Friday, November 9, 2018

குறித்த நேரத்துக்குள் பணியை முடிக்காத ஊழியர்களை சிறுநீர் குடிக்க வைத்த கொடுமை!

சீனாவில் குறிப்பிட்ட நேரத்துக்குள் பணிகளை செய்து முடிக்காத தொழிலாளர்களை சிறுநீரை குடிக்க வைப்பது, மொட்டை அடிப்பது என தனியார் நிறுவன அதிகாரிகள் துன்புறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் குயீஸோஹு மாகாணத்தில் செயல்படும் தனியார் நிறுவனம் ஒன்று பணியாளர்களை மிக மோசமாக நடத்தி வருவதாக புகார் கூறப்படுகிறது. இந்த உள்புற அலங்கார பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தில் சரியான முறையில் விதிமுறைகளை கடை பிடிக்காத ஊழியர்களுக்கு நாள்தோறும் கடுமையான தண்டனைகளை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிறுவனம், அளவுக்கு அதிகமான அபராதம் விதித்ததுடன், கொடூரமான தண்டனைகளையும் வழங்கியுள்ளது. குறைந்த சம்பளத்துக்கு அளவுக்கு அதிகமான நேரம் பணியாற்றும்படி ஊழியர்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். சவரம் செய்து கொள்ளாதது, ஷு அணிந்து வராதது போன்ற காரணங்களுக்காக ஊழியர்களின் ஒரு மாத சம்பளத்தை அந்த நிறுவனம் பிடித்தம் செய்துள்ளது.

குறிப்பிட்ட நேரத்துக்குள் பணிகளை செய்து முடிக்காத ஊழியர்ளை சிறுநீரை குடிக்கச் செய்வது, கழிவறை தண்ணீரை குடிக்க வைப்பது, கரப்பான் பூச்சிகளை உயிருடன் சாப்பிட வைப்பது போன்ற தண்டனைகள் இந்த நிறுவனத்தில் சகஜமாக வழங்கப்பட்டுள்ளது. அதுவும் மற்ற ஊழியர்கள் கண் முன்பு இந்த தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

கடுமையான தண்டனைகளால் பணியில் இருந்து விலகிய சில ஊழியர்கள் தாங்கள் அனுபவித்த கொடுமைகளை மொபைல் போனில் படம் பிடித்து சமூகவலைதளங்களில் வெளியிட்டனர். அதன் பிறகே அந்த நிறுவனத்தின் அடாவடி செயல் வெளியுலகுக்கு தெரிய வந்தது.

இதையடுத்து விசாரணை நடத்திய அதிகாரிகள் அந்த நிறுவனத்தின் ஊழியர்களை கொடூரமாக நடத்திய மூன்று மேலாளர்களை கைது செய்தனர். சக தொழிலாளர்களிடம் மனிதநேயமற்ற முறையில் நடந்து கொண்டதற்காக அவர்களுக்கு 10 நாட்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com