Sunday, November 18, 2018

ஜனாதிபதியை ஜேவிபி சந்திக்க மறுத்ததற்கான ஐந்து காரணங்கள் கடிதம் ஊடாக.

இன்று ஜனாதிபதி சகல கட்சிகள் தலைவர்களையும் சந்திப்பதற்கு அழைப்பு விடுத்திருந்தார். அவ்வழைப்பை நிராகரித்து அவரை சந்திப்பதை மக்கள் விடுதலை முன்னணியினர் தவிர்த்திருந்தனர்.

அவர்கள் ஜனாதிபதியை சந்திக்க மறுத்ததற்கான ஐந்து காரணங்களை குறிப்பிட்டு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். அக்கடிதத்தில் நாட்டில் ஏற்பட்டுள்ள அசமந்த நிலைக்கு ஜனாதிபதியே பொறுப்புக்கூறவேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

ஜனாதிபதி,
இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசு,
ஜனாதிபதி அலுவலகம்,
கொழும்பு 01.

ஜனாதிபதி அவர்களே,

பாராளுமன்றத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பில் விஷேட கலந்துரையாடலுக்கு வரும்படி விடுத்த அழைப்பு தொடர்பில்...

உங்களின் செயலாளரினால், அனுப்பப்பட்ட 2018.11.17 ஆம் திகதிய கடிதத்தில் உங்களுடன் பேச்சுவார்த்தைக்கு வரும்படி எங்களின் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் அந்த அழைப்பினை ஏற்றுக்கொள்வதற்கு முன்னர் கீழ்காணும் விடயங்களை உங்களின் கவனத்திற்குக் கொண்டுவருகின்றோம்.

உங்களின் கலந்துரையாடலின் நோக்கமாக அமைந்திருப்பது பாராளுமன்றத்தில் தற்போதைய நிலைமைகளாகும். ஆனால், எங்களின் முடிவு என்னவெனில் பாராளுமன்றத்தில் தோன்றியுள்ள நிலைமையானது உங்களின் சதிகார அரசியல் தேவைக்காக உருவாக்கிய நடவடிக்கை காரணமாக நாட்டில் தோன்றியுள்ள ஸ்திரமற்ற நிலையைப் பிரதிபலிப்பதாகும். தற்போது நாட்டில் பாரிய அராஜக, ஸ்திரமற்ற நிலைகள் தோன்றியுள்ளன. ஏழு தசாப்தத்திற்கு பின்னர் இலங்கை அரசியலில் இவ்வாறான நிலையற்றத் தன்மை இவ்வளவு காலம் நீடித்திருப்பது இதுவே முதற்தடவையாகும். இது வெறுமனே தன்னிச்சையாக தோன்றிய ஒன்றல்ல பிரதானமாக ஐந்து சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒன்றாகும்.

01. கடந்த அக்டேபர் 26 ஆம் திகதி உங்களால் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரைச் சூழ்ச்சிகரமான முறையில் பிரதமர் பதவிக்கு நியமித்தமை மற்றும் பல சந்தாபப்ங்களில் கேலிக்கிடமான முறையில் ‘கெபினட்’ அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களை நியமித்தமை.

02. பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லையென அம்பலமாவதைத் தடுக்கும் நோக்கமாகக் கொண்டு பாராளுமன்றத்தின் அமர்வுகளை முடிவுக்கு கொண்டு வந்தமை.

03. மக்களின் இறைமையை தலைகீழாக்குகின்ற கேடுகெட்ட நடவடிக்கையாக பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டமை.

04. அந்த ஏல விற்பனை நடவடிக்கை தோல்வியுற்றதன் பின்னர் பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு நடவடிக்கை எடுத்தமை.

05. சதி சூழ்ச்சியின் மூலமாக அமைக்கப்பட்ட பிரதமருக்கும் அரசாங்கத்திற்கு எதிராக பாராளுமன்றத்தில் இரண்டு சந்தர்ப்பங்களில் முறையான வழியில் நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டிருந்த போதிலும் அதற்கு ஏற்ற முறையில் நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக உங்களின் சதிகார அரசியல் தேவைக்காக காலத்தை நீடித்தமை.

இந்த ஐந்தம்ச நடவடிக்கையில் உங்களின் முதன்மையான பங்களிப்பினை ஒருபோதும் மறைக்க முடியாத அளவுக்கு மக்கள் மத்தியில் திரை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு உங்களால் விடுக்கப்பட்ட வர்த்தமானி அறிக்கை சவாலுக்கு உட்படுத்தப்பட்டு, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு இடைக்கால தடையுத்தரவு ஆணை பிறப்பிக்கப்பட்டு, இந்த வர்த்தமானி பத்திரத்தைத் தற்காலிகமாக மன்று இடைநிறுத்தியுள்ளது. அதற்கிணங்க அமர்வுகளின் முடிவின் பின்னர் தற்போது பாராளுமன்றம் மூன்று நாட்கள் கூடியுள்ளது.

ஆரம்ப தினமான 2018 நவம்பர் 14 ஆம் திகதி உங்களால் அநீதியான முறையில் அமைக்கப்பட்ட அரசாங்கத்திற்கு எதிராக எங்களால், கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றத்தில் 122 உறுப்பினர்களின் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. அது பற்றி சபாநாயகரிடம் கையளிக்கப்பட்ட அந்த உறுப்பினர்களின் கையொப்பம் அடங்கிய மனுவில் எழுத்துமூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் பெரும்பான்மை உறுப்பின்ர்களின் கோரிக்கையின் படி நிலையியற் கட்டளையை இடைநிறுத்தும் பிரேரணையில் (நிலையியற் கட்டளைகள் 135) முன்வைக்கப்பட்ட அந்த நம்பிக்கையில்லா பிரேரணை சத்தம் எழுப்பி முடிவை அறிவிப்பதன் மூலம் 48(1) அத்தியாயத்தின் சபநாயகரின் அதிகாரத்திற்கு உட்பட்டு முறையாக நிறைவேற்றப்பட்டது. அதை உறுப்பினர்களின் பெயரால் வாக்கெடுப்பை நடத்துவதற்கு சபாநாயகர் மேற்கொண்ட முயற்;சியின் மூலம் தோல்வி உறுதியாதென தெரிந்து வைத்திருந்த அரசாங்க கட்சியெனக் கூறும் தரப்பினர் இடையூறு விளைவித்ததன் காரணமாக எடுக்கப்பட்ட முடிவென்பது உங்களுக்கு நன்றாக தெரியும். இந்த நிலைமை நவம்பர் 16 ஆம் திகதியும் அவ்வாறே நிகழ்ந்தது. உங்களின் உறுப்பினர்கள் தோல்வியை ஏற்றுக்கொள்ள மறுத்து மற்றும் பெயர் குறிப்பிட்டு வாக்கெடுப்பு நடத்துவதையும் தடுத்து பாராளுமன்றத்தில் வெறிபிடித்தவர்கள் போன்று செயற்பட்டதும் உங்களுக்கு நன்றாகத் தெரியும்.

எவ்வாறாயினும் இரண்டு தடவைகள் முறையாக இடம்பெற்ற நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றியதை ஏற்றுக்கொள்ளவும் பெயரளவிலான பிரதமர் பதவியைக் கைவிடுவதை மறுதளித்து அது முறையாக இடம்பெறவில்லையென கீழ்த்தரமாக நியாயத்திற்காக கருத்துக்களை வெளியிடுவது ஜனாதிபதி ஒருவருக்கு பொருத்தமான ஒன்றல்ல என்றே நாங்கள் நினைக்கின்றோம். அபோன்று மக்களின் இறைமையை பிரதிநிதித்துவம் செய்வதாக கூறுகின்ற பாராளுமன்றத்தின் மூன்று நாள் நிகழ்வுகளில் ஏற்பட்ட கலகமும் அருவறுக்கத் தக்க நிலைக்கும் அதன் மூலமாக ஏற்பட்டுள்ள ஸ்திரமற்ற நிலைக்கும் முழுமையாக பொறுப்புக் கூற வேண்டியவர் நீங்கள். உங்களின் தன்னிச்சையான நடவடிக்கையாகும்.

அதற்கிணங்க நாடு இன்று எதிர்கொண்டிருக்கும் ஒட்டுமொத்த அராஜக மற்றும் ஸ்திரமற்ற நிலைமையின் ஸ்தாபகர் நீங்கள். அதை நிவர்த்தி செய்ய முடிவதும் உங்களுக்கேயாகும். அதற்கு அப்பால் இந்த விடயங்கள் தொடர்பில் உங்களுடன் கலந்துரையாடுவதன் மூலமாக பெற்றுக்கொள்ள கூடிய தீர்வு இருக்கிறாதா? என்பதை நாங்கள் நம்பவில்லை. பாராளுமன்றத்தைப் பிரதிநதித்துவம் செய்யும் பொறுப்பு வாய்ந்த அரசியல் கட்சி என்ற வகையில், எங்களால், இது தொடர்பில் உயரிய பங்களிப்பு செய்யப்பட்டுள்ளது. இப்போது இருப்பதெல்லாம் உங்களின் தரப்பினர் அதற்காக செயற்படுவதேயாகும். நாட்டுக்காக அந்த நடவடிக்கையை எடுப்பதற்கு உங்களுக்கு சுயநம்பிக்கை எஞ்சியிருக்க வேண்டுமென நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com