காட்டு தர்பார்! சல்மான் லாபீர்
குற்றுயிரும் குறையுயிருமாய் சாகத்துடித்துக் கொண்டிருக்கும் ஜனநாயகத்தை ஒட்டுமொத்தமாய் குழிதோண்டி புதைக்க புறப்பட்டு, தன் காட்டுதர்பார்களை கணக்கு பார்த்துக்கொண்டிருக்கிறது இலங்கை குடியரசு!
பிணைமுறி மோசடியுடன் மிஸ்ரர் கிளீன் (MR. CLEAN ) என்ற தனது மதிப்பை இழந்து நிற்கும் ரணில் என்ற மண் யானையை பிடித்து பானையில் அடைக்கப் போய் இன்று சொந்த செலவில் சூனியம் வைத்து விழி பிதுங்கி நிற்கிறார் ஜனாதிபதி சிரிசேன.
தன் அப்பாவோடு கோபித்து தம் குடும்பத்துக்கே சோறு போடும் வயலை எரித்த தன் பதின்ம வயது பைத்தியக்கார தனங்களை மீட்டிப்பார்த்து 'தான் இன்னும் பொலநறுவை சிறுவனாகவே இருக்கிறேன்' என உணர்ந்து வெட்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்!
சென்ற ஒக்டோபர் 26 ம் திகதியிலிருந்து தொடக்கி வைக்கப்பட்ட இந்த அதிகார பைத்தியத்துக்கான போராட்டம் இன்னும் ஓய்ந்தபாடில்லை.
கடந்த 3 வாரங்களாக மக்களின் இயல்பு வாழ்க்கை குழம்பிப்போய் கிடக்கிறது.
பிரதமர் எனும் ஆசனத்தை பிடிப்பதற்காக நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜனநாயக கற்பழிப்புகள் அருவருப்புக்களை தந்து கொண்டிருக்கின்றன.
இங்கு எல்லாமே அதிகாரம் மீதான பைத்தியங்கள்தான். சிரிசேனாவுக்கு இன்னுமொருமுறை ஜனாதிபதியாக வேண்டும் என்ற பைத்தியம். மகிந்தவிற்கு நாடு பற்றி சாம்பலானாலும் தான் கட்டி ஆள வேண்டும் என்ற பைத்தியம்.
62 இலட்சம் மக்கள் ஆணை கொடுத்து கொடுத்து ஆசிர்வதிக்கப்பட்டு தொடங்கப்பட்ட அந்த மைத்திரி - ரணில் ஆட்சி, எவையெல்லாம் கூடாதென்பதற்காக மக்கள் ஆதரவு கொடுத்தார்களோ அவையெல்லாவற்றையும் நிவர்த்திக்க தவறிக்கொண்டிருந்தது.
இவர்களின் வங்குரோத்து ஆட்சியை விமர்சித்து தம் ஆதரவை பெருக்கி மகிந்தவின் மொட்டு வயிறு வளர்த்துக்கொண்டிருந்தது. கடந்த உள்ளூராட்சி தேர்தல் அதை புடம்போட்டுக் காட்டியிருந்தது.
இப்படியே போனால் தன் அடுத்த ஜனாதிபதி சொப்பனம் என்னாவது என்று சிந்திக்க தொடங்கிய ஜனாதிபதிக்கு சட்டம், அரசியலமைப்பு எல்லாம் கண்ணை மூடி மறைக்க 'ஒக்டோபர் 26' இல் கதகளி ஆடத்தொடங்கினார். மகிந்தவுக்கு பட்டாபிஷேகம் நடந்தது.
அதிகார பைத்தியத்தில் ஆங்காங்கே உளறிக்கொண்டிருந்த மகிந்தவிற்கு இந்த சட்டவிரோத நியமனம் 'சர்பத்தாய்' அமைந்தது.
இங்கு வைத்துத்தான் ஜனாதிபதி தன் அராஜக ஆட்சிக்கான அத்தனை கதவையும் திறந்து கொடுக்கிறார். எதேச்சதிகாரத்தை கையிலெடுக்கிறார்.
பாராளுமன்றில் பெரும்பான்மை இல்லாத மகிந்தவுக்கு பிரதமர் பதவி கொடுத்தது தவறு. அவர் பெரும்பான்மையை நிரூபிக்க காலம்கொடுக்க பாராளுமன்றை ஒத்திவைத்தது தவறு.
ஈற்றில் பெரும்பான்மை காட்ட துப்பில்லாமல் போன போது ஒரேயடியாய் பாராளுமன்றை கலைத்து தன் வெகுளித்தனத்தை காட்டியது ஆகப்பெரும் தவறு!! அத்தனையும் சட்டப்படி தவறு!
சிரிசேனாவின் இந்த கண்மூடித்தனமான செயற்பாடுகளுக்கு உயர்நீதிமன்றம் கன்னத்தில் ஓங்கியறைந்து இடைக்காலத் தீர்ப்பொன்றை வழங்கி இந்த தேசத்தில் மருந்துக்கேனும் மிச்ச சொச்சம் நீதி இருக்கிறது என்று நிரூபித்து வரலாறு படைத்தது நீதித்துறை!
சிரிசேனா மூக்குடைபட்டு நின்றார்!
பாராளுமன்றம் மீண்டும் கூடியது. கடந்த ஆட்சியில் மகிந்த ராஜபக்ஷவும் அவரது குடும்பமும் உண்டுவிட்டு வீசியெறியும் எலும்புகளை உண்டு மகிழ்ந்து வாழ்ந்து கொண்டிருந்த அவரது 'அல்லக்கைகள்' பாரளுமன்றத்தில் தம் காட்டு தர்பார்களை காட்ட தொடங்கினர்.
ஒரு உயரிய சபையில் தம் 'அசல்களை' திரையிட்டுக்காட்டினர். கௌரவ சபாநாயகரின் ஆசனத்தில் தரம் 7 வரை கற்ற, கசிப்பு விற்று காசு எண்ணும் எம்பியொருத்தர் தண்ணீரூற்றி தன் கசிந்த புத்தியை பறைசாற்றினார்.
இன்னுமின்னும் கோமாளித்தனமாய் நடந்து கொண்டார்கள். இத்தனையையும் ஏவிவிட்டு சிரித்தபடி பார்த்துக்கொண்டிருந்தார் ராஜபக்ஷ மகான். என்னவொரு கேவலம்!!
இவர்களின் அடாவடிகளுக்கு மத்தியிலும் சபாநாயகர் சாமர்த்தியமாய் செயற்பட்டார். இதுவரை 3 முறை வாக்கெடுப்பு எடுத்து மகிந்தவுக்கு பெரும்பான்மை இல்லை! இல்லை! இல்லை!! என சொல்லியிருக்கிறது அந்த உயரிய சபை!!
ஆனால் மகிந்த தரப்பு 'படுக்கையை நனைத்த சிறுவனை போல' விளக்கம் சொல்லிக்கொண்டிருக்கிறது. பாராளுமன்றில் பெரும்பான்மை கிடைக்கும் வாய்ப்புள்ள ஒருவரை பிரதமராக நியமித்து அடுத்த அரசாங்கத்தை அமைக்க வேண்டிய பந்து மீண்டும் சிரிசேனாவிற்கே சென்றுள்ளது.
19ம் தேதி மீண்டும் கூடுகிறது பாராளுமன்றம்! அவைகளை தாண்டி டிசெம்பர் 7 'தீர்ப்பு நாள்'!!
மைத்திரி - ரணில் ஆட்சியின் ஏமாற்றத்தில் மெல்ல மலர்ந்து வந்து கொண்டிருந்த தாமரை மொட்டை அப்படியே வளரவிட்டு 2020 இல் பாராளுமன்ற தேர்தலில் ஒரு கை பார்த்திருக்கலாம்.
ஆனால் அதர்க்கிடையில் மகிந்தவின் அதிகார வெறி பிடித்த 'மக்குத்தனங்களால்' சேற்றில் விழுந்து கிடக்கிறது செந்தாமரை!
ஜனாதிபதியின் இந்த தீர்க்கதரிசனமற்ற செயல் மிகப் பழமை வாய்ந்த சுதந்திர கட்சியை சின்னாபின்னப்படுத்தியிருக்கிறது.
இப்போதைக்கு மைத்திரியின் ஜனாதிபதி கனவையும், மகிந்தவின் பிரதமர் கனவையும் சேர்த்து புதைப்பதற்கு பாராளுமன்ற முன்றலில் மரணக்குழி தோண்டப்படுகிறது!!
மறுபுறத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைக்குட்டிகள் தங்கள் தாய்யானை மண்யானை என்பதை உணர மறுக்கின்றனர். முட்டப்பயப்படுகின்றனர்.
ரணில் விக்கிரமசிங்க எண்கணக்கற்ற தேர்தல்களை தோற்று கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அவரை இந்நாட்டு மக்கள் வெறுக்கின்றனர் என்ற உண்மையை அவரும் அவரது அல்லக்கைகளும் உணர மறுக்கின்றனர்.
ஏதோ ஒரு கட்டத்தில் அன்றும் இன்றும் மைத்திரி வைக்கின்ற ஒப்பாரி யாதெனின் தனக்கு ரணில் விக்கிரமசிங்கவுடன் பயணிக்க முடியாதாம் என்பதாகும. அவ்வாறாயின் அவர் ஓட்டுகின்ற அந்த பஸ்ஸிலே ஏன் ரணில் விக்கிரமசிங்க ஏறவேண்டும். இறங்கி நின்று பார்க்க வேண்டியதுதான் அவர் இந்த நாட்டுக்கு செய்யவேண்டிய கடமை..
அவ்வளவு தான் சொல்லலாம்!!
0 comments :
Post a Comment