Monday, November 12, 2018

14 நாட்களில் 3 முறையாக மக்களுக்கு கதை சொல்கின்றார் மைத்திரிபால.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் அசமந்த நிலை தொடர்பில் மக்களுக்கு விளக்கமளிக்கும் பொருட்டு கடந்த 14 நாட்களில் 3 வது முறையாக முயன்றுள்ளார் ஜனாதிபதி தை;திரிபால சிறிசேனா. நேற்று 11.11.2018 பிற்பகல் விசேட உரை ஒன்றினூடாக தனது நிலைப்பாட்டை அவர் மக்களுக்கு வெளிப்படுத்தும் பொருட்டு ஆற்றிய உரையின் முழுவடிவம் வருமாறு:

மும்மணிகளின் ஆசிகள், இறைவன் துணை, வணக்கத்திற்குரிய மகா சங்கத்தினரே, ஏனைய மதத் தலைவர்களே, பெற்றோர்களே, பிள்ளைகளே, நண்பர்களே,

தற்போதைய அரசியல் நிலைமைகளை தெளிவுபடுத்தும் வகையில் 14 நாட்களுக்குள் இது நான் உங்கள் முன் உரையாற்றும் மூன்றாவது முறையாகும். முதலாவதாக கௌரவ மகிந்த ராஜபக்ஷ அவர்களை பிரதமர் பதவியில் அமர்த்தியதை அடுத்து நான் எனது கருத்துக்களை முன்வைத்தேன். அதேபோன்று நவம்பர் மாதம் ஐந்தாம் திகதி பத்தரமுல்லையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போது இரண்டாவது தடவையாக அரசியல் நிலைமைகளை உங்களுக்கு தெளிவுபடுத்தினேன். இன்று மூன்றாவது முறையாக உங்கள் முன் உரையாற்றுகின்றேன். இதன் முக்கியத்துவம் யாதெனில் இலங்கை பாராளுமன்றத்தைக் கலைத்ததன் பின்னர் உங்கள் முன் உரையாற்றுவதாகும். குறிப்பாக மிகச் சுருக்கமாகவேனும் பாராளுமன்றத்தைக் கலைத்ததற்கான காரணங்களை தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

நமது நாட்டில் பாராளுமன்ற சம்பிரதாயம் அதாவது இலங்கை பாராளுமன்றம், இலங்கை தேசிய அரச பேரவை காலம் முடிவடைந்ததன் பின்னர் 1947 இல் முதலாவது பாராளுமன்றம் ஆரம்பமானது. அன்று முதல் இன்று வரை பொதுத் தேர்தல்களுக்கமைய அரசாங்கங்கள் மாற்றப்பட்டு புதிய அரசாங்கங்கள் பதவியேற்று இந்த நாட்டின் அரச நிர்வாகம் முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கின்றது. குறிப்பாக தற்போதைய பாராளுமன்றத்தின் நிலைமை கடந்த வாரமளவில் அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஒழுக்கத்தன்மையின் அடிப்படையிலும் நன்னடத்தைமிக்க சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்புமிக்க நாட்டின் உன்னத ஸ்தானமும் மக்களின் இறையாண்மையை வெளிப்படுத்தும் மிக உயரிய ஸ்தானமுமாகிய பாராளுமன்ற உறுப்பினர்களின் பெறுமதி 100 மில்லியன் ரூபா முதல் 150 மில்லியன் ரூபா வரையிலும் சிலவேளைகளில் இன்னும் சில உறுப்பினர்களின் பெறுமதி 500 மில்லியன் ரூபாவாகவும் விலைபோகும் நிலைமை ஏற்பட்டது. நம் நாட்டின் பாராளுமன்றத்தினுள் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகள் மற்றும் மாற்றங்கள் பற்றிய அனுபவத்தை நாம் பெற்றிருக்கின்றோம். 1964 ஆம் ஆண்டு லேக்ஹவுஸ் சட்டத்தை எதிர்க்கும் வகையில் பாராளுமன்றத்தில் ஏற்பட்ட மாற்றம் இச்சமயம் எனது ஞாபகத்திற்கு வருகின்றது. அதன் மூலம் அரசாங்கத்தில் மாற்றம் ஏற்படுவதற்கும் வழிவகுத்தது. ஆயினும் 47 முதல் இதுவரையிலான காலப்பகுதியில் கலைக்கப்பட்ட பாராளுமன்றங்கள் ஊழல் காரணமாக கலைக்கப்பட்டதாக அறிவதற்கில்லை. 2015 ஆம் ஆண்டு மத்திய வங்கி கொள்ளை அதன் பின்னர் ஏற்பட்ட பல்வேறு ஊழல்கள், முறைகேடுகள் அவற்றுடன் தொடர்பான விடயங்கள் மற்றும் மகிந்த ராஜபக்ஷ அவர்களை பிரதமராக்கியதை அடுத்து பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய தேவை ஏற்பட்டு அரசியல் நிலைமை சூடுபிடித்த பின்னணியில் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெறுமதி நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல் அவர்களாலேயே நிர்ணயிக்கப்பட்டது. அது மிகவும் வருந்தத்தக்கதோர் நிலைமையாகும். உங்களது மதிப்பிற்குரிய வாக்குகளைப் பெற்று இந்த பாராளுமன்றத்திற்கு வந்திருக்கும் பிரதிநிதிகள் தமது வணிக பெறுமதியை அல்லது ஒரு விலையை நிர்ணயிப்பது எந்தளவிற்கு அரசியல் ரீதியில் மோசமான துரதிஷ்டமான நிலையாகும் என்பதை நீங்கள் அனைவரும் ஏற்றுக்கொள்வீர்கள்

இதுவே பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. பாராளுமன்றத்தைக் கலைக்க நேர்ந்த இரண்டாவது காரணி முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்களின் அதிசயமான செயற்பாடாகும். அவரின் செயற்பாட்டையிட்டு நான் மிகவும் வருந்துகின்றேன். அவர் எனது மிகவும் நெருங்கிய நண்பராவார். நம் நாட்டு பாராளுமன்ற சம்பிரதாயத்தினுள் நியமிக்கப்பட்ட சபாநாயகர்கள் அவர்களது நடுநிலைத் தன்மையையும் பக்கச்சார்பின்மையையும் மிக சிறந்த முறையில் வெளிப்படுத்தி வந்தார்கள். அந்த நிலைமை 1947 முதல் இதுவரை இருந்து வந்தது. பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளை, பாராளுமன்றத்தின் சம்பிரதாயம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாது ஜனாதிபதிக்குரிய விஷேட அதிகாரங்களுக்கமைய பிரதமரை நியமித்ததை ஏற்றுக்கொள்ளாத தன்மையை ஏற்படுத்தி சபாநாயகரினால் வெளியிடப்பட்ட அறிக்கைகளும் அவரது நடத்தையும் பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான இரண்டாவது காரணமாக அமைந்ததென்பதை நான் இங்கு குறிப்பிட வேண்டும்.

இங்கே அரசியல் ரீதியான ஒரு நிலைமையினை கவனத்தில் கொள்ளும் வகையில் உங்களது ஞாபகத்திற்கு இவ்விடயத்தையும் கொண்டுவர விரும்புகிறேன். 2015 ஜனவரி 08 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலின் பின்னர் அதற்கு மறுநாள் ஜனாதிபதியாக நான் பதிவியேற்ற மறுகணமே கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்களை பிரதமர் பதவியில் அமர்த்தினேன். அதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களில் 225 பேரில் 162 உறுப்பினர்களின் பலம் இருந்த டி.மு.ஜயரத்ன அவர்களை நீக்கிவிட்டே 41 உறுப்பினர்கள் மாத்திரம் இருந்த ரணில் விக்ரமசிங்கவை பதவியில் அமர்த்தினேன். இந்த நிகழ்வு உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என நான் நினைக்கின்றேன்.

அச்சமயம் இன்று பலரும் பேசுகின்ற பாராளுமன்றத்தின் பெரும்பான்மையை பற்றி எவரும் பேசவில்லை என்பதை நீங்களும் அறிவீர்கள். பெரும்பாலும் ஜனாதிபதியினால் நம்பிக்கை வைக்கத்தக்க பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பாராளுமன்ற உறுப்பினர்களின் விருப்பத்தை வெல்லத்தக்க ஒரு பாராளுமன்ற உறுப்பினரை அரசியலமைப்பில் காணப்படுகின்ற உடன்படிக்கைகளுக்கு அமைய நியமிப்பதே சம்பிரதாயமாகும். அவ்வாறு நியமிக்கப்பட்டதன் பின்னர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற்றுக் கொள்வதற்கான நிலையியற் கட்டளை, அரசியலமைப்பின் சட்ட திட்டங்களின் கீழ் செயற்படுத்தப்படும். இருப்பினும் ஒரு பிரதம மந்திரியை நியமித்து அவர் பாராளுமன்றத்திற்கு செல்லும் முதல் தினத்திலேயே அவர் மீதான நம்பிக்கை இருக்கின்றதா என்பதை பற்றிய பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பு எமது பாராளுமன்ற சம்பிரதாயத்தில் ஒருபோதும் நடந்ததில்லை. நிலையியற் கட்டளைகளுக்கு கீழும் அவ்வாறு நடப்பதில்லை.

இருப்பினும் பாராளுமன்றத்தின் அச் சம்பிரதாயத்தை மீறி கௌரவ கரு ஜயசூரிய அவர்கள் இரண்டு அறிக்கைகளை வெளியிட்டார். அவரது முதலாவது அறிக்கையில் மகிந்த ராஜபக்ஷ அவர்களை பிரதமராக ஏற்று அவருக்கான உரிமைகளையும் வரப்பிரசாதங்களையும் பாராளுமன்றத்தில் பெற்றுத்தருவதாக அறிவித்தார். அதாவது பாராளுமன்றத்தில் பிரதமருக்குரிய ஆசனம், பாராளுமன்றத்தில் பிரதமருக்கான அலுவலகம் ஆகியன பெற்றுத்தரப்படும் என முதலாவது அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும் அதற்கு சில தினங்களின் பின்னர் வெளியிட்ட இரண்டாவது அறிக்கை முதலாவது அறிக்கையை விட முற்றிலும் வேறுபட்டவொரு அறிக்கையாக அமைந்தது. அதன்மூலம் அவர் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களை பிரதமராக ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தார். இந்த நிலைமையை கவனத்திற் கொண்டு ஏற்படும் நிலைமையைப் பற்றி நான் மிகுந்த கவனத்தை செலுத்தினேன். அத்தோடு இரு தரப்பையும் சார்ந்த உறுப்பினர்களும் அறிக்கைகளை வெளியிட்டார்கள். ஊடகங்களில் பல்வேறு கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. 14 ஆம் திகதி பாராளுமன்றம் கூடும் பட்சத்தில் ஒரு பாரிய மோதல் ஏற்படும் எனவும் சில சமயம் சிலர் மரணிக்க நேரிடும் எனவும் சிலர் தெரிவித்தார்கள்.

அதை அவ்வாறு நடக்க விட்டிருப்பின் 14 ஆம் திகதி பாராளுமன்றத்தைக் கூட்டி அதனைக் கலைக்காது அந்த மோதலை உங்களதும் எனதும் அன்புக்குரிய இந்த தாய் நாட்டின் நகரங்களிலும் கிராமங்களிலும் மோதல்கள் ஏற்பட்டு நாட்டில் சாதாரண சிவில் மக்களுக்கிடையிலான மோதலாக பாரதூரமான நிலைமை ஏற்படும் என்பதை உணர்ந்தேன்.

ஆகையால் இதற்கான சிறந்த தீர்வாக 225 பேருக்கிடையிலான மோதல் நாடு தழுவிய ரீதியிலான பாரிய மோதலாக மாறி இயல்பு நிலை சீர்குலைவதற்கு வழிவகுப்பதற்கு பதிலாக எனது பொறுப்புக்கும் கடமைக்கும் ஏற்ப ஜனநாயகத்தை மிக உயர்வாக மதித்து சுதந்திரமான நியாயமான தேர்தலொன்றின் மூலம் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் ஏற்பட்டிருக்கின்ற பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கும் நாட்டின் வாக்குரிமை பெற்றிருக்கும் 150 இலட்ச வாக்காளர்களிடம் அவ்வதிகாரத்தை பெற்றுக் கொடுப்பதும் அதன்மூலம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் ஏற்பட்ட ஊழல்மிக்க தன்மையையும் சபாநாயகரின் செயற்பாட்டினால் ஏற்பட்ட முரண்பாடான நிலைமையின் உருவாக்கமுமாகிய அனைத்தையும் கருத்திற் கொண்டு உருவாகிய அரசியல் நெருக்கடியைத் தீர்த்துக் கொள்ளக்கூடிய மிகவும் சிறந்த ஜனநாயக ரீதியிலான நியாயமான தீர்வாக அப்பொறுப்பினை பொதுமக்களிடம் கையளிப்பதன் மூலம் ஜனநாயகத்தின் உயரிய நோக்கங்களை அடையும் வகையிலேயே நான் பாராளுமன்றத்தைக் கலைத்து பொது தேர்தலை நடத்த தீர்மானித்தேன். அதன்மூலம் இப்போது ஏற்பட்டிருக்கின்ற இப்பிரச்சினைக்கு தெளிவான நிலையான தீர்வு பொதுத்தேர்தல் மூலம் கிடைக்கப்பெறும் என்பதை இங்கு கூறவேண்டும்.

இதன்போது பொதுத் தேர்தலை நடத்தும் முழுமையான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கே இருக்கின்றது. ஆதலால் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு நாம் எமது முழுமையான தேவையைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். தேர்தல் சட்டதிட்டங்களைப் பாதுகாத்து நாட்டில் தேர்தல் ஆணைக்குழுவினால் ஜனநாயக ரீதியிலான நியாயமான நேர்மையான தேர்தலை நடத்துவதற்கு நாம் அனைவரும் நமது உயரிய ஒத்துழைப்பை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் அரச உத்தியோகத்தர்களுக்கும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் பொலிஸ் உள்ளிட்ட முப்படையினருக்கும் பெற்றுக் கொடுப்போம் என்ற வேண்டுகோளை மிகுந்த கௌரவத்துடனும் கண்ணியத்துடனும் உங்களுக்கு விடுக்க விரும்புகின்றேன். நாம் ஒரு புதிய அரசாங்கத்தை தேர்ந்தெடுப்போம். அதேபோன்று ஊழல் மிக்கவர்களை அகற்றி அரச நிர்வாகத்திற்காக தூய்மையான பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பது மதிப்புக்குரிய உங்களது பொறுப்பாகும். குறிப்பாக ஜனநாயக அடிப்படையில் மக்களின் கருத்துக்கு தலை வணங்கி பொதுத் தேர்தலை நடத்துவது அனைவராலும் பாராட்டப்படும் ஒரு முடிவாகும் என்றே நான் கருதுகின்றேன்.

நாட்டின் முக்கிய பிரச்சினைகள், வாழ்க்கைச் செலவு, சுபீட்சமான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல், உள்நாட்டு உற்பத்திகளை கட்டியெழுப்புதல், தூய்மையான வெளிநாட்டு முதலீடுகளை ஊழலின்றி பெற்றுக் கொள்ளுதல், ஒழுக்கமும் நன்னடத்தையும்மிக்க சமூகத்தைக் கட்டியெழுப்புதல், ஜனநாயகத்தைப் பலப்படுத்துதல் ஆகிய அனைத்திற்கும் இத்தேர்தலை நடத்தி உங்களது தீர்மானத்திற்கு அமைய ஒரு புதிய அரசாங்கத்தை அமைப்பதே ஆகும். ஆகையால் எமது அன்புக்குரிய தாய் நாட்டை புதிய பாதையில் நாம் கொண்டு செல்வோம். இன்று இந்த நாட்டில் வாழ்பவர்களுக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் புதிய தொழிநுட்ப உலகில் ஒழுக்கமிக்க நமது பழக்கவழக்கங்கள், சம்பிரதாயங்கள், கலாசாரம் ஆகியவற்றைப் பாதுகாக்கும் அறிவை முதன்மைப்படுத்திய ஒரு சமூகத்தையும் அறிவும் ஆற்றலுமிக்க அனுபவமிக்க அரச நிர்வாகிகளையும் தேர்ந்தெடுப்பதற்கு உங்களுக்கு மிகச் சிறந்ததோர் வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. ஆகையால் தேர்தலை நடத்தும் வகையில் தற்போது வெளியிடப்பட்டிருக்கின்ற வர்த்தமானி அறிவித்தலுக்கமைய தேர்தல் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் தீர்மானங்களுக்கும் நாம் எமது பூரண ஒத்துழைப்பை பெற்றுக் கொடுப்போம். இத்தருணத்தில் தேர்தல் சட்டதிட்டங்கள் தொடர்பில் எமது முன்னைய அனுபவங்களையும் தேர்தல் சட்டதிட்டங்களை மீறுவதற்கு ஏதுவாக அமையும் காரணங்களைப் பற்றியும் இங்கு நான் சுருக்கமாக ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

குறிப்பாக அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரங்களுக்காகவும் ஆபேட்சகர்களின் தேர்தல் செயற்பாடுகளுக்காகவும் அரச உடைமைகளை துஷ்பிரயோகம் செய்வதை முழுமையாக தவிர்த்துக் கொள்ளுதல், அரச வாகனங்களை உபயோகப்படுத்துவதை முழுமையாக தவிர்த்துக் கொள்ளுதல், கடந்த அரசாங்கத்திலும் தற்போதைய காபந்து அரசாங்கத்தில் செயலாற்றும் தற்போதைய நிலைமையிலும் அந்தந்த அமைச்சுகளுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பயன்படுத்திக் கொள்வதற்காக வாகனங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டிருந்தன என்பதை நீங்கள் அறிவீர்கள். தற்போதைய அரசியலமைப்பின் 19வது திருத்தத்தின் கீழ் காபந்து அரசாங்கம் என்ற வகையில் வேட்புமனு தாக்கல் பற்றிய அறிவித்தலிலிருந்து பாராளுமன்றம் கூடும் வரையிலான காலப்பகுதியில் அமைச்சரவை, பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்ட காபந்து சபைக்கே அதிகாரம் இருக்கின்றது. ஆகையால் அந்த ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை தவிர்ந்த வேறு எவருக்கும் முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள், முன்னாள் பிரதி அமைச்சர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகிய எவருக்கும் அரச வாகனங்கள் மற்றும் அரச பொது உடைமைகளை தேர்தல் பிரசார பணிகளுக்காக உபயோகப்படுத்துவது சட்ட ரீதியாகவே தடை செய்யப்பட்டிருக்கின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆகையால் அரசாங்கத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கின்ற இத்தருணத்தில் முன்னாள் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் அவர்கள் வசமிருக்கும் அரச வாகனங்கள், வளங்கள், ஆகிய அனைத்தையும் உடனடியாக சம்பந்தப்பட்ட அமைச்சின் செயலாளர்களிடம் கையளிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் மிகுந்த கௌரவத்துடன் கேட்டுக்கொள்கின்றேன். அவற்றைக் கையளிப்பதில் தாமதம் ஏற்படுமாயின் பொலிஸார் மூலம் சட்ட ரீதியாக அவ்வாகனங்களை மீளப் பெறுவதற்கும் அவ்வாறு சட்டத்தை மீறி செயற்படுபவர்கள் எவராக எந்தக் கட்சியை சார்ந்தவர்களாக இருப்பினும் அவ்வாறானவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள நேரிடும் என்பதையும் தெரிவிக்க விரும்புகின்றேன்.

ஆகையால் அரச வாகனங்களை உபயோகப்படுத்துதல், அரச பொது உடைமைகளை உபயோகப்படுத்துதல் ஆகியன இத்தருணத்தில் முற்றிலும் தவிர்த்துக் கொள்ளுமாறும் அவ்வாறான உபயோகம் சட்ட ரீதியாகவே தடை செய்யப்பட்டிருக்கின்றது என்பதையும் உங்களுக்கு நான் மிகுந்த தயவுடன் ஞாபகப்படுத்துகின்றேன்.

ஆதலால் இத் தேர்தலை சிறந்த முறையில் நடத்துவதற்கு நான் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் அரச உத்தியோகத்தர்களுக்கும் பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் நாம் எமது பூரண ஒத்துழைப்பை பெற்றுக் கொடுப்போம். தேர்தல் காலப்பகுதியில் மோதல்களை ஏற்படுத்திக்கொள்ளாது அமைதியாகவும் மிகுந்த புரிந்துணர்வுடனும் செயற்படுவதன் மூலம் அமைதியான ஜனநாயக வழியிலான தேர்தலை நடத்த வேண்டிய பொறுப்பு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், வேட்பாளர்கள், அவர்களது ஆதரவாளர்கள், நாட்டு மக்களாகிய அனைவரும் ஏற்க வேண்டிய மிகப் பரந்த பொறுப்பாகும் என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் இங்கே ஞாபகப்படுத்திய இந்த விடயங்களுடன் உன்னதமான எமது இந்த தாய் நாட்டை முன்னெடுத்து செல்வதற்கும் சுபீட்சமிக்க பொருளாதாரத்தையும் நவோதமிக்க உயரிய தேசத்தையும் உலகில் சிரேஷ்ட உன்னதமான அரச நிர்வாகத்தைக் கொண்ட ஒழுக்கமும் அமைதியும் நற்பண்புமிக்க சுதேசத்துவத்தை முதன்மைப்படுத்திய பெறுமானங்கள் உள்ளிட்ட எமது கலாசாரத்தையும் நாட்டுப் பற்றையும் முதன்மையாகக் கொண்ட அரச நிர்வாகத்திற்காக உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பை நான் மிகுந்த தயவுடனும் கௌரவத்துடனும் கேட்டு நிற்கின்றேன்.

தர்மத்திற்கமைய நடப்பவரை தர்மமே பாதுகாக்கும்
குரோதத்தால் குரோதம் தனியாது
குரோதமின்மையாலேயே குரோதம் தனியும்
இதுவே உலக நியதியாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com