ஹைதியில் ஊழலுக்கு எதிரான போராட்டம்: 6 பேர் பலி
கரீபியன் தீவுகளில் அமைந்துள்ள ஹைதி நாட்டில் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 6 பேர் பலியாகினர். 5 பேர் காயமடைந்தனர்.
ஹைதி அதிபர் ஜொவினெல் மோஸ் அந்நாட்டில் எழுந்த ஊழல் விசாரணையை முறையாக நடத்தத் தவறியது தொடர்பாக அதிபர் ராஜினாமா செய்யுமாறு எதிர்க் கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இந்நிலையில் ஹைதி தலைநகர் போர்ட்-அயு-பிரின்ஸில் அதிபர் ஜொவினெல் மோஸ்ஸின் ஊழல் ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் ஞாயிற்றுக்கிழமை பேரணி சென்றனர். இதில் போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் ஏற்பட்ட மோதலில் 6 பேர் பலியானதாகவும், 5 பேர் காயம் அடைந்ததாகவும் பலர் கைது செய்யப்படுள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து ஹைதி போலீஸார் தரப்பில், ''அமைதியாக நடந்த பேரணியில் போலீஸாரை நோக்கி கற்கள் வீசப்பட்டன. இதனைத் தொடர்ந்தே வன்முறை வெடித்தது'' என்று கூறப்பட்டுள்ளது.
ஹைதி நாட்டில் அண்மையில் பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலை உயர்த்தப்பட்டது. இந்த அறிவிப்பு மக்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து மக்கள் தலைநகர் போர்ட்-அயு-பிரின்ஸில் திரண்டு அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டமும் வன்முறையில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment