Tuesday, November 13, 2018

லண்டன் கோயிலொன்றில் 50 ஆண்டு பழமைவாயந்த கிருஷ்ணன் சிலை கொள்ளை. வலைவிரித்துள்ள ஸ்கொட்லன்ட் யார்ட்

லண்டனில் புகழ்பெற்ற சுவாமிநாராயன் கோயிலில் உள்ள 50 ஆண்டுக்கால கிருஷ்ணர் சிலைகள் தீபாவளியன்று கொள்ளையடிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து, சிலைகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஸ்காட்லாந்து யார்டு போலீஸார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

லண்டனின் புறநகரான நியாஸ்டன் நகரில் வில்லஸ்டேன் லேன் பகுதியில் புகழ்பெற்ற சுவாமிநாராயன் கோயில் கடந்த 1995-ம் ஆண்டு கட்டப்பட்டது. இங்கிலாந்தின் முதல் இந்து கோயிலாகவும், ஐரோப்பாவில் முதல் பாரம்பரிய கற்கோயிலாகவும் சுவாமிநாராயன் கோயில் உள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமிதரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தீபாவளிப்பண்டிகை கொண்டாட்டம் முடிந்து கோயில் திறக்கும் போது, அங்குள்ள 50 ஆண்டு பழமைவாய்ந்த கிருஷ்ணர் சிலைகளைக் காணாதது கண்டு கோயில் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து உடனடியாக போலீஸாருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த ஸ்காட்லாந்து யார்டு அதிகாரிகள், அங்குள்ள கண்காணிப்பு கேமிராவை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

கோயிலின் தலைவர் குருஜிபாய் கேராய் கூறுகையில், ‘‘கோயிலில் உள்ள ஹரேகிருஷ்ணா மூர்த்தி சிலைகள் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வைத்துப் பூஜிக்கப்பட்டு வருகின்றன. அனைத்துச் சமூகத்துக்கும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்தச் சிலைகள் கருதப்பட்டது. தீபாவளிப்பண்டிகைக்காக ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்திருந்தனர். அப்போதெல்லாம் கிருஷ்ணர் சிலை இருந்தது. ஆனால், அதன்பின் கோயில் பூட்டப்பட்டு, மீண்டும் திறக்கப்படும்போது சிலைகளைக் காணவில்லை.

உண்மையில் அந்தக் கிருஷ்ணர் சிலைகள் தங்கத்தால் உருவானவே அல்ல. கொள்ளையர்கள் தங்கச்சிலை என்று நினைத்துத் திருடியிருக்கலாம், ஆனால், பித்தளைச் சிலையாகும்’’ எனத் தெரிவித்தார்.



கோயில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட கிருஷ்ணர் சிலையின் புகைப்படம்


ஸ்காட்லாந்து யார்டு போலீஸார் வெளியிட்ட அறிவிப்பில், வெள்ளிக்கிழமை நள்ளிவரு 1.50 மணிக்கு எங்களுக்கு சுவாமிநாராயன் கோயிலில் கொள்ளை நடந்துவிட்டதாகப் புகார் வந்தது. உடனடியாக அதிகாரிகள் கோயிலுக்குச் சென்று ஆய்வு நடத்தினார்கள். கோயிலில் சிலைகள் மட்டுமின்றி, பணம், பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம் எனத் தெரிவித்தனர்.

கோயிலின் நிர்வாகக் குழு உறுப்பினர் உமாங் ஜேஸானி கூறுகையில், இந்தக் கோயில் இங்கு எழுப்பப்பட்ட நாளில் இருந்து வழிபாடு நடந்து வருகிறது. நிச்சயம் சிலைகள் பாதுகாப்புடன் திரும்பி வரும் என நம்புகிறோம். சிலைகள் கொள்ளைபோனது அனைவருக்கும் வருத்தமான செய்தியாகும். சிலைகள் விரைவில் கிடைக்க பிரார்த்திப்போம் எனத் தெரிவித்தார்.

அமெரிக்காவில் உள்ள யுனிவர்ஸல் சொசைட்டி ஆப் இந்துயிஸம் அமைப்பின் தலைவர் ராஜன் ஜெட் விடுத்த அறிக்கையில், லண்டன் மேயர் சித்திக் கான், உள்ளூர் அதிகாரிகள் உடனடியாக கூடுதல் கவனம் செலுத்தி இந்த விவகாரத்தில் விரைந்துசெயல் வேண்டும்.

சுவாமிநாராயன் கோயில் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்ட செய்தி உலக அளவில் இந்துக்களுக்கு அதிர்ச்சியானதாகும். கடினமாக உழைக்கும், ஒற்றுமையுடன், அமைதியாக வாழும் இந்து சமூகத்துக்கு இந்த செய்தி வேதனையை அளிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com