இலங்கை தேசத்தில் கடந்த ஒக்டோபர் 05ம் திகதி ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறு வெளியாகியிருக்கின்றது. ஏட்டிக்குப போட்டியாக பாடசாலைகள் சாதனைகள் நிகழ்த்தியதாக மார்தட்டிக்கொள்ளும் காட்சிகள் அரங்கேரத் தொடங்கியுள்ளது.
இப்பரீட்சைக்கு நாடளாவிய ரீதியில் 355000 மாணவச் செல்வங்கள் தோற்றியிருக்கின்றனர். 340000 மாணவச் செலவங்கள் சித்தியடையத் தவறிய மாணவர்கள் என்கிற புள்ளி விபரக் கணிப்பு கல்வியலாளர்கள் மத்தியில் பேசு பொருளாக விமர்சனத்துக்குட்படுத்தப்பட்டுள்ளது. வெறும் 15ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றவர்கள் என்கிற பரீட்சை முடிவுகளும், அதன் பின்னாலுள்ள விடயங்கள் பற்றி அலசுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
பிஞ்சு உள்ளங்களை தரப்படுத்தலின் ஊடாக, பிள்ளை உளவியலில் தோற்றுப்போகின்ற சமூகமாக இலங்கை தேசத்தின் வாழும் பலரும் ஆளாக்கப்பட்டுள்ள துர்பாக்கிய நிலை மேலோங்கியுள்ளது. பொதுவாக இப்பரீட்சைக்கு அதி முக்கியத்துவம் கொடுக்கும் பிரசேதங்களில் கிழக்கு மாகாணம் பிரதான இடத்தினை வகிக்கிறது. அங்குள்ள கற்றல் சூழலிலிருந்து இக்கட்டுரையை பதிவு செய்வது பொருத்தமானதாகவிருக்கும்.
இலங்கையில் இப்பரீட்சை முறைமை அறிமுகப்படுத்தியமைக்கு இரு பெரும் பிரதான காரணிகள் உண்டு. முதலாவது மாணவர்கள் தொடரச்சியான கற்றல் நடவடிக்கையினை மேற்கொள்வதுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்குதல் (இதில் பெற்றோர் யாராவது ஒருவர் அரசாங்க அலுவலராக இருக்குமிடத்து அந்தக் கொடுப்பனவு வழங்கப்படுவதில்லை) இரண்டாவது சித்தியடைந்த மாணவர்களை நகர்ப்புறங்களில் அமையப்பெற்றுள்ள அரசாங்கம் தரப்படுத்தியுள்ள அதி சிறந்த பாடசாலைகளில் கற்பதுக்கான சந்தர்ப்பம் வழங்குவது. இவை இரண்டுமே இதன் இலக்கு. ஆனால் அதிகமாக சந்தரப்பங்களில் இவை இரண்டினையும் இழந்து நிற்கின்ற மாணவர்கள் அதிகம் பேர்.
குறித்த இரு விடயங்களும் இல்லாமல் போகிறது என்பதுக்காக கற்றல் நடவடிக்கையை கைவிடுதல் என்ற வகைக்குள் இக்கட்டுரை வாசகர்களை அழைத்துச் செல்லவில்லை. மாறாக அதிலுள்ள உளவியல்சார், மாணவர்களின் தரப்படுத்தல் அதன் பின்னாலுள்ள விடயங்களை பேசுவதே கட்டுரையின் நோக்கமாகும்.
முதலாவதாக வழங்கப்படும் ஊக்குவிப்புக் கொடுப்பனவு அரச அலுவலர்களின் பிள்ளையாயின் வழங்கப்படமாட்டாது. இது ஒருபுறமிருக்கு இரண்டாவது சந்தர்ப்பமான அதிசிறந்த பாடசாலை அனுமதியினை அதிகமான எந்தத்தரப்பினரும் பெற்றுக்கொள்வதில்;லை. குறித்த 5ம் தரப் பரீட்சைக்கு படாத பாடுபட்டு, கற்றுத் தேறி சித்தியடைந்த பெரும்பாலான மாணவர்கள் வேறு எந்தப் பாடசாலைக்கும் சென்று கல்வி கற்பதுக்கு விரும்பமற்றே அவர்களின் பெற்றோர்கள் இருக்கின்ற சூழல் நிறையவே. அவ்வாறு சித்திபெற்ற மாணவர்களின் பெற்றோரிடம் கேட்கப்படுகின்ற வினா உங்கள் பிள்ளைகளை எந்தப்பாடசாலையில் அனுமதிக்க உத்தேசம் என்று. அதற்கான பதில் 'சித்தியடைந்த பாடசாலையிலே எனது பிள்ளை கல்விகற்கட்டும் என்று கூறிவிடுவர்' அதற்கு பொருளாதார நிலையையும் காரணம் காட்டிவிடுவர். ஆனால் அந்தப் பரீட்சைக்கு தயார்படுத்த எடுத்துக்கொண்ட முயற்சி பற்றி சற்றும் சிந்திக்கத்தலைப்படவில்லை.
இது இவ்வாறிருக்க, இன்னுமொரு புறம், மாணவச் செல்வங்களுக்கான கற்றல் என்கிற வகையைத் தாண்டி பெற்றோருக்கான போட்டிப் பரீட்சையாகவே அநேகமான இடங்களில் பாரக்கக் கிடைக்கின்றது.
இதில் இன்னுமொன்றினையும் பதிவு செய்வது அவசியம். இவ்வளவு தூரம் இந்தக் கல்வித் திட்டத்துக்கு தங்களாலான பணிகளை சிறப்பாகச் செய்து, சிறுசுகளை வளப்படுத்திய ஆசான்கள் இதில் போற்றப்படவேண்டியவர்கயே. தங்களுக்கு வழங்கப்பட்ட பணினை எவ்வித தொய்வுமின்ற ஆற்றுகின்றவர்கள் அவர்கள். விமர்சனம் அவர்களுக்கு புறம்பானதே.
கல்வி என்பது தனது எதிர்கால வளர்ச்சி நிலைக்கு உந்து சக்தியாக அமைதல் வேண்டும். அல்லது எதாவது ஒரு உயர்நிலைப் பதவிக்குச் செல்வதுக்கு பயன்பெறுதல் வேண்டும். இவை இரண்டும் இதில் இல்லாமலாகிப்போன நிலைபற்றிப் பேசுதல் அவசியம்.
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறு எந்தவொரு மாணவனின் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருந்திருக்கின்றதா என்கிற கேள்விக்கு பதிலளிக்கப்படுதல் அவசியம். அனேகமான பெற்றோர்களும், பாடசாலைகளும் 5ம் தரப் பரீட்சைக்கு கொடுக்கின்ற முக்கியத்துவத்தினை பின்னரான காலங்களில் வழங்குவதே இல்லை என்கிற கசப்பான உண்மையை புரிந்துகொள்ளுதல் அவசியம்.
இயந்திரம் போல் இயங்கச் செய்து பெறுபேற்றை பெற்றுக்கொண்டதன் பிற்பாடு அதுமாத்திரமே பரீட்சையும், பெறுபேறும் என்கிற மனோநிலை அதிகமான பெற்றோருக்கு வந்துவிடுகின்றது. அதன் பிற்பாடுள்ள சாதாரண தரம், உயர்தரங்களில் எவ்வித கவனமும் செலுத்துவதில்லை. அதனால் 5ம் தரத்தில் சித்திபெற்ற அதிகளவான மாணவர்கள் தத்தமது எதிர்காலத்தை தொலைத்தே வாழுகின்ற சூழல் அதிகரித்துப் போயிருப்பது கவலைக்குரியதே.
உயர் நிலையில் பதவி வகிக்கும் அதிகமானவர்கள் 5ம் தரப் பரீட்சையில் சித்தி பெறாதவர்கள் என்கிற புள்ளிவிபரத்தினையும் இவ்விடத்தில் பதிவு செய்வது சிறப்பே.
பாடசாலைகள் 5ம் தரத்துக்கு காட்டிய ஆர்வமும், முயற்சியும் பெறுபேறு கிடைக்கபபெற்றே கனமே கைழுவும் நிலையினையும் காணக்கிடைக்கிறது. சாதாரண தரத்துக்கோ, அல்லது உயர் தரத்துக்கோ அப்படியான ஒரு தியாகத்தை, முயற்சியை எடுத்திருப்பார்களா என்றால் ஒரு சில பாடசாலைகளைத் தவிற மற்ற அனைத்துப் பாடசாலைகளும் கேள்விக் குறிக்குள் அடங்கிக்கொளிகின்றது. ஆக, 5ம் தரம் பரீட்சையும், பெறுபேறும் ஒரு தரப்படுத்தல் அல்ல. அது வெறும் கொடுப்பனவுக்கான பரீட்சை என்பதனை புரிந்துகொள்ளுதல் வேண்டும்.
அரசாங்கம் தனது வருடாந்த நிதி நிலமைக்கு ஏற்றால்போல் ஊக்குவிப்புத் தொகை வழங்கும் திட்டத்துக்கு அமைய வெட்டுப்புள்ளியை தீர்மானிக்கின்றது. சாதாரணமாக பரீட்சை ஒன்றில் 80புள்ளிகளைப் பெறும் மாணவன் விசேட சித்தி பெற்ற மாணவனாகக் கணிக்கப்படுகின்றான். அப்படியான சூழலில் இம்முறை கிழக்கு மாகாணம் அம்பாரை மாவட்டத்தில் 163புள்ளியை வெட்டுப்புள்ளியாக அரசாங்கம் தீர்மானித்திருந்தது. அவ்வாறு 25மாவட்டங்களுக்கும் வெட்டுப்புள்ளி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் இரு பாடங்களிலும் 80 புள்ளிகள் என மொத்தமாக 160புள்ளிகளைப் பெற்ற ஒரு மாணவன் சித்தி பெறவில்லை என்கிற வகைப்படுத்தலில் உள்ள நியாயங்கள் என்ன?
குறித்த மாணவன் சித்திபெறாதவார? ஊக்குவிப்புத் தொகை பெற தகுதியற்றவரா? இதுவே இன்றுள்ள மிக முக்கிய கேள்வி. ஆனால் இந்த மாணவனுக்கு வேறு சிறந்த பாடசாலைக்கு செல்வதுக்கான தகுதி உண்டா? இல்லையா என்பதுவும் அதற்குப் பின்னாலுள்ள கேள்வியே.
விளையாடும் மனோநிலை கொண்ட மாணவச் செல்வங்களின் முதுகுகளில் புத்தக மூட்டைகளை சுமத்திவிட்டுச் சிலாகித்துக்கொள்ளும் பெற்றோர்கள் ஒரு வகை கருணைக் கொலையாளிகளே. அநேகமான பாடசாலைகளில் 5ம் தரப் பரீட்சைக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் பொருட்டு உள்ளகத் தரப்படுத்தல் நடைபெற்று அதி கூடுதலான புள்ளிகளைப் பெற்ற மாணவர்களை தேசிய ரீதியான பரீட்சைக்கு தயார்படுத்தத் தயாராகிவிடுகின்றனர் பாடசாலை நிருவாகம். ஓட்டுமொத்த மாணவர்களையும் இணைத்துக்கொண்டால் விகிதாசார ரீதியில் பாடசாலை பின்நகர்ந்துவிடும் என்கிற நம்பிக்கை ஆட்கொள்வதினால் இந்த விடயம் நடந்தேறுகின்றது. ஆனால் சாதாரண தர, உயர் தர பரீட்சைகளுக்கு இவ்விடயங்கள் பற்றிய யாரும் எந்த அக்கரையும் கொள்வதில்லை.
கல்வியை ரசித்து, ருசித்துப் படிக்கவேண்டிய வயதில் திணித்துக் கற்கவைக்கும் ஒரு கல்வியாகவே 5ம் தரக் கல்வியை கண்டுகொள்ள முடிகின்றது. சிறுவர் உரிமை, சமவாயம் பற்றிப் பேசுகின்ற சர்வதேசமும், தொண்டு நிறுவனங்களும் இது விடயத்தில் மௌனிகளாக இருப்பது ஏனோ? இந்தக் கல்வி முறை சிறுவர்களை வாட்டி எடுக்கின்ற கல்வி முறை, மாற்றம் வேண்டும் என்கிற குரல்களின் சத்தம் உரத்துச் சொல்லப்படவில்லையோ என்கிற சந்தேகம் வலுப்பெறுகின்றது.
ஆக, 5ம் தரப் பரீட்சை மீள் பரிசீலனைக்குட்படுத்தப்டுதல் வேண்டும். தரப்படுத்தல், வெட்டுப்புள்ளி விடயங்கள் மாணவச் செல்வங்களிக் மனதை பாதிக்காத வண்ணம் அமைதல் அவசியம்.
ஒரிரு புள்ளிகளினால் தகுதியற்றவர் என்கிற நிலைக்குள் வலிந்து தள்ளப்பட்ட அதிகமான மாணவர்கள், அவர்களுடைய பெற்றோர்கள் அழுது புலம்பி கவலை தோய்ந்த முகத்தோடு இன்னும் மீளாமலிருக்கின்ற சோகக் காட்சிகள் நிரம்பியே கிடக்கிறது.
பொதுவாக பரீட்சைக்கென்று ஒரு நியதி இருக்கின்றது. அந்த நியதி இங்கும் அரங்கேற்றப்பட்டிருக்கின்றது. சிலர் வெல்ல பலர் தோற்றகடிகப்படும் சித்தாந்தம் இங்கும் பரீட்சித்துப்பார்க்கப்பட்டுள்ளது. குறித்த சித்தாந்தம் சிறுவர்களையும் விட்டுவைக்கவில்லை என்பதை எண்னுகிறபோதே கவலை கொள்ளச் செய்கின்றது.
வாழ்க்கையினை வெற்றித் கொள்ளத் தயாராகும் வயதினில் தோல்வியால் துவண்டுபோகின்ற நிலைக்குப் பிள்ளைகளைத் தள்ளிவிடும் பரீட்சைக்கு நம்மில் அதிகம்பேர் வரிந்துகட்டிக் கொண்டு வரிசையில் நிற்கும் நிலை பற்றி பேசாமல் இருக்கமுடியாது.
இந்தக் கல்வி முறையால் வருடாந்தம் இழந்த குழந்தைகள் எத்தனை , உள ரீதியாக பாதிகப்பட்ட குழந்தைகள் எத்தனை. அவ்வாறு இழந்ததுக்குரிய நியாயங்கள் என்ன? உயர் தரத்தில் தோற்றுப்போனதுக்கான தனது ஆன்மாவை இழந்தால் அது சிந்தனையின் முதிர்ச்சி அல்லது எதிர்காலம் பற்றிய அதீத பிரக்ஞை என்கின்றோம்.
ஐந்தாம் (5) தரத்தில் தனது ஆன்மாவை இழந்ததுக்கு எதனைக் காரணமாகச் சொல்லப்போகின்றோம். ஆக சுயமாக சிந்தித்து சரி பிழை, எதிர்கால இலக்கு என்பனவற்றை தீர்மானிக்க முடியாத ஒன்றுக்குகாகவா இத்தனை படையெடுப்புகளும் ஆரவாரங்களும்.
குழந்தை உலகைப் புரிந்து கொண்டு, அக்குழந்தைகளுக்காக வாழும் பெற்றோர்களாக வாழப்பழகுவோம். வலிந்து கற்பிக்கும் கல்விக்குள் எந்த ஆத்மார்த்தங்களும் இல்லை என்கிற உணர்வு மேலெழும் போதே இன்னும் ஒரு படி மேல்நோக்கி இச்சமூகம் நகரத்தொடங்கும்.
நன்றி தினகரன் - 2018.11.02
No comments:
Post a Comment