Friday, November 9, 2018

அரச வங்கிகள் நிதியமைச்சின் கீழ்; பாதுகாப்பு அமைச்சின் கீழ் பொலிஸ்.

சட்ட ஒழுங்கு அமைச்சின் கீழ் இருந்த பொலிஸ் திணைக்களம், பாதுகாப்பு அமைச்சின் கீழும், அரச நிர்வாக அபிவிருத்தி அமைச்சின் கீழ் இருந்த அரச வங்கிகள் மற்றும் அவற்றை நிர்வகிக்கும் நிறுவனங்கள் என்பன நிதி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 43 ஆம் பிரிவுக்கு அமைய, நியமிக்கப்பட்ட அமைச்சர்களும் அவர்களின் கீழ் வருகின்ற விடயங்களும் தொடர்பான 2096/17 எனும் இலக்கமுடைய அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள குறித்த அறிவித்தலுக்கு அமையவே ஏற்கனவே இருந்த ஒரு சில அமைச்சுகளுக்கான விடயங்கள் இவ்வாறு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதன் அடிப்படையில் கடந்த அரசாங்கத்தில் சட்ட ஒழுங்கு அமைச்சின் கீழ் இருந்த பொலிஸ் திணைக்களம் ஜனாதிபதியின் கீழுள்ள, பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.


முப்படை, சிவில் பாதுகாப்பு திணைக்களம், தேசிய மாணவர் பயிற்சி படையணி, கடற்கரை பாதுகாப்பு திணைக்களம், தேசிய ஊடக மத்திய நிலையம் உள்ளிட்ட 17 நிறுவனங்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ளன.

அரச நிர்வாக அபிவிருத்தி அமைச்சின் கீழிருந்த அரச வங்கிகளும் அவற்றை நிர்வகிக்கும் நிறுவனங்கள் அத்துடன் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சின் கீழ் இருந்த, இலங்கை மத்திய வங்கி இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் என்பன பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் கீழுள்ள நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

அரச நிர்வாக அபிவிருத்தி அமைச்சின் கீழ் காணப்பட்ட ஸ்ரீலங்கன் விமான சேவை மற்றும் இலங்கை விமான சேவை ஆகியன மீண்டும் நிமல் சிறிபால டி சில்வாவின் கீழுள்ள போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment