குட்டிமணி குழுவை காட்டிக்கொடுத்தது பிரபாகரனே! 37 ஆண்டு- களின் பின்னர் போட்டுடைக்கின்றார் குட்டிமணியின் சட்டத்தரணி.
“அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எங்களுக்கு நன்று விளங்குகிறது. இதை தம்பியிடமும் சொல்லுங்கள். நீயாவது இயக்கத்தை நல்லபடி நடாத்தி தமிழ் ஈழத்தை காணும்படி அவனிடம் சொல்லுங்கள்”. குட்டிமணி
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகள் என்று சொல்லப்படுகின்ற குட்டிமணி, தங்கத்துரை ஜெகன் குழுவினரை பிரபாகரனே காட்டிக்கொடுத்ததாக பல்வேறு தரப்பினர் குற்றஞ்சாட்டிவந்தனர். இக்குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என புலிகள் தரப்பு மறுத்து வந்தனர்.
இந்நிலையில் முப்பத்தியேழு வருடங்களின் பின்னர் குட்டிணி, தங்கத்துரை , ஜெகன் குழுவினருக்கான சட்த்தரணிகள் குழாமின் ஒருவரான சட்டத்தரணி சிறிஸ்கந்தகுமார் அவர்கள், பிரபாகரன் தான் தங்களை காட்டிக்கொடுத்தாக பனாகொடை இராணுவ முகாமில் குட்டிமணியுடனான முதலாவது சந்திப்பில், குட்டிமணி தெரிவித்தாக எழுதியுள்ளார்.
முகநூலில் இடம்பெறும் கருத்தாடல் ஒன்றில் மேற்படி விடயத்தை போட்டுடைத்துள்ள சட்டத்தரணி சிறிஸ்கந்தகுமார் அவர்கள் எழுதியுள்ளமை வருமாறு:
1981ம் ஆண்டு நான் கொழும்பில் வழக்கறிஞராக சத்தியப்பிரமாணம் எடுத்து உடுப்பிட்டி எம். பி. - எம். சிவசிதம்பரம் அவர்களுக்கு ஜுனியராக வேலை செய்து கொண்டிருந்த காலமது. பயங்கரவாத தடைச்சட்டம் அறிமுகமாகி அச்சட்டத்தின் கீழ் வழக்குகள் தொடங்கிய காலம். 1982 ஆரம்பத்தில்தான் (அல்லது 1981 கடைசி) குட்டிமணி, ஜெகன், தங்கதுரை மற்றும் சிலர் மணலாற்றில் இராணுவத்தால் கைதானார்கள். அந்நாட்களில் இந்த கைது தமிழர் விடுதலை கூட்டணியின் அரசியலை வெகுவாக பாதித்தது. கூட்டணி எம்.பி க்கள் கதிகலங்கினர்.
குட்டிமணி, ஜெகன், தங்கதுரை கைதானவுடன் உடனடியாக பனாகொடை இராணுவ முகாமுக்கு மாற்றப்பட்டனர். அந்த முகாம் பலத்த பாதுகாப்புடைய முகாம். பயங்கரவாத சட்டத்தின்கீழ் கைதானவர்களை யாரும் பார்க்கமுடியாது. எனவே கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆட்கொணர்வு மனு (Habeas corpus) தொடங்கப்பட்டு, அந்நாளில் மிகச்சிறந்த வழக்கறிஞரான கொல்வின் ஆர் டி சில்வா, ராணி வழக்குரைஞர், Q.C., அவர்களை நியமித்து வழக்காடி கைதானவர்களை பார்க்க அனுமதி பெறப்பட்டது. அந்த அனுமதி சட்டத்தரணிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. இதன்போது உடுப்பிட்டி எம். பி. - எம். சிவசிதம்பரம் பின்னால் இருந்து இயங்கினாரே தவிர தன்னை பெரிதாக இவ்வழக்கில் அடையாளம் காட்டவில்லை.
(விடயத்திற்கு வருவதற்காக பல சில்லறை-சுவையான விடயங்களை இங்கே தவிர்க்கிறேன். தேவையானால் பின்னர் தரப்படும்).
குட்டிமணி, ஜெகன், தங்கதுரை குழுவினரை சந்திக்க இருந்த சட்டத்தரணி பட்டியலில் முதலிடம் வகித்தவர் சட்டத்தரணி கரிகாலன் நவரத்தினம். அந்நாளில் எனது சட்ட குரு என்று கூட சொல்லலாம். அவருடன் நான், காலம் சென்ற ஜி குமாரலிங்கம், தற்காலம் கொழும்பில் கொடிகட்டிப்பறக்கும் கே.வி. தவராஜா, அன்மையில் காலஞ்சென்ற வட்டுக்கோட்டை பாக்கியநாதன் மேலும் இன்னும் சிலர். எங்களுடன் வருவதாக இருந்த SJVயின் மகன் சந்திரகாசன் கடைசி நேரத்தில் காலை வாரிவிட்டார்.
நாங்கள் 1982ம் ஆண்டு (மாதம், திகதி ஞாபகம் இல்லை) ஒரு நாள் சனிக்கிழமை மாலை 3 மணிபோல வான் ஒன்றில் பனாகொடை இராணுவ முகாமை சென்றடைந்தோம். பலத்த சோதனையின் பின் தடுப்பு காவலில் இருந்த ஒவ்வொருவரையும் இரு சட்டத்தரணிகள் பார்ககலாம் என்று சொல்லப்பட்டது. அந்த அடிப்படையில் குட்டிமணியை கரிகாலன் நவரத்தினம் சந்திப்பதாக முடிவாயிற்று. உடனே அவர் என்னை தன்னுடன் சேர்ததுக்கொண்டார்.
ஒரு சிறிய அறையில் நாங்கள் அழைத்துச் செல்லப்பட்டு காத்திருக்கையில் குட்டிமணி அழைத்து வரப்பட்டார். மற்ற அறைகளில் மற்றவர்கள் சந்தித்துக் கொண்டார்கள். இது அவர்கள் கைதாகி ஏறக்குறைய 6 மாதங்கள் கடந்திருக்கலாம் என நினைக்கிறேன். எங்களை கண்டவுடன் குட்டிமணி கண்கலங்கினார். எங்கள் இருவரையும் குட்டிமணிக்கு முன்பின் தெரியாது. இருப்பினும் சாவு நிச்சயம் என்று தெரிந்த பின்னர் ஒரு தமிழரை சந்திக்க சந்தர்ப்பம் கிடைக்குமா என்ற மனநிலையில் இருந்தவருக்கு எங்களை கண்டவுடன் மீண்டும் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டது என்றே கூறவேண்டும்.
எங்கள் அறிமுகத்தின் பின்னர் குட்டிமணி முதலில் இவ்வாறு கூறினார்.
“அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எங்களுக்கு நன்று விளங்குகிறது. இதை தம்பியிடமும் சொல்லுங்கள். நீயாவது இயக்கத்தை நல்லபடி நடாத்தி தமிழ் ஈழத்தை காணும்படி அவனிடம் சொல்லுங்கள்”.
மட்டக்களப்பை சேர்ந்த எனக்கு அந்நாட்களில் இயக்கங்களின் அரிச்சுவடே தெரியாது. ஆகவே நான் கரிகாலன் நவரத்தினம் அவர்களை உடனே கேட்டேன், அண்ணா, யார் அந்த தம்பி?
உனக்கு தெரியதேவையில்லை, பேசாமல் இரு, என்றார். நானும் அடங்கி விட்டேன்.
அன்றைய சந்திப்பு ஒரு மணி நேரம் நடந்தது. அரசியலை விட குடும்ப விடயம், வீட்டிற்கு என்ன சொல்வது போன்ற விடயங்களும் பேசினோம். ஒவ்வொரு கிழமையும் சந்திப்பதாக கூறி வெளியே வந்தோம். வந்தவுடன் கரிகாலன் நவரத்தினம் அவர்களிடம் நான் மீண்டும், அண்ணா, யார் அந்த தம்பி என்று கேட்டேன்.
சிறிது சினத்துடன் எனக்கு விளக்கினார். தம்பியின் பெயர் பிரபாகரன். அவன்தான் இனி இயக்கத்தை தொடர்ந்து நடாத்துவான். ஆனால், நீ இதை யாரிடமும் உளறி விடாதே. உளறினால் உன்னையும் போட்டு தள்ளிவிடுவார்கள். உன்னை இங்கு கூட்டி வந்தது, என் தப்பு என்று கூறிமுடித்தார்.
நானும் பயத்தில் அதை பெரிதாக யாரிடமும் பகிரங்கமாக சொல்லவில்லை. ஆனால் நெருங்கிய நண்பர்களிடம் பகிர்ந்தேன். இந்த சந்திப்பை தொடர்ந்து பல தடவைகள் பனாகொடை முகாமுக்கு சென்று வந்தேன். குறிப்பாக சீனியர் சிவசிதம்பரம் அவர்களுடன்.
1983 கலவரத்தின்பின் கூட்டனியினர் இந்தியா தமிழ் நாட்டில் குடியேறினர். 1984 -85 கால கட்டத்தில் கரிகாலன் நவரத்தினம் அவர்கள் சென்னையில் இருந்து ஜூனியர் விகடன் பத்திரிகையில் “குட்டிமணி ஜெகன் தங்கதுரை” என்ற பெயரில் ஒரு தொடர் சரித்திரம் எழுதினார். சென்னையில் அவரை நான் சந்தித்த பொழுதெல்லாம் குட்டிமணி சொன்ன அந்த ‘தம்பி’ விடயத்ததையும் வெளிப்படுத்தும்படி வேண்டினேன். எது சரி, எது பிழை என்பதை தவிர்த்து உண்மையான சரித்திரம் என்னவென்பதை மக்கள் அறியவேண்டும் என்பதே எனது விருப்பமாக இருந்தது. ஆனால் கரிகாலன் நவரத்தினம் அவர்கள் உண்மையை எடுத்துச்சொல்ல மறுத்துவிட்டார். ஒவ்வொரு தடவையும் தனது உயிருக்கு ஆபத்து என்றே சொல்லிக் கொண்டிருந்தார். 2009ம் ஆண்டிற்குப் பிறகு, இனி அது தேவையில்லாத விடயம் என்று சொல்லி சப்ஜெக்கடையே மூடிவிட்டார்.
1956ம் ஆண்டு தமிழரசுக்கட்சியின் உண்ணா விரத போராட்டத்தில் பங்கு பற்றி சிறைசென்ற செம்மல் இந்த கரிகாலன் நவரத்தினம் அவர்கள் என்றால் மிகையாகாது. அவருக்கு அப்போது வயது 16ம் என்றும் சொல்கிறார்கள்.
நாங்கள் பனாகொடை இரானுவ முகாமிற்கு சென்ற முதல் நாளன்று எங்களுடன் தந்தை செல்வாவின் மகன் சந்திரகாசனும் வருவதாக இருந்தது. அவரை எங்கள் வானில் ஏற்றுவதற்காக கொழும்பு கொள்ளுப்பிட்டி அல்பிரட் கவுஸ் காடன்ஸ் வீட்டிற்கு மதியம் ஒரு மணிபோல் வந்தோம். இரண்டு மணிவரை வெளியில் காத்துக்கிடந்தோம். இரண்டு மணியளவில் கரிகாலன் நவரத்தினம் வந்து சந்திரகாசன் வரமாட்டார் என்று சொல்ல நாங்கள் புறப்பட்டோம். போகும் வழியில் கரிகாலன் சொன்னார், நாளை வீரகேசரி பத்திரிகையில் சந்திரகாசனும் பனாகொடை முகாமுக்கு குட்டிமணி குழுவினரை பார்க்கசென்றார் என்று வரும். அந்த செய்தி பத்திரிகையில் ஏறும் வரையிலேயே எங்களை தாமதப்படுத்திவிட்டு, பத்திரிகை அச்சுக்கு போனபின்னர் வரமறுத்துவிட்டார், என்றும் கூறினார். மேலும் காமினி திசநாயக்கா (அந்நாள் காணி, விவசாய, பெரும் தோட்ட மந்திரி) பனாகொடை முகாமுக்கு அவரை செல்லவேண்டாம் என்று கூறியதின் காரணமாகவே அவர் வரமறுத்ததாகவும் அங்கு பேசப்பட்டது.
அடுத்த நாள் வீரகேசரியில் அவர்களது பெயர்கள் வெளியாகி இருந்ததன. எனது பெயரோ, கே வி தவராஜா, பாக்கியநாதன் அவர்களின் பெயர்கள் பிரசுரமாகவில்லை. பெரிய இடத்து விடயம் என்று நாங்களும் பெரிதாக அலட்டவில்லை.
1 comments :
தன்வினை தன்னைச் சுடும்
Post a Comment