இன்று இலங்கையின் கழுதைகள் மன்றில் என்ன நடந்தது?
பிற்பகல் 2.20 மணிக்கு பாராளுமன்று ஆரம்பமானது. பாராளுமன்றை இன்று முன்னெடுப்பதில் இருக்கக்கூடிய இடர்களை அறிந்திருந்த சபாநாயகர் சுமார் 50க்கும் மேற்பட்ட பொலிஸாரின் சங்கிலிவடிவிலான பாதுகாப்புடன் ஆசனத்தை நோக்கி நகர்ந்தார்.
மஹிந்த – மைத்திரி தரப்பினர் பொலிஸார் மீது தாக்குதல்களை மேற்கொண்டு சபாநாயகரை ஆசனத்திற்கு செல்லவிடாது தடுத்து நிறுத்தினர். கதிரைகள் , தடிப்பான புத்தகங்கள் கொண்டு தாக்கியதுடன் மிளகாய்த்தூள் கலந்த தண்ணீர்ப்போத்தல்களை வீசியும் தாக்கினர்.
சபாநாயகரின் ஆசனத்தை கைப்பற்றிய மஹிந்த தரப்பினர் சபாநாயகரின் ஆசனத்தில் அமர்ந்து கொண்டதுடன் கூச்சல் இட்டனர். சபாநாயகரின் ஒலிவாங்கி உட்பட்ட இலத்திரனியல் தொடர்புகள் யாவற்றையும் துண்டித்தனர்.
இவ்வாறானதோர் குழப்பநிலை எதிர்பார்க்கப்பட்டதாகவே இருந்ததனால், கிடைத்த ஆசனம் ஒன்றில் அமர்ந்து கொண்ட சபாநாயகர், திருத்தியமைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பை அவ்விடத்திலிருந்தே மேற்கொண்டார். அதற்கு ஏதுவாக அவரிடமிருந்த ஒலிவாங்கி செயற்பட்டது. கன்சாட் பதிவானது. குறிப்பிடவேண்டிய விடயம் யாதெனில், வாக்கெடுப்பு இடம்பெறும்போது செங்கோல் அவரருகிலேயே இருந்தது. பாராளுமன்று எதிர்வரும் 19 ம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.
பாராளுமன்றில் மஹிந்தவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டது தொடர்பில் ஜனாதிபதிக்கு சபாநாயகரால் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம், தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எந்தவொரு காரணத்திற்காகவும் அவர் பாராளுமன்றை பிற்போடப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment