Monday, November 12, 2018

விக்கியை சைக்கிள் கொம்பனியும் நட்டாற்றில் விட்டது. துரோகிகளுடன் கூட்டு சேர மாட்டார்களாம்!

நாடாளுமன்று கலைக்கப்பட்டு மக்களின் ஜனாநாயக உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கடந்த வெள்ளி நள்ளிரவிலிருந்து நாட்டுமக்கள் குழப்பமடைந்துள்ளபோதும், மக்களின் வாக்குகளை மீண்டுமொருமுறை சூறையாடுவது எவ்வாறு என அரசியல் கட்சிகள் வியூகங்களை வகுத்து வருகின்றனர்.

அவ்வகையில், தமிழ் தேசிய மக்கள் முன்னணி எனப்படும் கஜேந்திர குமார் பொன்னம்பலம் தலைமையிலான குழுவினர் தமது வியூகங்கள் தங்கள் உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளனர். அவ்வறிவித்தலின் பிரகாரம் முன்னாள் நீதியரசர் குறித்த முன்னணியினரால் நட்டாற்றில் விடப்பட்டுள்ளமை வெளியாகியுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக கூட்டணி ஒன்றை அமைத்து மீண்டுமொருமுறை வடக்கின் முதலமைச்சராகலாம் என்ற விக்கினேஸ்வரனின் கனவு கஜேந்திரகுமாரின் இவ்வறிவித்தலினூடாக கலைந்துள்ளதாக எடுத்துக்கொள்ள முடிகின்றது.

தாம் விக்கினேஸ்வரனுடன் இணைந்து செயற்படமுடியாது என்பதற்கான காரணம், விக்னேஸ்வரனின் கூட்டணியில் ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட் போன்ற 'துரோகிகள்' இருப்பதாகவும், 'தியாகிகளான' தாம் அவர்களுடன் கூட்டு வைக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

யாழ்ப்பாணம் நல்லூரிலுள்ள மண்டபமொன்றில் இடம்பெற்ற இந்சந்திப்பில் உரையாற்றிய கஜேந்திரகுமார், 'முதலமைச்சர் கட்சி அறிவிப்பதற்கு ஒரு வாரம் முன்னதாக கஜேந்திரனும், மணிவண்ணனும் சென்று அவரை சந்தித்தார்கள். அப்போது அவர் சொன்னார்- இந்திய தூதரக அதிகாரிகள் அண்மையில் என்னை சந்தித்தார்கள். நீங்களும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் கூட்டணி வைத்தால், சுலபமாக நீங்கள் முதலமைச்சராகி விடுவீர்கள். ஆனால், நீங்கள் அவர்களுடன் கூட்டணி வைப்பதை நாங்கள் விரும்பவில்லை என சொன்னார்கள் என அப்போது சொல்லியிருந்தார் என்ற விடயத்தை கூறி விக்கினேஸ்வரன் இந்திய நிகழ்சி நிரலில் இயங்குகின்றார் என்பதை போட்டுடைத்தார்.

மேலும், விக்னேஸ்வரனின் கூட்டணியில் ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட் என்பன இருக்கும் வரை நாம் அங்கம் வகிக்க முடியாது. தேவையானால், அவர்களையெல்லாம் விட்டு விட்டு முதலமைச்சர் தனி ஆளாக எம்மிடம் வரலாம்' என்றார்.

நாடாளுமன்ற தேர்தலில் பொன்னம்பலம் கஜேந்திரகுமார், செல்வராசா கஜேந்திரன், விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.



No comments:

Post a Comment