ரணிலின் நிர்வாகத்தின் கீழ் இடம்பெற்ற மோசடிகளை கண்டுபிடிக்க விசேட ஆணைக்குழு அமைக்கின்றார் மைத்திரி.
ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் இடம்பெற்ற அனைத்து மோசடிகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பிலும் ஆராய்ந்து பார்ப்பதற்காக புதிய ஆணைக்குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கடந்த ஒக்டோபர் 26ம் திகதி ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கி புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை நியமித்ததன் பின்னர் நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி நிலைமையை அடுத்து முதன் முறையாக இலங்கையிலிருந்து வெளிநாடுகளைத் தலைமையகமாகக் கொண்டியங்கும் ஊடகங்களின் செய்தியாளர்களை சந்தித்தபோதே ஜனாதிபதி இந்தக்கருத்துக்களை வெளியிட்டார்.
இந்த ஆணைக்குழுவானது பிணைமுறி மோசடியை விடவும் மிகமோசமான மோசடியை கண்டுபிடிக்கும் என்பதில் தனக்கு நிச்சயமுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சந்திப்பு கொழும்பு 7 உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்றது.
சட்டரீதியாக பெரும்பான்மை நிரூபிக்கப்படினும் ரணிலை பிரதமராக நியமிக்கமாட்டேன்
தன்னுடைய காலத்தில் மீண்டும் ஒருபோதும் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று முற்பகல் இடம்பெற்ற வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இருந்து வெளியாகும் பிரபல ஆங்கில வார இதழுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் இன்று இதேகருத்தை வெளிப்படுத்தியிருந்த ஜனாதிபதி சிறிசேன வெளிநாட்டு ஊடகவியலாளர்களிடமும் தனது விடாப்பிடி நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
'ஐக்கிய தேசிய முன்னணிக்கு பெரும்பான்மை உள்ளதாக சட்டபூர்வமாக நிரூபிக்கப்படினும் கூட ரணில் விக்கிரமசிங்கவை என்னிடம் கூட்டிக்கொண்டுவரவேண்டாம் என அவர்களிடம் தெளிவாகக் கூறிவிட்டேன்.'என சிறிசேன உறுதிபடக்கூறியுள்ளார்.
ரணில் நாட்டை நேசிக்கவில்லை
பாரிய மோசடிகளை புரிந்தமைக்கு ரணிலும் அவருக்கு கீழிருந்த சிலருமே காரணம் என ஜனாதிபதி இந்தச்சந்திப்பின் போது சுட்டிக்காட்டியுள்ளார். ' அர்ஜுன் மகேந்திரன் எங்கிருக்கின்றார் என்பது அவருக்கு தெரியும்.
ஆனால் அவர் இன்னமும் அதனை வெளிப்படுத்தவில்லை. அவர் நாட்டை நேசிக்கவில்லை. இலங்கை மிக மோசமான நிலையில் இருந்தது' என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
எந்தக்கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மை கிடையாது
நாடாளுமன்றத்தில் தற்போது எந்த கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மை கிடையாது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். பொதுஜன பெரமுணவிற்கோ ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கோ ஐக்கியதேசியக்கட்சிக்கோ தமிழ்த் தேசியக்கூட்டமைப்பிற்கோ அன்றேல் ஜேவிபிக்கோ தெளிவான பெரும்பான்மை கிடையாது .
எந்தக் கட்சியும் தம்மிடம் 113 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதாக கூறமுடியாது. எந்தவொரு அரசாங்கமாக இருந்தாலும் ஏனைய கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment