Tuesday, October 30, 2018

மஹிந்த – சம்பந்தன் சந்திப்பு. எதிர்க்கட்சித் தலைமைப் பதவி குறித்து பேசவே இல்லையாம்.

பிரதமர் மஹிந்த ராஜபச்ச அவர்களின் உத்தியோகபூர்வ இல்லத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் இன்று விஷேட கூட்டம் ஒன்று அதன் தலைவர் சம்பந்தன் தலைமையில் இடம்பெறவதற்கு முன்னர் இச்சந்திப்பு நடைபெற்றுள்ளது. ஆனாலும் குறித்த சந்திப்பு தொடர்பில் எவ்வித தகவல்களும் மக்களுக்கு தெரியப்படுத்தப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், இச்சந்திப்பு இடம்பெற்றதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும, எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து இரா. சம்பந்தனை மாற்றுவதற்கு எவ்விதத் தீர்மானங்களும் இல்லை என தெரிவித்துள்ளார்.

டலஸ் அலகப்பெருமவின் இக்கூற்று மற்றும் த.தே.கூ புதிய பிரதமருடன் பேசிய விடயம் யாது என மக்களுக்கு தெரிவிக்காமையையிட்டு பல்வேறு விதமான கருத்து பரிமாறல்கள் இடம்பெற்றது. மக்கள் ஒருவகையான அதிருப்தியை வெளிக்காட்ட ஆரம்பித்திருந்த நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அவ்வறிக்கையில் :

ஊடக அறிக்கை

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள் திரு.மஹிந்த ராஜபக்ச அவர்களின் வேண்டுகோளின்படி இன்று அவரை கொழும்பு விஜேராமையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார்.

திரு இரா. சம்பந்தன் அவர்கள் வேறு எந்தவொரு அடிப்படையிலும் இந்த சந்திப்பில் பங்குபெறவில்லை. மேலும் இச்சந்திப்பில் எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பில் எதுவும் கலந்துரையாடப்படவில்லை, இது தொடர்பில் வெளிவரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாகும்


மேற்படி அறிக்கையில் எதிர்கட்சி தலைவர் தொடர்பாக எதுவும் பேசப்படவில்லையாயின், பேசிய விடயங்கள் யாது என அறிந்து கொள்வதற்கு மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com