சபாநாயகருக்கு எதிராக சரத் வீரசேகரா உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல்.
உயர் நீதிமன்றத்தினால் தடை உத்தரவு ஒன்று விதிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு சபாநாயகர் எடுத்த தீர்மானம் சட்ட விரோதமானது என தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர.
இன்று (19) உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த அடிப்படை உரிமை மனுவில், பாராளுமன்றத்தைக் கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானியை அமுல்படுத்துவதற்குத் தடை விதித்து உயர்நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்துள்ள நிலையில் பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு சபாநாயகரால் எடுத்த தீர்மானம் சட்டவிரோதமானது என அறிவிக்குமாறு கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்காத நிலையில், சபாநாயகர் பாராளுமன்றத்தைக் கூட்டியமை, நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என சுட்டிக்காட்டியுள்ள சரத் வீரசேகர, இதனூடாக மக்களின் உரிமைகளை மீறும் வகையில் செயற்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் உரிமையுடன் தொடர்புடைய தமது மனுவை விரைவில் விசாரணை செய்வதற்கு திகதியொன்றை வழங்குமாறும், சபாநாயகரின் செயற்பாடுகளில் தவறு காணப்படுவாதக உத்தரவு பிறப்பிக்குமாறும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர கேட்டுக்கொண்டுள்ளார்.
குறித்த மனுவின் பிரதிவாதிகளாக சபாநாயகர், சட்டமா அதிபர் மற்றும் பாராளுமன்ற பொதுச் செயலாளரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாராளுமன்றம் கூட்டப்பட்டதனால் நாட்டின் அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளதாகவும் இந்த செயற்பாட்டினால் சபாநாயகர் உட்பட பிரதிவாதிகள் அரசியலமைப்பு சீர்திருத்தத்தை மீறியுள்ளதாகவும் தீர்ப்பு வழங்குமாறு மனுதாரர் குறித்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment