மலேசியாவில் மாரியம்மன் கோவிலருகே கலவரம்! 18 வாகனங்கள் தீக்கிரை! 17 பேர் கைது!
சிலாங்கூர் மாநிலத்தின் சுபாங் ஜெயா வட்டாரத்தில் உள்ள சீ ஃபீல்ட் ஸ்ரீ மஹா மாரியம்மன் கோவிலில் இன்று நடந்த கலவரம் இனம் தொடர்பான வன்முறை அல்ல என்று காவல்துறை கூறியுள்ளது.
சம்பவத்தில் 18 கார்களுக்கும் 2 மோட்டார்சைக்கிள்களுக்கும் தீ வைக்கப்பட்டது.
காவல்துறைக் கார் மீது கற்கள் வீசப்பட்டதால் அதுவும் சேதமடைந்தது.
கலவரம் நேர்ந்த பகுதிக்கு, காவல்துறை அதிகாரிகள் 700 பேர் அனுப்பிவைக்கப்பட்ட பிறகே அங்கு நிலைமை கட்டுக்குள் வந்தது.
கோவிலை வேறோர் இடத்துக்கு மாற்றுவதன் தொடர்பில் இரு குழுக்களுக்கு இடையே வன்முறை வெடித்ததாகக் காவல்துறையினர் கூறினர்.
இம்மாதம் 22 ஆம் தேதி, தற்போதுள்ள இடத்திலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வேறோர் இடத்துக்குக் கோவிலை மாற்றத் திட்டமிடப்பட்டிருந்தது.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவில் அருகே பக்தர்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தனர். அப்போது இன்னொரு குழுவினர் அவர்களைத் தாக்கியதாக மலேசியக் காவல்துறை தெரிவித்துள்ளது.
வன்முறையில் எவரும் காயமடைந்ததாகத் தகவல் இல்லை.
கலவரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் 17 மலேசியர்கள் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
சிலாங்கூர் காவல்துறை தலைமையகத்தில் நடந்த செய்தியாளர்க் கூட்டத்தில் உயர் அதிகாரி அதன் தொடர்பான தகவல்களை வெளியிட்டார்.
கைதுசெய்யப்பட்ட 17 பேரில் 6 பேருக்குக் காயம் ஏற்பட்டிருப்பதாக இன்ஸ்பெக்டர் ஜெனரல் முகம்மது ஃபாஸி ஹரூன் கூறினார்.
ஒழுங்குமுறை நடவடிக்கையின்போது காவல்துறை அதிகாரி ஒருவருக்கும் காயமேற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
கலவரத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் அனைத்து தனிநபர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாகத் தெரிவித்தனர்.
சம்பவத்தின் தொடர்பில் 29 புகார்கள் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியிடப்பட்டது.
இதற்கிடையே, சம்பவம் தொடர்பில் தனிப்பட்ட காவல்துறை விசாரணை தேவை என்று நான்கு அமைச்சர்களும் துணை அமைச்சரும் கோரிக்கை விடுத்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.
0 comments :
Post a Comment