Saturday, November 10, 2018

ஒரே கொள்கையில் பயணிக்கின்றபோது பல கட்சிகள் எதற்கு ? இதயசுத்தியுடன் ஒற்றுமைப்படுவார்களா ? முகம்மத் இக்பால்

முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களும், மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களும் ஒன்றாக இருக்கின்ற புகைப்படமே இன்று சமூக வலைத்தளங்களில் ஆதிக்கம் செலுத்துகின்றது.

இவ்வாறு ஒன்றாக இருந்து புகைப்படம் எடுப்பது இதுதான் முதல் முறையல்ல. ஆனாலும் புனித உம்றா கடமைக்காக சென்று புனித மண்ணில் எடுத்த புகைப்படம் என்ற ரீதியில் இது முதல் முறையானதுதான்.

சமூகம் ஒற்றுமைப் படுவதென்றால் தலைவர்கள் ஒற்றுமைப்பட வேண்டும். தலைவர்கள் பிரிந்திருக்கின்ற நிலையில் சமூகத்தினால் ஒற்றுமைப்பட முடியாது.

தலைவர்கள் ஒற்றுமை படுவதென்பது வெறும் புகைப்படம் பிடிப்பதில் மட்டும் நின்றுவிடக் கூடாது. அது சமூக நோக்கு என்ற ஒரே கொள்கையின் அடிப்படையில் இதயசுத்தியுடன் இருக்க வேண்டும்.

இந்த இரு கட்சிகளும் தேர்தலில் ஒன்றை ஒன்று எதிர்த்து போட்டியிட்டாலும், ஏனைய அனைத்து நடவடிக்கைகளிலும் ஒன்றாகவும், ஒரே கொள்கையின் அடிப்படையிலுமே செயல்பட்டு வருகின்றார்கள்.

அதாவது கடந்த மகிந்தவின் அரசாங்கத்தினாலும், நல்லாட்சி அரசாங்கத்தினாலும் இயற்றப்பட்ட அனைத்து சட்டங்களுக்கும் இந்த இரு கட்சிகளும் ஆதரவாகவே வாக்களித்தார்கள்.

இவர்கள் ஊவா மாகாணசபை தேர்தலில் ஒன்றாக போட்டியிட்டபோதும் இந்த ஒற்றுமையை பற்றி பலரும் அன்று வாய் நிறைய புகழ்ந்து பேசினார்கள். ஆனாலும் அந்த ஒற்றுமை இதயசுத்தியுடன் இல்லாத காரணத்தினால் அதன் ஆயுள் நீடிக்கவில்லை.

கடந்த ஜனாதிபதி தேர்தலின்போதும் இந்த இரு கட்சி தலைவர்களும் ஒன்றாக பேசி இறுதி நேரத்தில் மகிந்தவுக்கு பாடம் படிப்பிக்க எண்ணியிருந்த நேரத்தில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.

அதுபோல் மாகாணசபை திருத்த சட்டத்தை பாராளுமன்றத்தில் அவசரமாக அரசாங்கம் சமர்பித்து வாக்கெடுப்புக்கு விட இருந்த நேரத்தில் அதனை தடுக்கும்பொருட்டு பாராளுமன்றத்தில் தலைவர் ரவுப் ஹக்கீமின் காரியாலயத்தில் அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்று கூடி அரசாங்கத்துக்கு படிப்பினைகளை மேற்கொள்ள இருந்த இறுதிக்கட்டத்தில் என்ன நடந்தது என்பதும் நாங்கள் யாவரும் அறிந்த விடயமாகும்.

இறுதியில் மாகாணசபை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்துவிட்டு முஸ்லிம் காங்கிரசின்மீது மட்டும் பழியை போட முயற்சித்த விவகாரமும் யாவரும் அறிந்தது.

இந்த இரு கட்சிகளும் தேர்தலில் மட்டும் பிரிந்து நின்று போட்டியிட்டு மக்களுக்கிடையில் பிரிவினைகளை ஏற்படுத்திவிட்டு, மற்றைய அனைத்து நடவடிக்கைகளிலும் ஒன்றாகவே செயல்படுகின்றார்கள். அப்படியென்றால் வெவ்வேறு கட்சிகள் எமக்கு எதற்கு ?

இரு கட்சிகள் என்றால் ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கைகள் இருக்கும். ஆனால் ஒரே கொள்கையில் பயணிக்கின்றபோது பல கட்சிகள் எதற்கு ?

எனவே எமது சமூக நோக்கினை கருத்தில்கொண்டு ஒரே கொள்கையில் பயணிக்கின்ற அனைவரும் ஒரே கட்சியில் பயணித்தால் சமூக ஒற்றுமை வலுப்பெறுவதோடு பிரிவினைகளை தடுக்க முடியும்.



No comments:

Post a Comment