இஸ்ரேலுக்கு தஞ்சம்கோரிச் சென்ற 13 இலங்கையர்களை அந்நாட்டு அரசு மோசமான நிலையில் அடைத்து வைத்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்ட சிறிய அரசியல் மாற்றத்தை சாட்டாக வைத்து இஸ்ரேலுக்கு அரசியல் தஞ்சம் கோரும் நோக்கில் சுற்றுலா வீசாவில் சென்றவர்களை அந்நாட்டு அரசு தடுத்து வைத்துள்ளது.
கடந்த இரண்டு வாரங்களாக சிறை வைக்கப்பட்டிருக்கும் இவர்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படாதுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தின் பின்னர் குறித்த 13 பேருக்கும் மரண அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேல் அதிகாரிகளிடம் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே பாதுகாப்பு நோக்கத்திற்காக சுற்றுலா விசாவில் இஸ்ரேலுக்கு வந்ததாக அவர்கள் அந்த நாட்டு பாதுகாப்பு தரப்பிடம் கூறியுள்ளனர்.
குறித்த நபர்கள் பென்-குரியன் விமான நிலையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் தற்போது இஸ்ரேல் தடுப்பு காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களில், இரு பெண்களும் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக மனித உரிமைகள் மீறப்பட்ட நிலையில் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குறித்த நபர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆடை மாற்றுவதற்கோ தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்வதற்கோ வாய்ப்புகள் வழங்கப்படவில்லை எனவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அத்துடன் தமக்கான மருத்துவ வசதிகள் எதுவும் செய்துக்கொடுக்கப்படவில்லை எனவும் குறித்த இலங்கையர்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் இஸ்ரேல் அரசாங்கம் இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த நபர்கட்கு எவ்வித சந்தர்ப்பங்களும் வழங்காமல் இலங்கைக்கு திருப்பியனுப்புவதற்கான முயற்சிகளை இஸ்ரேல் அதிகாரிகள் மேற்கொண்டபோது, நபர் ஒருவர் தன்னிடமிருந்த கையடக்க தொலைபேசியூடாக இஸ்ரேலிலுள்ள நண்பர் ஒருவருக்கு விடயத்தை அறிவித்தபோது, அவர் சட்டத்தரணி ஒருவரை தொடர்பு கொண்டு விடயங்களை மேற்கொண்டதில் நாட்டுக்கு திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகள் தாமதமாகியுள்ளது என தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment