அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் றிசார்ட் பதுயுதீன் தெரிவித்துள்ளார். இன்று சபாநாயகரை சந்தித்த பின்னர் மேற்படி நிலைப்பாட்டை வெளிப்படுத்திய அவர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் :
ஜனாதிபதி அவர்கள் தவறான செயலை செய்திருக்கின்றார். அவர் மக்கள் வழங்கிய வாக்குகளுக்கு எதிராக செயற்பட்டுள்ளார். எங்களுடடைய கட்சி ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு எதிராக வாக்களிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
ஆனாலும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும், மஹிந்த தரப்பினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவரும் அதேநேரம் மஹிந்த பக்கம் சாயவேண்டும் என கட்சிக்கும் அழுத்தம் கொடுத்துவருவதாக அறியக்கிடைக்கின்றது.
இதேநேரம் முஸ்லிம் காங்கிரஸின் இரு உறுப்பினர்கள் மஹிந்த தரப்பினருடன் பேச்சு நடாத்தி வருகின்றார்கள் என்ற செய்தியை அக்கட்சியின் தலைமைப்பீடம் மறுத்துள்ளது.
இதற்கிடையில் மஹிந்த தரப்புக்கு ஆதரவாகச் செயற்படும் சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவர்களையும் எம்.பி.க்களையும் சந்தித்து மஹிந்த தரப்புக்கு ஆதரவளிக்க வேண்டியதன் தேவை குறித்து வலியுறுத்தியுள்ளதாக இரு கட்சிகளின் வட்டாரங்களும் உறுதிப்படுத்தின.
மேற்படி இரு கட்சிகளையும் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்குமாறு கோரும் சமரசப் பேச்சுவார்த்தைகளில் தான் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் கட்சிகள் யாருக்கு ஆதரவு வழங்கினாலும் அவர்கள் செய்யும் ஒப்பந்தத்தை மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டும் என மக்கள் மத்தியிலிருந்து பலமான குரல்கள் ஒலிக்கத்தொடங்கியுள்ளது.
No comments:
Post a Comment