நிலையை உருவாக்கி தந்துள்ளனர். ஆனால் அவர்களது நிலைமை ஜெனிவாவில் மோசமாக உள்ளது. புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் பல ஒன்றிணைந்து எமது படையினருக்கு எதிராக செயற்பட்டு வருகின்றனர். நாம் அவர்களுக்காக வரும் மார்ச் மாதத்திலும் ஜெனிவாவில் பிரசன்னமாகி இருப்போம். அப்போது முடிந்தவர்கள் எம்முடன் இணைந்து கொள்ளவேண்டும். குறிப்பாக ஊடகவியலாளர்கள் அவற்றினை அவதானித்து மக்களுக்கு நிலைமையை தெரியப்படுத்த வேண்டும்.

உலக இலங்கையர் பேரவையினராகிய எமக்கு எவ்வித கட்சி அரசியல் நோக்கங்களும் கிடையாது. நாங்கள் இந்நாட்டிற்கு ஏற்பட்டுள்ள சகல விதமான அனர்த்தங்களுக்கும் எதிராக போரிடுவதே எமது நோக்கமாகும். எம்மிடம் ஜாதி, மத, பேதம் கிடையாது. நாம் இலங்கையர்களாக ஒன்றிணைந்துள்ளோம்.

நாம் இந்நாட்டின் மக்கள் யாவரையும் இலங்கையர்கள் என மதிக்கின்ற, நாட்டை முன்னேற்ற விரும்புகின்ற ஒரு தலைமைக்கு கட்சி பேதங்களன்றி என்றும் உறுதுணையாக இருப்போம்.

எனவே இந்நாட்டில் நாம் கௌரவத்துடன் வாழ்ந்து நாட்டை முன்னேற்ற எம்முடன் பலரும் இணையவேண்டும் என உலக இலங்கையர் பேரவையினராகிய நாம் மீண்டும் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment