Monday, November 12, 2018

அரசியல் யாப்பினை மீறி பாராளுமன்று கலைக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றில் 10 மனுக்கள்.

வரலாற்றில் முதற் தடவையாக நிறைவேற்று ஜனாதிபதி ஒருவரின் தீர்மானத்திற்கு எதிராக பெருமெடுப்பில் உச்ச நீதிமன்றில் மனுக்கள் குவிந்துள்ளது. பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை சட்டத்திற்கும் அரசியல் யாப்பிற்கும் முரணானது என 10 மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் இன்று (12) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுக்களை பரிசீலனை செய்த நீதிபதிகள் அதன் அவசரத் தேவையை உணர்ந்து இன்றே விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய கட்சிகளே இவ்வாறு பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக மனுக்களை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இது தவிர தனி நபர்களும் அரச சார்பற்ற நிறுவனங்களும் மனுக்களை தாக்கல் செய்துள்ளது.

குறித்த மனுக்களில் பிரதிவாதிகளாக ஜனாதிபதி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

தேர்தல்கள் ஆணைக்குழுவினை சிலர் பிரதிவாதிகளாக குறிப்பிட்டுள்ளபோதும், ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் ரட்ண ஜீவன் கூல் பாராளுமன்ற கலைக்கப்பட்டமை சட்ட விரோதமானது என மனுத்தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

அரசியலமைப்பின் 19 ஆவது சீர்திருத்தத்தின் அடிப்படையில் இவ்வாறு பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என்றும் பாராளுமன்றத்தை கலைத்தமை அரசியலமைப்பிற்கு விரோதமான செயல் எனவும் குறித்த மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் பாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நிராகரிக்குமாறும் விசாரணைகளின் இறுதி முடிவுகள் வரும் வரையில் பொது தேர்தலை ஒத்தி வைக்குமாறும் உத்தரவிடுமாறு உயர் நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com