அரசியல் தலைமைகளே உலாமாக்களிடம் அரசியல் ஆலோசனை பெறுவதை நிறுத்துவீர். றிசாத் ஏ காதர்
இலங்கையில் தேசத்தில் ஒக்டோபர் 26ஆம் திகதி ஏற்பட்ட அரசியல் மாற்றத்தினால் ஏற்பட்ட களேபரம் இன்று நாடாளுமன்றம் கலைப்பு வரை சென்றிருக்கின்றது. இதற்குப்பின்னால் இருந்திருக்கின்ற அரசியல் நிகழ்ச்சி நிரல்கள் ஏராளம். மேற்கத்தேய நாடுகளுக்கு பொருத்தமான, சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளுக்கு சார்பான போக்குடன் இலங்கை இயங்குதல் வேண்டும் என்கிற நிகழ்ச்சிநிரல்களுக்கும் குறைவில்லை.
மேற்குறித்த வெளிக்காரணிகள் ஓரளவான தாக்கத்தினை ஏற்படுத்தினாலும், உள்ளக காரணிகள் பல இருந்திருக்கின்றது என்பதனை ஜனாதிபதி அவர்களின் உரைகளில் இருந்து புரிந்துகொள்ளமுடிகின்றது. நல்லாட்சி ஒன்றினை இலங்கை தேசத்தில் நிறுவவேண்டும் என்பதுக்கு எடுக்கப்பட்ட முயற்சிகளை, முன்னால் பிரதமர் குழிதோண்டிப் புதைக்க முற்பட்டதன் விளைவு என்கிற கருத்து அரசியல் அரங்கில் பேசப்பட்டாலும் ஜனாதிபதியின் அதிரடி முடிவு அவசராமாக எடுக்கப்பட்டதுடன், ஆரோக்கியமற்றதாகவும் பார்க்கப்படுகின்ற சூழலில் முஸ்லிம் தரப்புகள் எப்படியான முடிவுக்கு வந்திருக்கவேண்டும் என்பதுடன், இன்னும் எஞ்சியிருக்கின்ற காலமொன்றுக்குள் எப்படி தமது அரசியல் நடவடிக்கையை நகர்த்துதல் பொருத்தம் என்பது பற்றி பொதுவெளிக்கருத்துகள் பற்றி அலசி ஆராய்தல் வேண்டும்.
முஸ்லிம் அரசியல் கட்சிகள் தமது பலங்கள் பற்றி இன்னும் சரியாகப் புரிந்துகொள்ளாமல் பலவீனங்களை முதலீடுகளாக வைத்தே அரசியல் செய்வதற்கு முற்படுகின்றனர். ஓர் அரசாங்கத்தில் இணைவது சாதாரண சில விவகாரங்களை மையப்படுத்தியதல்ல. தான் சார்ந்த சமூகத்தில் மிக நீண்டகாலம் தீர்க்கமுடியாது போன உரிமைசார், அபிவிருத்திசார் விடயங்களை பெற்றுக்கொள்வது முதன்மையானதாகவிருத்தல் வேண்டும். ஆனால் அவைகள் மு.கா.கட்சியின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்எச்.எம். அஷ்ரபோடு முற்றுப்பெற்றுவிட்டது என்கிற கருத்தை கட்சி ஆதரவுகளுக்கு அப்பால் ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும்.
ஏனெனில் கடந்த ஒக்டோபர் மாதம் ஏற்படுத்தப்பட்ட அரசியல் மாற்றத்துக்கு பிற்பாடு நடாளுமன்ற ஒத்திவைப்பு இடம்பெற்று நவம்பர் 14ஆந் திகதி கூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டு, சபாநாயகரின் கருத்தினால் அரசியல் அரங்கு களேபரம் அடைந்ததனால் நாடாளுமன்றத்தினை ஜனாதிபதி கலைத்திருந்தார். தற்போது மைத்திரி தலைமையிலான தரப்பு பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என்கிற கருத்து மேலோங்கியிருக்கின்றது. இவ்வாறான சூழலில் முஸ்லிம் தரப்புகள் புத்திசாலித்தனமாக தமது நகர்வுகளை மேற்கொள்ளவில்லை என்கிற கருத்து நிறையவே. அப்படி தமது பலம் எதுவென நிலைநாட்டியிருந்தால் சிறுபான்மைக்குள்ள பலம் நிரூபிக்கப்பட்டிருக்கும் என்கிறனர் அரசியல் ஆய்வாளர்கள்.
அதனையும் தாண்டி சில விவகாரங்களை மைத்திரி தரப்புடன் எழுத்துமூலமான கோரிக்கையினை பெற்றுக்கொண்ட பிற்பாடுதான் ஆதரவு வழங்குவது என்றும் தீர்மானித்ததாக சொல்லப்படுகின்றது. ஆக இப்படி எழுத்துமூலம் பெற்றுக்கொள்வதற்குரிய மிகப் பொருத்தமான சந்தர்ப்பம் நல்லாட்சிக்கு வித்திட்ட 2015 காலப்பகுதியாகும். அதனை கைநழுவ விட்டுவிட்டு அரசியல் நெருக்கடி நிலை ஏற்பட்ட காலமொன்றில் எழுத்துமூலமான கோரிக்கைக்கு சாதகபதில் வழங்கப்படுதல் வேண்டும் என கோருவது பொருத்தமற்ற கோரிக்கையாகும்.
அரசியல் ரீதியாக நெருக்கடியை எதிர்கொண்ட ஜனாதிபதியை ஆதரித்து தமது அரசியல் பலம் இனறுள்ள சூழலில் எவ்வளவு பலமிக்கது என்பதனை நிரூபிக்கும் சந்தர்ப்பத்தினை தவிடுபொடியாக்கிவிட்டு ஜனநாயம், அரசியலமைப்பு மீறல் என்று கூறுவதிலுள்ள நியாயங்கள் எவை ?
இலங்கை தேச அரசியல் நிலமையானது இனவாத கட்டுக்குள் கட்டமைக்கப்பட்டடிருக்கவேண்டும் என சிந்திக்கும் சக்திகளுக்கு சாவுமணியடிக்க வேண்டிய பொறுப்பு முஸ்லிம் தலைமைகளுக்கு உண்டு. அதனை எப்படியான சந்தர்ப்பத்தில் ஏற்படுத்தவேண்டும் என்கிற இராஜதந்திரம் தெரியமால் முஸ்லிம் சமூகத்தை இக்கட்டான நிலைக்குள் தள்ளுகின்ற நிலை கைவிடப்படுதல் வேண்டும்.
அரசியலமைப்புக்கு உட்பட்டே தனது அத்தணை காரியங்களையும் அரங்கேற்றியதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். பிரதமர் நியமிப்பு விடயத்துக்கு உயர்நீதிமன்றினை அனுகாத ஐ.தே.கட்சி சர்வதேசத்தின் தலையீட்டினையே நம்பிக்கொண்டிருந்தது. அதன் பிற்பாடு சபாநாயகரின் அறிவிப்பு இந்த தேசத்தில் ஒரு கலவர நிலையை நவம்பர் 14ஆந் திகதி ஏற்படுத்திவிடலாம் என்கிற கருத்தை மையப்படுத்தியே நாடாளுமன்றை கலைத்தாக ஜனாதிபதி அறிவித்திருந்தார். இதில் எங்குமே சிறுபான்மை கட்சிகள் ஆதரவு தரவில்லை அதனால் எங்களால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்கிற கருத்து மறைமுகமாகவேனும் பொதிந்திருக்கவில்லை என்பதனையும் அவதானித்தல் அவசியம். ஆக இப்படியான அசாதாரண சூழலுக்கு வழிகோலும் ஜ.தே.கட்சியை மு.கட்சிகள் தொடரந்து ஆதரிக்கவேண்டிய தேவை என்ன?
நல்லாட்சி நிறுவபட்டு 3 ½ வருடகாலத்திற்குள் முஸ்லிம் சமூகம் அடைந்த நன்மைகள் எவை. அளுத்கம வன்முறையை தூக்கிப்பிடித்து துணிச்சலாக வெளியேறினோம் என சொல்லியவர்கள் அதற்கான ஒரு ஆணைக்குழுவையேனும் நியமித்தார்களா? அல்லது அதற்காக குரலெழுப்பினார்களா? அதனையும் தாண்டி சட்டம் ஒழுங்கு அமைச்சராக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற சில நாட்களுக்குள் இடம்பெற்ற திகன, அம்பாறை கலவரங்களுக்கு நடந்தது என்ன?
பெற்றுக்கொள்ளப்பட்ட தீர்வு யாது? ஜ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் றஹ்மான் நாடாளுமன்றில் பேசியவை போதும் கடந்த அரசாங்கம் ஆட்சி செய்வதுக்கு பொருத்தமற்றது என்பதனை நிறுவ. இவைகளை புரிந்து கொள்ளாமல் சில வேளைகளில் குறித்த அரசியல்வாதிகள் கட்சிக்குள்ள விசுவாசத்தில் சமூகத்தை, தான் ஏலவே பேசிய மறந்து செயற்பாடுவதனை கண்டுகொள்ள முடியும். அதனை ஞாபகித்து கேட்கின்போது ஒற்றை வரியில் சொல்லிவிடுவர் எல்லாம் 'அரசியல்' என்று. இதனை பார்க்கின்றபோது அரசியல் என்பது அரிஸ்டோட்டில், கால்மார்க்ஸ், ரூசோ சொன்ன வியாக்கியானங்கள் புதைக்கப்பட்டுள்ளது என்று.
மேலும், முஸ்லிம் பகுதிகளில் புரையோடிப்போயுள்ள காணி ஆக்கிரமிப்பு விடயங்களைத்தானும் பேசிப் பெற்றுக்கொடுக்காத அரசாங்கம் ஒன்றுக்கு இன்னும் முட்டுக்கொடுத்து ஆதரவு கோருவது சமூகத்தின் நலனை முன்னிறுத்தியா என்றும் கேட்கத் தோன்றுகிறது.
ஆனால் முஸ்லிம் கட்சித் தலைவர்களுக்கும், ஆட்சியாளர்களுக்குமிடையில் இணக்கங்கள் இருப்பது மட்டும் உறுதி. அதனை கடந்த நாட்களில் கண்டுகொள்ளவும் முடிந்தது. ஏனெனில் தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனியே சென்று ஆதரவளித்து அமைச்சுப் பொறுப்புகள் பெற்றுக்கொள்வதற்குரிய சந்தரப்பம் அவர்களுக்கு வாய்த்திருந்தது. அதனை தடுத்து நிறுத்தும் அதிகாரம் என்பது சாதாரணமானதல்ல. இதனை புரிந்துகொள்ளாமல் அரசியல் அரங்கில் ஆதரவாளராக இருப்பதது சிறுபிள்ளைத்தனமானது. அதிலும் அதிகாரம் எந்தக்கட்சித் தலைவருக்கு இருக்கிறது என்கிற போட்டியும் உரசிப்பார்க்கப்பட்டதும் இங்கு ஞபாகிக்கவேண்டியதே.
இலங்கை தேசத்தில் பேரினவாதிகளின் கோரக்கரங்களுக்குள் அவ்வப்போது சிறுபான்மை சமூகம் அள்ளப்பட்டிருந்தது. அதிகமான சந்தரப்பங்கள் கற்றுக்கொள்வதுக்கு ஏதுவாக இருந்திருக்கின்றது. ஆனால் அதில் முஸ்லிம் தரப்பு கற்றுக்கொண்டது அரிது.
இனவாத சிந்தனையை இந்தநாட்டில் ஊன்றி விதைத்தவர்கள் இருக்கின்ற முகாமில் தஞ்சமடைந்துகொண்டு சமூகத்தை காப்பாற்ற முன்வந்திருக்கின்றோம் என்கிற பகடிகள் அரசியல் அரங்கில் ஏராளம்.
நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளை மிக மோசமான சொற்பதங்கொண்டு திட்டித்தீர்த்த முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கு அரிய சந்தர்ப்பம் மிக அண்மையில் வாய்த்திருந்தும் அதனை சரிவர சாதிக்கமுடியாத நிலையிழந்து நிற்பதானது இந்த சமூகத்தின் மீதுள்ள அக்கறையீனமே.
அப்படியாகவிருந்தால் ரணில் விக்ரமசிங்க தரப்பிலான அரசாங்கம் நிறுவப்படும்போது முஸ்லிம் சமூகத்துக்கு சார்பாக செய்துகொள்ளப்படட்ட ஒப்பந்தங்கள் என்ன? அதுவல்லாமல் நிறுவப்படவிருந்த அல்லது நிறுப்படப்போகின்ற மைத்திர – மஹிந்த அரசாங்கத்தினை இன்னும் இனவாத சிந்தனைக்குள் கட்டுப்படுத்தி சமூகத்தை வழிநடாத்த எடுக்கின்ற எத்தனங்களின் பின்புலம் எவை என்கிற கேள்விக்கு பதிலளிக்கப்படுதல் வேண்டும்.
மேலும், எந்தப் பெரும்பான்மைக் கட்சிகளுடன் சங்கமிப்பது என்கிற நிலவரம் வருகின்ற போது உலமாக்களை அழைத்து ஆலோசனை கேட்கிற நிலை இன்னும் இச்சமூகத்துக்கு ஆபத்துக்களை ஏற்படுத்தும் என்பதனை புரியாமல் அரசியல் செய்கிற நிலை இல்லாமலாக்கப்படுதல் வேண்டும். கட்சிகளினதும், அரசியல் தலைவர்களின் தனிப்பட்ட முடிவுகள் சிலநேரம் உலாமக்களின் முடிவுகளாக அறிவிக்கப்படுகின்றபோது இலங்கை தேசத்தில் வாழுகின்ற பெரும்பான்மை பேரினவாத சக்திகளுக்கு தீனியாய் இருந்துவிடும். அப்போது அதனை கட்டுப்படுத்த போதுமான சக்தி எந்த தரப்பிடமும் இருந்துவிடாது என்பது கடந்தகாலத்தில் கற்றுக்கொண்ட பாடங்கள்.
ஆக, எந்த அரசியற் தரப்பும் பிரித்தாளும் கைங்கரியத்தை செய்துவிடாதீர்கள். மக்கள் இந்த தேசத்துக்குரியவர்கள். அவர்களின் பொதுவான பார்வையின் கீழ் கட்சிகளுக்கான ஆதரவுத் தளம் மேலெழும். கடந்த 2015ஆம் ஆண்டுத் தேர்தலில் அரசியற் கட்சிகளின் முடிவுகளுக்கு முன்னரே மக்கள் தீர்மானம் முன்னின்றது அதன் பிற்பாடு முஸ்லிம் அரசியல் கட்சிகள் திக்குமுக்காடியே வெளியேறிய வரலாறும் உண்டு. கட்சிகளின் பெயரால் 'சமூகத்தக்கு' என்கிற கோசத்தை முன்னிலைப்படுத்தி பிரித்துவிட்டுச் சென்றுவிடுவீர்கள். சிலசமயம் அடுத்தமுறை நாடாளுமன்ற ஆசன அதிஷ்டம் இல்லாமல் போகலாம். ஆனால் மக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள கைசேதப்படுவர்.
0 comments :
Post a Comment