புத்தளத்தில் குப்பை கொட்டுதலுக்கு எதிராக யாழில் கவனயீர்ப்பு போராட்டம். பாறுக் ஷிஹான்
புத்தளத்தில் குப்பை கொட்டும் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தியும், குப்பைக்கு எதிராக 56 நாட்களைக் கடந்து போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் வெள்ளிக்கிழமை(23) பிற்பகல் யாழ். நகரிலுள்ள பஸ் தரிப்பிட நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு, யாழ்.கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளனம் ஆகியன இணைந்து குறித்த கவனயீர்ப்புப் போராட்டத்தை நடாத்தினர்.
குறித்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளரும், மூத்த அரசியல்வாதியுமான சி.கா. செந்திவேல், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளர் ச.தனுஜன், யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள், தூய்மைக்கான புத்தளம் அமைப்பின் செயற்பாட்டாளர்கள், யாழ். கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளன பிரதிநிதிகள், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை, இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் புத்தளத்தில் குப்பை கொட்டும் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தித் தமிழ், சிங்கள மொழிகளில் பல்வேறு கோஷங்களை எழுப்பியதுடன் சுலோகங்களையும் தாங்கி கடும் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
புத்தளத்தில் குப்பை கொட்டும் திட்டத்தைக் கைவிட வலியுறுதியும் குப்பைக்கு எதிராக 56 நாட்களைக் கடந்து போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் இடம்பெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தில்
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்இசமூக நீதிக்கான வெகுஜன அமைப்புஇ யாழ். கிளிநொச்சி முஸ்லிம் சமேளனம் ஆகிய அமைப்பு இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு உள்ளது.
அதாவது புத்தளம் நகரிலிருந்து 20 Km தூரத்தில் உள்ள வண்ணாத்திவில்லு பிரதேச சபைக்குட்பட்ட சேராக்குழியிலுள்ள அருவக்காடு பகுதியில் சுமார் 64 ஏக்கர்கள் நிலப்பரப்பில் கொழும்பிலிருந்து குப்பைகளை கொண்டு வந்து கொட்டத் தீர்மானிக்கப்பட்டு, அதற்குரிய வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கொழும்பு நகரின் குப்பைகள் மாத்திரமன்றி, அண்மையில் எமது அரசாங்கம் சிங்கப்பூருடன் செய்துகொண்ட உடன்படிக்கையின் பிரகாரம் சிங்கப்பூரினதும், சிங்கப்பூருடன் ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ள ஏனைய 62 நாடுகளினதும் இரசாயண, கதிரியக்க, மருத்துவ, பிளாஸ்ரிக் கழிவுகளும் இங்கே கொண்டுவந்து கொட்டப்படக்கூடிய அபாயம் இருப்பதாகப் பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.
கொழும்பில் சேரும் குப்பைகளை, 175 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள புத்தளம் அருவக்காடு பிரதேசத்தில் கொட்டுவதற்கு, அரசாங்கம் எடுத்துள்ள முடிவு, அப்பிரதேச மக்களின் அன்றாட வாழ்வையும் எதிர்காலத்தையும் பாழடையச் செய்யும் அபாயகரமான செயற்பாடாகும்.
இதற்கு எதிராக கடந்த செப்ரெம்பர் மாதம் 29 ஆம் திகதியில் இருந்து புத்தளம் மக்கள் புத்தளம் கொழும்பு முகத்திடலில் சுழற்சி முறையிலான தொடர் சத்தியாக்கிரகத்தினை 50 நாட்களையும் கடந்து முன்னெடுத்துவருகின்றனர்.
ஏற்கனவே, புத்தளத்தில் அமைக்கப்பட்ட பாலாவி சீமெந்துத் தொழிற்சாலை, கற்பிட்டி விமானப்படைப் பயிற்சித் தளம் மற்றும் நுரைச்சோலை அனல் மின் நிலையம் ஆகியவற்றினால் வளிமண்டலமும் கடலும் நிலமும் நிலத்தடி நீரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அறுவக்காடு பகுதியில் 1965 ஆம் ஆண்டிலிருந்து சீமெந்து உற்பத்திக்காக சுண்ணக்கல் அகழப்பட்டுப் பின் 15 வருடங்களுக்கு முன்னர் 2003 ஆம் ஆண்டளவில் மீள நிரப்பிக் காடாக்கப்பட்ட பகுதியில், அக் காட்டை அழித்து மீளவும் தோண்டிக் குப்பைகளைக் கொட்டுவதற்கான ஆயத்த வேலைகள் செய்யப்படுகின்றன.
இவ்வாறான குப்பைகளைக் கொண்டு கிடங்குகளை நிரப்புவதில் (Sanitary Land Filling) முன் அனுபவம் இல்லாத, பல்வேறு நாடுகளாலும் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட கம்பனியான சீனத் துறைமுக பொறியியல் நிறுவனம் (China Harbour Engineering Company ltd.) இவ் ஒப்பந்தத்தை மேற்கொண்டுவருவதாகவும், இத்திட்டம் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் முறைப்படியான அனுமதி பெறப்படாமலேயே தொடங்கப்பட்டிருப்பதாகவும் சூழலியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மூன்று அடி தடிப்பான அடித்தளம், சுவர் என்பன அமைக்கப்பட்டு அதற்குள் ஆயிரக்கணக்கான தொன் ஆபத்தான இரசாயண, மருத்துவ, பிளாஸ்ரிக், கதிரியக்கக் குப்பைகள் கொட்டப்படவுள்ளன. இச் செயற்திட்டத்தினால் அருகில் உள்ள சேரக்குழி, அருவக்கால், காரைதீவு ஆகிய கிராமங்களில் வாழும் மக்களின் வாழ்வு கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மழைக்காலங்களில் இந்த குப்பை சேமிக்கப்படும் இடத்திலிருந்து கழிவு நீர் வழிந்தோடி 200 மீற்றறுக்கும் குறைவான தூரத்தில் உள்ள புத்தளம் களப்பில் நேரடியாக கலக்கும் அபாயம் ஏற்படவுள்ளது. மேலும், இப்பிரதேசத்திற்கு அருகில் உள்ள இறால் பண்ணைகள், உப்பளங்கள் மற்றும் தப்போவ நன்னீர் ஏரி என்பன பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புகள் அதிகமாகக் காணப்படுகின்றன.
நிலத்தடி நீரூடாகவோ, மழை வெள்ளத்துடனோ மிகவும் அருகில் இருக்கின்ற வளமான கடற்பரப்பிற்கு இக் கழிவுகள் இலகுவாகச் சென்று அடைவதால், மிகவும் வளமான கண்டமேடையாகக் காணப்படுகின்ற இக்கடற்பரப்பு மிகவும் பாதிக்கப்படும். இப் பாதிப்பு அரபிக் கடல் வரை தாக்கம் செலுத்துமென ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் கண்டல் தாவரங்கள் அழிவடையும். இறால் வளர்ப்புப் பாதிக்கப்படும். மீன்களும் நஞ்சாகும். மீன்களின் இனப்பெருக்கத்திற்குப் பொருத்தமான இலங்கையிலேயே பெரிய அளவில் (3100 ஹெக்ரெயர்) உள்ள கண்டல் தாவர பாதுகாப்பு வலயம் புத்தளத்திலேயே உள்ளமையும் கவனத்தில்கொள்ளத்தக்கது.
மிகவும் முக்கியமாக, இப்பிரதேசத்தில் இருந்து இரண்டு கிலோமீற்றர் இடைவெளியில் அமைந்துள்ள வில்பத்து விலங்குகள் சரணாலயத்திற்கும் இத் திட்டத்தால் பாரிய அச்சுறுத்தல் ஏற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. மோப்ப சக்தி அதிகமாக உள்ள யானைகள் இக் குப்பையின் நாற்றத்தை நுகர்ந்து மிகவும் நீண்ட தூரத்தில் இருந்து இப் பகுதியை நோக்கி வரக்கூடிய அபத்து உள்ளமையால், இப்பிரதேசத்தில் உள்ள மக்கள் செறிந்து வாழும் கங்கேவாடிய, பூக்குளம், பழைய எலுவன்குளம், புதிய எலுவன்குளம் ஆகிய கிராமங்களில் மனித யானை மோதல் ஏற்படும்.
அருகிலுள்ள பிரதேசங்களில் சீமெந்துத் தொழிற்சாலைக்காக இன்றும் தொடர்கின்ற சுண்ணக்கல் அகழ்வின்போது, பாறைகளை உடைக்கப் பயன்படும் பாரிய வெடிகளால் ஏற்படும் அதிர்ச்சியானது அயல் மாவட்டங்களில் கூட யன்னல் கண்ணாடிகள் உடைகின்ற அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்துவதாகக் குறிப்பிடப்படுகின்றது. இந் நிலையில் இவ் வெடிகளின் அதிர்வினாலோ, அல்லது இக் குப்பைகளில் ஏற்படக்கூடிய இரசாயணத் தாக்கத்தாலோ, 3 அடி அளவான சுவரிலோ அடித் தளத்திலோ சிறு வெடிப்பு ஏற்படுமானால், இக் குப்பைகளில் இருந்து வெளியேறும் மிகவும் ஆபத்தான விசத் திரவங்களும், நச்சு வாயுக்களும் நிலத்தடி நீரையும், மண்ணையும், வளிமண்டலத்தையும் மீட்க முடியாத அளவுக்குப் பாதிக்கும் வாய்ப்புள்ளது. இப் பகுதி சுண்ணக்கல் படிவுகளாலான நிலவமைப்பைக் கொண்டதாக இருப்பதால், இக் கழிவுகள் நிலத்தடி நீரோட்டங்கள் மூலமாகப் பல இடங்களுக்கும் வேகமாகப் பரவும் வாய்ப்பும் காணப்படுகின்றது.
இலங்கையின் உப்புத் தேவையில் 2/3 பகுதியை நிவர்த்தி செய்வதற்குத் தேவையான உப்பு புத்தளத்திலேயே உற்பத்தி செய்யப்படுகின்றது. இக் கழிவுகளால் களப்பை அண்டியுள்ள உப்பளங்கள் பாதிக்கப்படும். இலங்கையின் உப்பு உற்பத்தி குறைவடைந்து, உப்பை வெளிநாடுகளில் இருந்து அதிகமாக இறக்குமதி செய்யவேண்டிய நிலை ஏற்படும்.
புத்தளம் தென்மேற் பருவப்பெயற்சிக் காற்றின் நுளைவாயிலாக இருப்பதனாலும், வருடம் முழுவதும் காற்று வீசும் பகுதியாக இருப்பதனாலும் இக் குப்பைகளில் இருந்து வெளியேறும் வாயுக்களும், துர்நாற்றமும் இலங்கையின் வடக்கு, வடமத்திய மாகாணங்களுக்கும் பரவக்கூடிய வாய்ப்புகள் அதிகமாகவுள்ளன.
உலர்வலயப் பிரதேசமான இங்கு, கடும் வெப்பமான கோடை காலங்களில் இக் கழிவுகளில் இருந்து மீதேன் வாயு வெளியேறும் சந்தர்ப்பத்தில் இலகுவில் தீப்பற்றக்கூடிய வாய்ப்பு இருப்பதால், அத்தீ இலங்கையின் மிகவும் முக்கியமான வனவிலங்குச் சரணாலயமான வில்பத்துக் காட்டில் பெரும் காட்டுத் தீயைத் தோற்றுவிக்கும் வாய்ப்புள்ளது.
துர்நாற்றம் அருகில் மனிதர்கள் வசிக்கமுடியாத நிலையைக் கொண்டுவரும். கிருமிகளின் பெருக்கம், ஈக்கள், கொசுக்களின் பெருக்கம் மக்களின் வாழ்வுக்குப் பெரும் நாசத்தை ஏற்படுத்தும்.
குப்பைகளைக் கொழும்பில் இருந்து தொடரூந்தில் கொண்டுவருவதாக ஆரம்பத்தில் சொல்லப்பட்டபோதும், பின்னர் அதற்கான பாதை வசதிகள் போதுமானதாக இல்லாத காரணத்தால் டிப்பர் வாகனங்களில் கொண்டுவர மாற்றுத் திட்டம் போடப்பட்டுள்ளது. இதற்கு ஒரு நாளைக்கு அண்ணளவாக 70 டிப்பர்கள் புத்தளத்திற்கும் கொழும்பிற்கும் சுமார் 175 கிலோமீட்டர் (மீளச் செல்வதும் சேர்த்து 350 முஅ) பயணம் செய்யவேண்டும். இதன்போது டிப்பர்களைச் சொந்தமாக வைத்திருக்கும் அரசியல்வாதிகளும், முதலாளிகளும் இவ் ஒப்பந்தத்தைக் கைப்பற்றிப் பங்குபோட்டு மக்களின் பணத்தைக் கொள்ளையிட முனைகிறார்கள்.
இக் கழிவுகள் எவ்வித பாதுகாப்புமற்ற வகையில் டிப்பர் வாகனங்களில் வெறுமனே படங்கால் மேல் தளத்தினை மூடிக் கொண்டு செல்லவே திட்டமிடப்;படுகின்றது. இப் பொறுப்பற்ற செயல் பாதையில் உள்ள பிரதேசங்களுக்கும் அவற்றில் வசிக்கும் மக்களுக்கும் பிரயாணிகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகமாகக் காணப்படுகின்றது. எடுத்துக்காட்டுகளாக, தொடர்ச்சியான துர்நாற்றம் உருவாகும். ஏனெனில், படங்குகளால் துர்நாற்றம் வெளிவருவதைக் கட்டுப்படுத்தமுடியாது. அத்துடன், தற்செயலாக மூடிக் கட்டப்பட்டுள்ள படங்கின் ஒரு கயிறு அவிள்ந்தாலோ, படங்கில் சிறு கிழியல் ஏற்பட்டாலோ அல்லது டிப்பர் ஒன்று விபத்துக்குள்ளானாலோ விரும்பத்தகாத பல விளைவுகள் பாதை முழுவதற்கும் ஏற்பட வாய்ப்புள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளிலும் குப்பையானது மிள் சுழற்சிக்கு உட்படுத்தக்கூடிய பெரும் விலைமதிப்புடைய வளமாகவே உள்ளது. இக் குப்பைப் பிரச்சினைக்குத் தீர்வு காண, இத் திட்டத்துடன் ஒப்பிடுகையில் மிகவும் செலவு குறைவான, பாதிப்புக் குறைந்த மாற்றுத் திட்டங்கள் காணப்படுகின்றபோதும், இது சார்ந்த கொம்பனிகளும், அமைச்சர்கள் உள்ளடங்கலான அரசியல்வாதிகளும் மக்கள் பணத்தை செயற்திட்டம் என்ற பெயரில் கொள்ளையிடவும், தரகுப் பணத்திற்காகவும் இத் திட்டத்தினை அமுல்படுத்துவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
மிகப்பெரியதொரு அழிவை அரங்கேற்றவுள்ள, சுற்றாடலுக்கு எதிரான இச் சதியை முறியடிக்க அனைவரும் அணிதிரள்வோம்!என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment