கட்டாருக்காக உளவுபார்த்தார் என்ற குற்றச்சாட்டு தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் குற்றவாளியாகக் காணப்பட்ட பஹ்ரைனின் எதிர்க்கட்சித் தலைவர் ஷெய்க் அலி சல்மானுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
எதிரி நாட்டுடன் இணைந்து சூழ்ச்சியில் ஈடுபட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டிலிருந்து பஹ்ரைன் மேல் நீதிமன்றத்தின் முதல் விசாரணைப் பிரிவினால் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டு சில மாதங்களின் பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது
பஹ்ரைன் 2017 ஆம் ஆண்டு கட்டாருடனான தொடர்புகளைத் துண்டித்தது. மாற்றுக் கருத்துடையோர் மீது பஹ்ரைன் அடக்குமுறைகளை பிரயோகித்து வரும் நிலையில் இந்தத் தீர்ப்பு நீதியை பரிகாசம் செய்யும் நடவடிக்கையாகும் என மன்னிப்புச் சபை விபரித்துள்ளது.
மாற்றுக் கருத்துக்களை மௌனிக்கச் செய்வதற்கு பஹ்ரைன் அதிகாரிகள் இரக்கமற்ற, சட்டத்திற்குப் புறம்பான முயற்சிகளை மேற்கொள்கிறார்கள் என்பதை இத்தீர்ப்பு வெளிப்படுத்துவதாக மன்னிப்புச் சபையின் மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவுக்கான பணிப்பாளர் ஹேபா மொரயெப் தெரிவித்தார்.
அமைதியான முறையில் தனது கருத்துக்களை வெளியிடுவதற்கான சுதந்திரத்தை கட்டுப்படுத்தியிருப்பதன் மூலம் ஷெய்க் அலி சல்மான் தன்னளவில் ஒரு கைதியாகவே இருக்கிறார். தற்போது தடை செய்யப்பட்டுள்ள அல்-வெபாக் இயக்கத்தின் தலைவரான அலி சல்மான், கட்டாருடன் இணைந்து அரசாங்கத்திற்கு எதிராக அமைதியின்மையை ஏற்படுத்துவதற்கு சூழ்ச்சி செய்தார் என 2011 ஆம் ஆண்டு அவர் மீதும் சக எதிர்க்கட்சித் தலைவர்களான ஹஸன் சுல்தான் மற்றும் அலி அல் அஸ்வாட் ஆகியோர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டது.
கட்டார் பயங்கரவாதக் குழுக்களுக்கு ஆதரவு வழங்குவதாகவும் ஈரானுடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணுவதாகவும் குற்றம் சுமத்தி பஹ்ரைன், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் கட்டாருடனான தொடர்புகளைத் துண்டித்தன. இக்குற்றச்சாட்டுக்களை கட்டார் மறுத்துள்ளது. இந்த சந்தர்ப்பத்திலேயே அலி சல்மான் மீதான குற்றச்சாட்டுக்களும் தீவிரமடைந்தன.
அதேவேளை, தமது இயக்கத்தை நசுக்குவதற்கும் 2015 ஆம் ஆண்டு தொடக்கம் சிறையிலிருக்கும் தமது தலைவரை நீண்ட காலத்திற்கு தடுத்து வைத்திருப்பதற்குமே பஹ்ரைன் அரசாங்கம் முயன்று வருகின்றது என அல்-வெபாக் இயக்கம் தெரிவித்துள்ளது.
சுன்னி பிரிவினால் ஆட்சி செய்யப்படும் பஹ்ரைனில் பெரும்பான்மை ஷீயா சமூகத்தினரால் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் முன்னெடுக்கப்பட்ட ஜனநாயகத்திற்கான போராட்டத்தின் மீது பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தியதிலிருந்து அங்கு அமைதியின்மை நிலவுகின்றது. எனினும் அண்டை நாடுகளின் விசேடமாக சவூதி அரேபியாவின் உதவியுடன் பஹ்ரைன் அரச குடும்பமான அல் கலீபா போராட்டங்களை அடக்கி வருகின்றது.
அலி சல்மான் இத்தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி விடிவெள்ளி
No comments:
Post a Comment