தனிக்கட்சிக்கு சாதகமாகவும் பக்கச்சார்பாகவும் சபாநாயகர் கரு ஜயசூரிய வெளியிட்டு வருகின்ற கருத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானவை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரும் வெளிவிவகார அமைச்சருமான சரத் அமுனுகம கண்டனம் வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இருப்பதாக தெரிவித்த அமைச்சர், பிரதமரின் ஆசனத்தைக்கூட தீர்மானிப்பதற்கான அதிகாரம் சபாநாயகருக்கு கிடையாது என்றும் குறிப்பிட்டார்.
புதிதாக ஒரு தரப்பினரால் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான இயலுமை கிடைக்கும் வரை, முன்னைய நிலையை ஏற்க வேண்டிய நிலை தமக்கு எற்படுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய விசேட அறிக்கையூடாக இன்றைய தினம் தெரிவித்துள்ளார்.
நாடு குழப்பநிலையை எதிர்கொண்டுள்ள சந்தர்ப்பத்தில், இதுவரை காலமும் மௌனித்து இருந்தபோதிலும், நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பெரும்பாலான உறுப்பினர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்கும் மனசாட்சியின்படி செயற்படுவதும் எனது தேசிய பொறுப்பு என்பதை நினைவுகூருவதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டிருந்தார்.
ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அரசியலமைப்பிற்கு முரணான செயற்பாடு எனத் தெரிவித்தும் நாடாhளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிகளின் 116 பேர் கையொப்பத்துடன், தன்னிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை நியாயமானது என தாம் உணர்வதாக அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தார்.
நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அனைத்தும் அரசியலமைப்புக்கு முரணான, சம்பிரதாயத்திற்கு விரோதமானது என பெரும்பாலானோரின் நிலைப்பாடாக இருக்கும் நிலையில் புதிதாக ஒருதரப்பினரால் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான இயலுமை கிடைக்கும் வரை முன்னைய நிலையை ஏற்க வேண்டியநிலை னனக்கு ஏற்பட்டுள்ளது.
ஜனநாயக சமூகத்தில் இடம்பெறக்கூடாத இந்தச் சம்பவம், ஆயுதமின்றி மேற்கொள்ளப்பட்ட வெறுக்கத்தக்க செயல் என்பதை இறுதியாகக் கூறிக்கொள்ள விரும்புவதாக சபாநாயகர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் கொழும்பில் இன்று நடைபெற்ற ஆளுங்கட்சியினரது ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த வெளிவிவகார அமைச்சர் சரத் அமுனுகம, சபாநாயகரின் இந்தக் கருத்தை தாம் எதிர்ப்பதாக தெரிவித்தார்.
தனிப்பட்ட மற்றும் அரசியல் பழிவாங்கலுக்கான கருத்தாகவே சபாநாயகரின் இந்த அறிக்கை காணப்படுவதாகவும், ஒரு சபாநாயகர் என்ற வகையில் இவ்வாறு கூறுவது அவரது தகுதிக்கு ஏற்றவகையில் அமையாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
சில பிரச்சினைகளில் அரசியலமைப்பில் உள்ள பிரிவுகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்த அமைச்சர் சரத் அமுனுகம, எதிர்வரும் 16ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை 14ஆம் திகதி கூட்டுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு இடைக்கால வரவுசெலவுத் திட்டமே காரணம் என்றும் கூறினார்.
இந்த செயற்பாட்டிலுள்ள நடைமுறை விடயங்களை புரிந்துகொண்டு அதனை சபாநாயகர் விமர்சிக்க முடியாது என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா அரசியலமைப்புப்படி நாடாளுமன்றத்தை 2 மாதங்களுக்கு ஒத்திவைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இருப்பதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், சபையில் பிரதமரின் ஆசனத்தை தீர்மானிப்பதற்குரிய அதிகாரம்கூட சபாநாயகருக்கு கிடையாது என்றும் தெரிவித்தார்.
அரசியல் தேவைக்காக நாட்டை வழிநடத்த முடியாது என்றும், ஜனாதிபதியுடன் தனிப்பட்ட கலந்துரையாடலை நடத்திவிட்டு அதனை அறிக்கையிடவும் முடியாது என்று வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.
இதேவேளை, இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால, அரசியல் ரீதியான நெருக்கடியாக நிலமையை நாட்டிற்குள் ஏற்படுத்தும் விதமாக இந்த அறிக்கை சபாநாயகரினால் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
No comments:
Post a Comment