Sunday, October 28, 2018

அதிரடி மாற்றத்திற்கு காரணம் என்ன? விளக்கினார் மைத்திரி.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் அதனூடான அரசியல் ஸ்திரதன்மை தொடர்பில், நிலைமைக்கு பொறுப்புக்கூறவேண்டியவரனா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று 6 மணிக்கு தேசிய தொலைக்காட்சியில் தோன்றி மக்களுக்கு உரையாற்றிய அவர் தனது தரப்பு நியாயத்தை 37 நிமிடங்களாக பேசினார். அவர் தெரிவித்தமை வருமாறு:

என்னையும், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக் ஷவையும், படுகொலைச் செய்வதற்காக, எடுக்கப்பட்ட முயற்சி தொடர்பிலான தகவலை மூடி மறைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த சூழ்ச்சி தொடர்பில், விசாரணைகள் ஆரம்பிப்பதற்கு முன்னர், தகவல் வெளியாகி 48 மணிநேரத்துக்குள், அந்த குரல் போலியானது என்று தெரிவித்த பொலிஸ் மா அதிபர், அந்த முறைப்பாடு தொடர்பிலான விசாரணையை குற்றப்புலனாய்வு பிரிவுக்கு கொடுக்காது, வேறுப்பிரிவுக்கு வழங்கினார். அதில் நான் சந்தேகப்பட்டேன்.

மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி விவகாரம் தொடர்பில், ரணில் விக்கிரமசிங்க பொறுப்பு கூறவேண்டும். மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மஹேந்திரனை, ரணில் விக்கிரமசிங்கவே, நாட்டுக்கு அழைத்துவரவேண்டும்.

2014ஆம் ஆண்டு என்னை பொது வேட்பாளராக தெரிவு செய்த போது நான் எதிர்நோக்கி ஆபத்தான நிலைமை உங்களுக்கு நினைவில் இருக்கும் என நம்புகிறேன். நாட்டு அரசியலில் எந்த நபரும் பொறுப்பேற்காக சவாலை நான் ஏற்றுக்கொண்டேன்.

அது பாரதூரமான அரசியல் சவால் என்பது போல் ஆபத்து நிறைந்தது. அரசியல் ரீதியாக மட்டுமல்ல? எனக்கு, எனது மனைவி, பிள்ளை என அனைவருக்கும் ஆபத்தான சூழ்நிலையில் அந்த சவாலை எதிர்கொண்டேன்.

அதேபோல் கடந்த 26ஆம் திகதி நான் எடுத்த தீர்மானம் கடந்த 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் திகதி எடுத்த தீர்மானத்தை விட மிகப் பெரிய சவாலுடனான தீர்மானம்.

உங்களதும், எனது அன்புக்குரிய தாய் நாட்டுக்காகவும் அன்பான பொது மக்களுக்காகவுமே இவை அனைத்தையும் நான் செய்தேன் என்பதை கூறிக்கொள்கிறேன்.

எனது உயிரை பணயம் வைத்து 2015ஆம் ஆண்டு பெற்ற அரசியல் வெற்றியை கொச்சைப்படுத்தும் வகையில் நாகரிகமான அரசியலுக்கு பொருத்தமற்ற செயற்பாடுகளில் ரணில் விக்ரமசிங்க ஈடுபட்டார்.

இலங்கையின் எதிர்காலத்தை அவர் அவருடன் நெருக்கமாக செயற்படும், மக்களின் உண்மையான இதய துடிப்பை அறியாத மேல் தட்டு வகுப்பினர் வினோத களியாட்டு இடமாக மாற்றும் நிலைமைக்கு அவர் சென்றார்.

குறிப்பாக நல்லாட்சி அரசாங்கம் என்ற எண்ணக்கருவை ரணில் விக்ரமசிங்க அழித்தார் என்ற நான் நினைக்கின்றேன்.

2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி நான் தேர்தலில் வெற்றி பெற்று மறு நாள் மாலை நான் பதவியேற்கும் போது நாடாளுமன்றத்தில் 47 உறுப்பினர்களை கொண்டிருந்த ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்தேன்.

எனினும் அந்த உன்னதமான நல்லாட்சி எண்ணக்கருவையும் நல்லாட்சியின் நோக்கத்தையும் ரணில் விக்ரமசிங்க அழித்தார். நாட்டில் ஊழல், மோசடிகள் பெருமளவில் அதிகரித்தன.

அத்துடன் ரணில் விக்ரமசிங்க கூட்டாக முடிவுகளை எடுப்பதற்கு பதிலாக தனியாக தீர்மானங்களை எடுத்தார்.

மிகவும் முரட்டுத்தனமாக ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திற்குள் நடந்துக்கொண்டார். இதனால், அரசாங்கத்திற்குள் பாரதுரமான அரசியல் நெருக்கடி ஏற்பட்டது.

கூட்டாக முடிவுகளை எடுக்காது அவரும் அவருக்கு நெருக்கமான சிலரும் கலந்துரையாடி முடிவுகளை எடுத்தனர். இதன் காரணமாக நாடு என்ற வகையில் நாம் துரதிஷ்டவசமாக நிலைமைக்கு தள்ளப்பட்டோம்.

கடந்த மூன்றரை வருடங்களில் எனக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கும் அரசியல் ரீதியான வேறுபாடுகள் ஏற்பட்டன. கொள்கை ரீதியான மோதல்களை நான் பார்த்தேன்.

ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் கொள்கைக்கும் எனது அரசியல் கொள்கைக்கும் இடையில் வேறுபாடுகளை கண்டேன். அவருக்கும் எனக்கும் இடையில் கலாசார வேறுபாடுகளை கண்டேன்.

இவை அனைத்தும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக அமைந்தன எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்தநாட்டின் வரலாற்றில் இடம்பெறாத மாபெரும் கொள்ளை ஒன்று இடம்பெற்றது. அந்த கொள்ளைக்கு பொறுப்புக்கூறவேண்டியவர் கௌரவ விக்கிரமசிங்க அவர்களே. அவ்விடயம் இடம்பெற்றபோது அவர் மிகவும் பிரச்சினைக்குரிய வகையில் நடந்து கொண்டார்.

இச்சம்பவம் நடைபெற்றிருந்த நேரத்தில் நான் மத்தியவங்கிக்கு செல்ல முற்பட்டேன் அப்போது, மிகவும் கலவரமடைந்தவராக ரணில் விக்கிரமசிங்க எனது இல்லத்திற்கு வந்தார். அவ்வாறு வந்த அவர் நானே மத்திய வங்கிக்கு பொறுப்பானவன் நீங்கள் ஏன் அங்கே செல்கின்றீர்கள் எனக்கேட்டார். அப்போது நான் கூறினேன்: அது உண்மை நீங்கள் தான் மத்தியவங்கிக்கு பொறுப்பானவர். ஆனால் நான் நாட்டின் ஜனாதிபதி அல்லவா, எனக்கு அந்த இடத்திற்கு போக முடியாதா என்று கேட்டேன். அப்போது அவர் எனது இல்லத்திலிருந்து வெளியேறினார். நான் திட்டமிட்டதுபோல் மத்தியவங்கிக்கு சென்றேன்.

அப்போது பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்த அர்ஜூண மகேந்திரன் என்னை வெற்றிலை கொடுத்து வரவேற்றார். எவ்வாறு இந்த மனிதன் இவ்வளவு சீக்கிரம் இங்கு வந்தார் என நான் அதிர்ந்து போனேன்.

இறுதியாக பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்துடன், கைகோர்த்துக்கொள்ளுமாறு, நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 225 பேருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அழைப்பு விடுத்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பேச்சை முழுமையாக இங்கு கேட்கலாம்.



வணக்கம் உங்கள் அனைவருக்கும் மும்மணிகளின் ஆசிகள்.

இறைவனின் துணை.

எனது அன்புக்குரிய பெற்றோர்களே, நண்பர்களே,

இன்று உங்கள் முன் எனது இந்த கருத்துக்களை முன்வைக்க தீர்மானித்தமைக்கு கடந்த சில தினங்களாக இந்த நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களுடன் நாட்டின் எதிர்காலத்தை வளமாக்கும் வகையில் நாம் பயணிக்க வேண்டிய திசையை தெளிவுபடுத்துவதற்காகவேயாகும். அத்தோடு குறிப்பாக இந்த மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அடிப்படையாக அமைந்த காரணங்களைப் பற்றி மிக சுருக்கமான ஒரு தெளிவை முன்வைப்பதற்காகவாகும்.

இன்று நாம் ஒரு புதிய வருடப் பிறப்பை அண்மித்திருக்கின்ற கால கட்டத்திலேயே இருக்கின்றோம். 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08 ஆம் திகதி இந்த நாட்டின் எனது அன்புக்குரிய பொதுமக்களாகிய உங்களின் ஏறத்தாழ 62 இலட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றுக்கொடுத்து என்னை உங்களின் பிரதம சேவகனாகவும் அரச தலைவனாகவும் பெரும் எதிர்பார்ப்புகளுடனேயே தேர்ந்தெடுத்தீர்கள்.

அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக்கொள்ளும் வகையில் நீங்கள் என் மீது வைத்த நம்பிக்கைக்காக இன்றும் நான் உங்களுக்கு எனது மதிப்புடன் கூடிய நன்றியைத் தெரிவித்துக்கொள்ளும் அதேவேளை, இன்றும் எதிர்காலத்திலும் நீங்கள் என்மீது வைத்திருக்கின்ற நம்பிக்கையினை பாதுகாப்பதுடன் எனது உயிரைப் பணயம் வைத்தேனும் அவற்றை நிறைவேற்றுவேன் என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

நாட்டையும் மக்களையும் முன்னிலைப்படுத்தி அரசியலில் ஈடுபடும் நாம், எந்த கட்சி என்பதையோ வலதுசாரி கட்சியா இடதுசாரி கட்சியா என்பதை விட நாம் சேவை செய்யும் நாட்டிற்கும் மக்களுக்கும் சுபீட்சத்தை ஏற்படுத்துவதற்கு நாம் செய்ய வேண்டிய மிகச் சிறந்த காரியம் என்ன என்பதையே நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதே எனது நோக்கமாகும்.

2014 ஆம் ஆண்டு பொது வேட்பாளராக என்னை தெரிவு செய்தபோது எனக்கு முகங்கொடுக்க நேர்ந்த இக்கட்டான நிலைமையை பற்றியும் உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என நான் நினைக்கின்றேன். இந்நாட்டு அரசியலில் எவருமே பொறுப்பேற்காத பாரதூரமான அரசியல் சவாலையே அன்று நான் பொறுப்பேற்றேன். அத்தோடு அது அரசியல் ரீதியாக மாத்திரமன்றி தனிப்பட்ட வகையில் எனது மனைவி மற்றும் பிள்ளைகளுக்கும் ஏற்பட்ட பெரும் அச்சுறுதலுக்கு மத்தியிலேயே அன்று நான் அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டேன்.

அதேபோலவே கடந்த 2018 ஒக்டோபர் 26 ஆம் திகதி நான் மேற்கொண்ட தீர்மானமானது, 2014 நவம்பர் 21 ஆம் திகதி நான் மேற்கொண்ட தீர்மானத்தை விட மிகப் பாரதூரமான, சவால்மிக்க அதேநேரத்தில் மிகவும் இக்கட்டான ஒரு தீர்மானமே ஆகும் என்பதை நீங்களும் ஏற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகின்றேன். இந்த அனைத்து தீர்மானங்களையும் உங்களதும் எனதும் அன்புக்குரிய இந்த தாய் நாட்டுக்காகவும் அன்புக்குரிய பொதுமக்கள் உங்களுக்காகவுமே என்பதை நான் இங்கே மிகுந்த கௌரவத்துடனும் பணிவுடனும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

2015 ஆம் ஆண்டு எனது உயிரைப் பணயம் வைத்து அன்று பெற்றுக்கொண்ட அந்த அரசியல் வெற்றியை கொச்சைப்படுத்தும் வகையில் ஒழுக்கமிக்க அரசியலுக்கு ஒவ்வாத அரசியல் செயற்பாடுகளில் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பிரவேசித்தார். இலங்கையின் எதிர்காலத்தை அவரும் அவருடன் நெருங்கி செயற்படும் உண்மையான மக்களின் உணர்வுகளை உணராத ஒரு சில செல்வந்தர்கள் குழுவினரின் களியாட்ட செயற்பாடுகளாக்கிக் கொண்டார் என்பதே எனது நம்பிக்கையாகும்.

குறிப்பாக நல்லாட்சி அரசாங்கம் எனும் கருப்பொருளை கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் மிக வெளிப்படையாகவே துஷ;பிரயோகம் செய்தார் என்பதே எனது நம்பிக்கையாகும். 2015 ஆம் ஆண்டு ஜனவரி 08 ஆம் திகதி நான் வெற்றியீட்டியதன் பின்னர் 09 ஆம் திகதி மாலையில் நான் ஜனாதிபதியாக பதவியேற்ற அதே கையோடு ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பாராளுமன்றத்தில் 47 பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே அவருடன் இருந்த பின்னணியிலும் அவரை பிரதமர் பதவியில் அமர்த்தியமை எனக்கு ஞாபகம் இருப்பதைப் போல் உங்களுக்கும் ஞாபகம் இருக்கும் என நான் நினைக்கின்றேன்.

இருப்பினும் அந்த உன்னதமான நல்லாட்சி கோட்பாடுகளையும் நோக்கங்களையும் எதிர்பார்ப்புகளையும் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் நாசமாக்கினார் என்பதை என்னைப் போலவே நீங்களும் கடந்த சில ஆண்டுகளாக பெற்ற அனுபவங்களில் அறிந்திருப்பீர்கள் என நான் நம்புகின்றேன். நாட்டில் ஊழலும் மோசடியும் தலைதூக்கின.

ஐக்கிய தேசியக் கட்சியும் அதன் கூட்டுக்கட்சிகளும் அதாவது அச்சமயம் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்கிய அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புக்கள் என 49 தரப்புக்கள் எம்முடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்கள். அதன்மூலம் நாம் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் ஏற்படுத்திக் கொண்ட எதிர்பார்ப்புகளும் மிகத் தூய்மையான உயரிய உன்னத குறிக்கோள்களும் மிக அப்பட்டமான முறையில் துவம்சம் செய்யப்பட்டதுடன் நாட்டில் ஊழலும் மோசடியும் தலைதூக்கின.

சில தினங்களுக்கு முன் டி.எஸ்.சேனாநாயக்க ஞாபகார்த்த நிகழ்வில் வெளியிட்ட கருத்து உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என நான் நினைக்கின்றேன். டி.எஸ்.சேனாநாயக்க அவர்களின் அரசியல் நோக்கு, டட்லி சேனாநாயக்க அவர்களின் அரசியல் நோக்கு, ரணசிங்க பிரேமதாச அவர்களின் அரசியல் நோக்கு ஆகியன ஐக்கிய தேசிய கட்சியினை ஒரு பலமிக்க, பாரிய அரசியல் கட்சியாக எவ்வாறு உருவாக்கின என்பதையும் நமது கலாசாரம், நாட்டுப்பற்றுமிக்க நமது உற்பத்திகள் உட்பட அனைத்தையும் எந்தளவு பாதுகாத்தன என்பதையும் நாட்டின் தனித்துவம், ஒருமைப்பாடு ஆகிய எமது உயரிய தன்மைகளை அந்த சிரேஷ;ட தலைவர்கள் எந்தளவுக்கு பாதுகாத்தார்கள், அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்கள் என்பதையே நான் கூறினேன்.

ஆகையால் நான் இப்போதும் பிரார்த்திப்பது ஐக்கிய தேசிய கட்சியின் தற்போதைய தலைவர்களுக்கு டி.எஸ், டட்லி, ஜே.ஆர்.ஜயவர்தன, பிரேமதாச ஆகியோர் கடைப்பிடித்த அந்த அரசியல் நோக்குகள்மிக்க இன்றைய உலகுக்கு பொருந்துகின்ற ஒரு சமூகத்தை உருவாக்கத்தக்க அறிவு கிட்ட வேண்டும் என நான் பிரார்த்திக்கின்றேன்.

ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பொதுவாகவே கூட்டுச் செயற்பாடற்ற, தன்னிச்சையான தீர்மானங்களை எடுக்கும் மிகவும் முரட்டுத்தனமான பிடிவாதமிக்க முறையிலேயே அரசாங்கத்தில் செயற்பட்டார். அவரின் அந்த செயற்பாடுகள் ஒரு பாரிய அரசியல் நெருக்கடியை உருவாக்கியது. கூட்டுத் தீர்மானங்கள், கலந்துரையாடல்கள், கருத்துப்பரிமாறல்கள் அற்ற நிலையில் அவரின் நெருங்கிய சகாக்களுடன் மாத்திரம் கலந்தாலோசித்து முடிவுகளை எடுத்ததன் காரணமாக ஒரு நாடு என்ற வகையில் எமக்கு துரதிஷ்டமான நிலை ஏற்பட்டது.

இங்கே இன்னொரு விடயத்தையும் நான் குறிப்பிட வேண்டும். ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும் எனக்கும் இடையில் கடந்த மூன்றரை வருடங்களுக்கு மேலான காலப்பகுதியில் கொள்கை ரீதியிலான அரசியல் பிளவையும் வேறுபாட்டையும் முரண்பாடுகளையும் நான் தெளிவாகக் கண்டேன். ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் கொள்கைக்கும் எனது அரசியல் கொள்கைக்கும் இடையில் கொள்கை ரீதியிலான மோதல் ஏற்பட்டது.

அதுமாத்திரமன்றி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும் எனக்கும் இடையில் பாரிய கலாசார வேறுபாடுகளையும் நான் கண்டேன். அவருக்கும் எனக்கும் இடையிலான இந்த அரசியல் கொள்கை ரீதியிலான வேறுபாடுகள், அரசியல் கலாசார ரீதியிலான வேறுபாடுகள், தனிநபர் சார்ந்த வேறுபாடுகள் ஆகிய அனைத்தும் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான நெருக்கடியை மிக மோசமாக்குவதற்கு காரணமாக அமைந்தன என நான் நம்புகின்றேன். நான் ஏனைய சிரேஷ;ட தலைவர்களுடன் கூடியிருந்த காலங்களில் நாம் இணைந்து செயற்படுவோம். கூட்டாக செயற்படுவோம். நாம் எடுக்கும் தீர்மானங்களை கலந்துரையாடி மேற்கொள்வோம்.

நல்லாட்சி கோட்பாடுகளை அடையும் வகையில் நாம் செயற்படுவோம் என நான் அவரிடம் பல தடவைகள் எடுத்துக் கூறினேன். எனினும் 62 இலட்சத்திற்கும் அதிகமான வாக்காளர் மக்களின் அந்த உன்னதமான அபிலாiஷகளை அவர் கவனத்தில் கொள்ளவில்லை. அவர் அப்படி நடந்ததையிட்டு நான் மிகவும் மனம் வருந்துகின்றேன். இந்த நாட்டின் தலைமைத்துவத்தை நான் பொறுப்பேற்றது இந்த நாட்டை இலஞ்சம், ஊழல் அற்ற நல்லாட்சி கோட்பாடுகளை முதன்மைப்படுத்திய புத்தாக்கமிக்க மிகச் சிறந்ததோர் அரச நிர்வாகத்தை நிலைநாட்டுவதற்கேயாகும். கடந்த கால அனுபவங்களுடன் தற்கால, எதிர்கால சவால்களை அறிந்து எமது நாட்டின் எதிர்காலத்தை மிகவும் உயரிய வகையில் எதிர்கால குறிக்கோள்களை அடையும் அதேவேளை, ஆன்மீக நல்லொழுக்கமிக்க சிறந்த கோட்பாடுகளுடன் முதன்மைப்படுத்தி செயற்பட நான் தொடர்ந்தும் முயற்சித்து வந்ததுடன், அதற்காக பெரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டேன்.

அநேகமான நேரங்களில் நான் சில அடிகளை பின்வாங்கியும் இருக்கின்றேன். கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலான காலப்பகுதியில் சில சமயங்களில் நான் சினத்துடன் கருத்து தெரிவித்ததை நீங்கள் அவதானித்திருப்பீர்கள் அவ்வாறான வேளைகளில் நீங்கள் என்னை குறை கூறியதையும் நான் அறிவேன். சில வேளைகளில் நான் முதிர்ச்சியடையவில்லை என்றும் உணர்ச்சிவசப்படுவதாகவும் கூறியிருக்கின்றீர்கள்.

ஆயினும் அரசாங்கத்தின் அந்தரங்க கலந்துரையாடல்களின் போதும் அமைச்சரவை கூட்டங்களிலும் கட்சித் தலைவர்களின் கூட்டங்களிலும் நான் எந்த அளவு பொறுமையாகவும் கண்ணியமாகவும் நடந்து கொண்டேன் என்பதை எனது மனசாட்சி மட்டுமே அறியும். அந்த அர்ப்பணிப்பை நாட்டுக்காவும் நாட்டு மக்களுக்காகவுமே அதை நான் செய்தேன். இருந்தபோதும் நீங்களும் ஏற்கனவே அறிந்தவாறு அந்த உன்னத குறிக்கோள்களை முன்னிலைப்படுத்தி உருவாக்கிய இந்த நல்லாட்சி கருப்பொருளை, இந்த அரசாங்கத்தை உருவாக்கி மூன்று மாதங்கள் முடிவதற்கு முன்னரே சிதைத்து விட்டார்கள்.

மத்திய வங்கியின் மகா கொள்ளை நமது நாட்டை பாரிய பொருளாதார பாதாளத்தில் தள்ளிவிட்டது. இலங்கை வரலாற்றில் அரச சொத்துக்கள் மீதான இத்தகைய கொள்ளையடிப்பை நாம் கேட்டுக்கூட இருக்கவில்லை. அந்த தூய்மையான நல்லாட்சி அரசியல் கோட்பாடுகள் இலஞ்ச, ஊழலற்ற அரச நிர்வாகத்தை முன்னெடுப்பதாக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை வெளிப்படையாகவே மீறினார்கள்.

எனது ஞாபகத்தில் இருக்கின்றது அன்புக்குரிய பிள்ளைகளே பெற்றோர்களே அந்த மத்திய வங்கி சூறையாடல் சம்பந்தமாக நாட்டில் ஏற்பட்ட மக்கள் எதிர்ப்பு போராட்டங்கள், எதிர்க்கட்சி, அரசியல் கட்சிகளின் சமூகத்திற்கு பொறுப்புக்கூறும் சிவில் அமைப்புகள் ஆகியன குரல் எழுப்பியபோது அரசாங்கத்தினுள் எந்தளவு பாரிய நெருக்கடியான நிலை ஏற்பட்டது என்பதை நான் அறிவேன்.

அந்த சம்பவத்துடன் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் எவ்வாறு செயற்பட்டார் அவரது நடத்தை எவ்வாறானதாக இருந்தது என்பது பற்றி இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கின்றது. மிகுந்த பதற்றத்துடனேயே அவர் செயற்பட்டார். அச்சமயம் மத்திய வங்கியின் பணிக்குழாமை சந்திக்க நான் செல்வதற்கு தயாராகிக் கொண்டிருந்தபோது ரணில் விக்கிரமசிங்க அவர்கள் எனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு ஓடி வந்து மிகுந்த பதற்றத்துடன் அவர் என்னிடம் கூறினார். மத்திய வங்கி எனது கட்டுப்பாட்டின் கீழேயே இருக்கின்றது.

அதாவது வர்த்தமானிமூலம் எனது கட்டுப்பாட்டுக்கு கீழேயே இருக்கின்றது அதனால் நீங்கள் எதற்காக மத்திய வங்கிக்கு போக வேண்டும் என என்னிடம் வினவினார். அப்போது நான் அவரிடம் உங்களுக்கு வர்த்தமானி அறிவித்தல் மூலம் அந்த வங்கி கையளிக்கப்பட்டிருக்கின்றது என்பது உண்மை ஆனால் நான் இந்த நாட்டின் ஜனாதிபதி அல்லவா எனக்கு அங்கு செல்வதற்கு உரிமை இருக்கின்றதல்லவா எனக் கூறினேன். அவ்வாறு கூறிவிட்டு இன்னும் சொற்ப நேரத்தில் மத்திய வங்கிக்கு செல்ல போகிறேன் எனக் கூறினேன். அத்தோடு அவர் எனது வீட்டைவிட்டு வெளியேறினார்.

சொற்ப நேரத்தின் பின் நான் மத்திய வங்கியை சென்றடைந்தபோது மத்திய வங்கி நிதி மோசடி காரணமாக விடுமுறையில் இருந்த மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் அவர்கள் என்னை வெற்றிலை கொடுத்து வரவேற்க மத்திய வங்கி வாசலில் காத்திருந்தார்.

அவர் எவ்வாறு அங்கே வந்தார் என நான் ஆச்சரியப்பட்டேன். அப்போது அவர்கள் மிகவும் பதற்றத்துடன் நடந்துகொண்ட விதத்தையும்; பதற்றமடைந்திருந்த அவர்களது மனோ நிலையையும் அப்போது நான் தெளிவாகக் கண்டேன். அந்த சம்பவத்தினால் நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடியும் அரசியல் நெருக்கடியும் ஏற்பட்டது. அதற்கு தீர்வு காணும் வகையிலும் மக்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்கும் வகையிலுமே ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்தேன்.

அந்த ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்து அதன் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டபோது, ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் என்னைக் குறை கூறியவாறு ஏன் ஆணைக்குழுவை நியமித்தீர்கள் என என்னிடம் வினவினார்கள். அப்படி செய்ததன்மூலம் ஐக்கிய தேசியக் கட்சியின் மீது நான் அவமதிப்பை ஏற்படுத்தினேன் என்பதே அவர்களது எண்ணமாக இருந்தது.

அதற்கு நான் அந்த சம்பவத்தின்; உண்மையை அறிவதற்கும் மக்களின் கோரிக்கைக்கு செவிமடுக்கவுமே நான் இந்த ஆணைக்குழுவை நியமித்தேன் எனக் கூறினேன். மத்திய வங்கியின் அந்த சம்பவமே பொருளாதார ரீதியில் இன்னும் எம்மால் தலைதூக்க முடியாத மிக மோசமான பாரிய பொருளாதார பின்னடைவை ஏற்படுத்திய காரணியாக இருக்கின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

இவ்வருடம் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நடத்தப்பட்ட உள்ளூராட்சி சபை தேர்தல்களில் கிடைத்த பெறுபேறுகளை அரசாங்கத்தின் குறைபாடுகளை திருத்திக் கொள்ள மக்கள் வழங்கிய ஒரு தீர்ப்பாகவே நான் கருதுகின்றேன். ஆகையால் அதன்போது ரணில் விக்கிரமசிங்கவையும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களையும் அழைத்து நாங்கள் மூன்று வருடங்களாக மேற்கொண்ட செயற்பாடுகளைப் பற்றி மக்கள் இப்போது தமது தீர்ப்பை வழங்கியிருக்கின்றார்கள். நாங்கள் இப்போது எம்மை திருத்திக் கொள்ள வேண்டும் எனக் கூறினேன்.

அத்தோடு பிரதமர் அவர்களிடம் நீங்கள் எனது அதிகாரத்தையும் கையிலெடுத்து செயற்பட்டீர்கள் ஆயினும் என்னை அதிகாரத்தில் அமர்த்தும் செயற்பாட்டிற்கு நீங்கள் முன்னின்று உழைத்ததால் அதற்கு நன்றி உள்ளவனாக இருக்க வேண்டும் என்பதற்காகவே நான் மௌனமாக இருந்தேன் எனக் கூறினேன். அந்த நன்றிக்கடன் செலுத்த வேண்டும் என்ற உயரிய பண்பினை நான் பின்பற்றியதால் ஒருபுறத்தில் நாட்டுக்கு பாரிய தீங்கு விளைவிக்கப்பட்ட அதே சந்தர்ப்பத்தில்; மறுபுறத்தில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு தான் விரும்பியவாறு சில வேளைகளில் ஜனாதிபதி அதிகாரங்களைக் கூட உபயோகப்படுத்திக் கொள்வதற்கு அவருக்கு நான் அதிகாரத்தைக் கொடுத்திருந்தேன்.

இதனால் ஏற்பட்ட விளைவுகள் என்ன? கடந்த மூன்று வருட காலத்தில் ஏற்பட்ட பல்வேறு சம்பவங்கள் காரணமாக மிக மோசமான அவல நிலையே ஏற்பட்டிருக்கின்றது. எனது உரை இன்னும் நீடிக்கும் என்பதால் காலத்தை நான் வீண்விரயம் செய்ய விரும்பவில்லை. ஆயினும் எதிர்வரும் காலங்களில் அவ்வப்போது அந்த விடயங்களைப்பற்றி நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என நான் எண்ணியிருக்கின்றேன்.

இந்த சம்பவங்களின் பின்னணியில் இரண்டு நாட்களுக்கு முன் நான் எடுத்த தீர்மானம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களை பிரதமர் பதவியில் அமர்த்துவதற்கும் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களை பிரதமர் பதவியில் இருந்து நீக்குவதற்குமான முடிவை நான் எடுப்பதற்கு மிக முக்கியமான காரணத்தை மிகுந்த மதிப்புடன் நான் உங்களுக்கு விளக்கிக் கூற விரும்புகின்றேன்.

எனது அரசியல் வாழ்க்கைக்கு இன்று 51 வருடங்களுக்கு மேலாகின்றது. கடந்த சில தினங்களாக ஊடகங்களில் தோன்றிய நாமல் குமார எனும் நபர் என்னையும் கோட்டாபய ராஜபக்ஷ அவர்களையும் கொலை செய்யவிருக்கும் சதித்திட்டம் பற்றிய தகவல்களை வெளியிட்டார். அது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வு பிரிவிற்கு நான் பணித்தேன்.

ஆனால் பொலிஸ்மா அதிபர் முதலில் அந்த விசாரணைகளை குற்றப்புலனாய்வு விசாரணை பிரிவினரிடம் கையளித்திருக்கவில்லை. பொலிஸின் வேறொரு பிரிவினரிடமே அதனைக் கையளித்திருந்தார். அதன்போது அந்த விசாரணைகளின் மீது நம்பிக்கை கொள்ள முடியாது என்ற நிலைமை ஏற்படும் என்பதை நான் உணர்ந்தேன். அவ்வாறு ஊடகங்களில் வெளிவந்த கொலை சதி திட்டகளைப் பற்றி விசாரணை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே அந்த தகவல்களை முன்வைத்து 48 மணித்தியாலங்கள் கடப்பதற்கு முன்பாகவே பொலிஸ்மா அதிபர் அந்த தகவல்களை வெளியிட்ட நபர் சாட்சியமாக கையளித்த ஒலிநாடாக்கள் சந்தேகமானவை என அறிவித்தார்.

நாட்டின் ஜனாதிபதியை கொலை செய்யும் சதித்திட்டம் பற்றிய தகவல்களை வெளியிட்ட ஒலிநாடா மீதான எந்தவிதமான தொழினுட்ப விசாரணையையும் மேற்கொள்ளாது அந்த ஒலிநாடா சந்தேகத்திற்குரியது எனக்கூறும் அளவிற்கு பொலிஸ்மா அதிபரின் அந்த கீழ்த்தரமான செயற்பாடு ஒரு பொலிஸ்மா அதிபருக்கு உகந்ததா என மதிப்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

இந்த சதி பற்றிய விசாரணைகளை மேற்கொள்ளும் குற்றப்புலனாய்வு திணைக்களமும் புலனாய்வு பிரிவினரும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கிவரும் அரசாங்கத்தின் புலனாய்வு குழுக்களும் இதுவரைப் பெற்றுக்கொடுத்திருக்கின்ற தகவல்களின்படி இந்த சதித்திட்டம் மிகப் பாரதூரமானதாகவே இருக்கின்றது. நாட்டு மக்களுக்கு இதுவரை அறியக் கிடைக்காத பெருமளவு தகவல்கள் இது தொடர்பில் கிடைக்கப் பெற்றிருக்கின்றன.

என்னைக் கொலை செய்வதற்கான சதித்திட்டத்துடன் சம்பந்தப்பட்ட அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் பற்றிய தகவல்களையும் இந்த நபர் பெற்றுக் கொடுத்திருக்கின்றார். அதேநேரத்தில் இந்த விசாரணைகளுக்கு பாதகமான முறையில் பலவிதமான தாக்கங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. சட்டமா அதிபர் திணைக்களத்தின் பொறுப்புமிக்க சில அதிகாரிகள் இந்த விசாரணைகளின் முக்கியமான திருப்புமுனைகளில் கைநழுவிச் செல்லும் நிலைமையும் ஏற்பட்டிருக்கின்றது.

இந்தப் பின்னணியில் நாட்டு மக்களாகிய எனது அன்புக்கும் மதிப்புக்கும் உரிய உங்களிடம் நான் மிகுந்த கௌரவத்துடன் கேட்டுக்கொள்வது இந்த அரசியல் நெருக்கடி பொருளாதார நெருக்கடி ஆகியவற்றிற்கு பின்னால் என்னைக் கொலை செய்வதற்கான சதித்திட்டம் பற்றிய மிக முக்கியமான தகவல்கள் வெளிவந்திருக்கும் நிலையில் என் முன் எஞ்சியிருந்த ஒரே தீர்வு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களை அழைத்து அவரை பிரதமர் பதவியில் அமர்த்தி புதிய அரசாங்கத்தை அமைப்பது மாத்திரமே ஆகும்.

இந்த புதிய அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற மதிப்பிற்குரிய 225 அங்கத்தவர்களுக்கும் வெளிப்படையாக நான் அழைப்பு விடுக்கின்றேன். மிகத் தூய்மையான எண்ணத்துடன் தற்போது நிலவுகின்ற பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கும் அரசியல் நெருக்கடி இப்போது பெருமளவு தணிந்திருக்கின்ற நேரத்தில் எமது நாட்டின் எதிர்காலத்திற்காக நான் எடுத்திருக்கும் இந்த தீர்மானத்துடன் மகிந்த ராஜபக்ஷ அவர்களை பிரதமராக்கி புதிய அரசாங்கத்தை அமைக்கும் எனது தீர்மானத்துடன் உங்களதும் எனதும் இந்த உன்னத தாய் நாட்டிற்காக அந்த உன்னத குறிக்கோளை அடைந்து ஜனநாயகத்தையும் மக்களிள் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்தி, மனித உரிமைகளையும் அடிப்படை உரிமைகளையும் உறுதிப்படுத்தி, ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்தி, மக்களின் வரப்பிரசாதங்களை பலப்படுத்தி வளமான பொருளாதாரம் மிக்க பண்புமிக்க மிகவும் ஒழுக்கமான சமூகத்தை கட்டியெழுப்ப இந்த புதிய அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு தருமாறு நான் உங்களிடம் கேட்டுக் கொள்கின்றேன்.

கடந்த கால கசப்பான அனுபவங்களைப் பற்றி நான் இங்கே மீண்டும் குறிப்பிட வேண்டும். அர்ஜுன் மகேந்திரன் அவர்களை இந்த நாட்டுக்கு அழைத்துவந்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய பொறுப்பை கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அதற்குக் காரணம் இந்த நாட்டில் யாவரும் அறிந்தவாறு அர்ஜுன் மகேந்திரன் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் மிகவும் நெங்கிய நண்பன் என்பதனாலேயே ஆகும். கடந்த சில வருடங்களாக நம் நாட்டின் தேசிய கைத்தொழில் துறை நலிவடைந்து சென்றிருக்கின்றது. அவற்றை ஊக்குவிப்பதற்கும் பலப்படுத்துவதற்கும் அரசாங்கத்திடமிருந்து போதுமான அளவு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை.

வெளிநாட்டு முதலீடுகளில் மாத்திரம் நம்பிக்கை வைத்து உள்நாட்டு கைத்தொழிலாளர்களையும் உள்நாட்டு வர்த்தகர்களையும் நலிவடையச் செய்யும் பொருளாதாரக் கொள்கையே முக்கியமாக இங்கே செயற்படுத்தப்பட்டது. இந்தப் பொருளாதாரக் கொள்கையின் குறைபாடுகள் ஒருபுறத்தில் இருக்க மறுபுறத்தில் இந்தப் பொருளாதாரத்தை சிதைத்த மேற்குறிப்பிட்ட மத்திய வங்கி கொள்ளையின் குற்றவாளிகளுக்கு துரிதமாக தண்டனைகளைப் பெற்றுக்கொடுக்க இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கான சட்டம் மீதான திருத்தங்கள் தொடர்பில் கடந்த வாரம் பாராமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதன் மூலம் என்ன நடந்தது என்பதைப் பற்றி ஆராய்ந்து பார்த்தீர்களா என நான் உங்களிடம் வினவ விரும்புகின்றேன்.

சட்ட நிபுணர்கள், சட்டமா அதிபர் திணைக்களம், இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழு உள்ளிட்ட இந்த விசாரணைகளை நடத்திய அனைத்து அதிகாரிகளும் இந்த வருட முற்பகுதியிலேயே இப்போது இருக்கின்ற சட்டதிட்டங்களுக்கு அமைய மத்திய வங்கி கொள்ளையின் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டுமாயின் அதற்கு குறைந்தபட்சம் 15 வருடங்களுக்கு மேல் செல்லும் என தெரிவித்திருக்கின்றார்கள். அவர்கள் கொள்ளையடித்த பணத்தை மீளப் பெறுவதற்கும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதற்கும் 15 வருடங்களுக்கு முன் இயலாத காரியம் என்பதை சட்ட நிபுணர்கள் எனக்கு விளக்கமளித்திருக்கின்றார்கள்.

அதற்குத் தீர்வாக இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழு சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியன இந்த விசாரணையை ஒரு வருடத்திற்குள் பூர்த்தி செய்து மக்களின் இந்த பெருந்தொகை பணத்தை மீண்டும் அரசாங்கத்திற்கு பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் ஒரு வருடத்திற்குள் விசாரணைகளை நடத்தி முடித்து பெறுபேறுகளைப் பெறுவதற்கு இயலும் வகையில் இலஞ்ச, ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவின் சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்களைப் பற்றி எமக்கு அறியத் தரப்பட்டது. குறிப்பிட்ட அந்த மாற்றங்களை செய்து இன்றைக்கு ஆறு மாதங்களுக்கு முன்பே ஜனாதிபதி அலுவலகம் ஊடாக பாராளுமன்றத்திற்கு அதனை அனுப்பி வைத்தோம்.

ஐந்து மாதங்கள் கடந்தும் அவை இன்னும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. அந்த ஆவணம் சபாநாயகர் அலுவலகத்தின் பெட்டிகளுக்குள் சென்றுவிட்டன. இதைப்பற்றி நான் மிகத் தீவிரமாக விசாரித்தேன். இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்களிடமும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் உத்தியொகத்தர்களிடமும் வினவினேன்.

அதற்கமைய கடந்த வாரம் பாராளுமன்றத்தின் முன் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் சட்ட சீர்திருத்தங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. ஆயினும் அதற்கான பாராளுமன்ற அனுமதியைப் பெற்றுக் கொடுப்பதை திகதி குறிப்பிடப்படாது பின்போடப்பட்டிருக்கின்றது. அவ்வாறு பின்போடப்பட்டது ஏன்? எவரின் தேவைக்காக? எவரின் தலையீட்டினால்? இதனால் பொதுமக்களுக்கு சொந்தமான இந்த பெருந்தொகைப் பணம் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் கிடைக்காது போகின்றது.

குற்றாவளிகளுக்கு தண்டனை வழங்க 15 முதல் 20 வருடங்கள் வரை செல்லும். இந்த சீர்திருத்தம் திகதி குறிப்பிடப்படாது பின் போடப்பட்டதன் நோக்கம் இதுவே. கடந்த காலங்களில் ஈஏபி நிறுவனத்தின் கொடுக்கல் வாங்கல் பற்றிய ஒரு சம்பவத்தை நீங்கள் ஊடகங்களில் கண்டிருப்பீர்கள். அந் நிறுவனத்தை வெளிநாட்டு வர்த்தகர் ஒருவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. விலைமனுக் கோரல் இல்லாத ஊழல் நிறைந்த ஒரு கொடுக்கல் வாங்கலாகவெ ஈஏபி நிறுவனத்தின் செயற்பாடுகள் இருக்கின்றன.

இதைப் பற்றியும் எதிர்வரும் காலங்களில் விரிவான விசாரணைகளை நடத்த எண்ணியிருக்கின்றேன். பெறுமதிமிக்க விசேட விலைமனுக்;கோரல்கள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றன. கட்டிட நிர்மாணப் பணிகளும் விலைமனுக் கோரலின்றி கொடுக்கப்பட்டிருக்கின்றன. விலைமனுக் கோரல்கள் அற்ற விதத்தில் அமைச்சரவைக்கு அவசரமான ஆவணங்களாக சமர்ப்பிக்கப்பட்டு அவை மீதான எதிர்ப்புகளை கவனத்தில் கொள்ளாது இந்த பாரிய நிர்மாணப் பணிகள் அந்நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன.

கண்டி அதிவேக வீதி அதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். கடந்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட காணி பற்றிய விசேட விதிமுறைகள் சட்டம் மற்றும் காணி வங்கியை ஸ்தாபிப்பதற்கான சட்டத்திற்கு நான் எனது கடும் எதிர்ப்பை தெரிவித்து அவற்றை பிற்போட்டேன். அமைச்சரவையில் பெரும்பாலும் அமைச்சர்கள் இச்சட்டத்தினை எதிர்க்கின்றார்கள்.

கடந்த வாரம் முன்வைக்கப்பட்ட காணிகள் பற்றிய இந்த விசேட சட்ட ஏற்பாடுகளைக் கொண்ட சட்டம் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டு பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெறுமாயின் நமது இந்த தாய் நாட்டின் அனைத்து நிலங்களையும் எந்தவொரு தங்குதடைகளுமின்றி வெளிநாட்டு வர்த்தகர்களுக்கு சொந்தமாகவே பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.

டி.எஸ்.சேனாநாயக்க, காமினி திசாநாயக்க, பண்டாரநாயக்க ஆகியோரினால் ஆரம்பிக்கப்பட்ட விவசாயக் குடியேற்றங்கள் ஒட்டுமொத்தமாகவே இதனால் அழிந்துவிடும். கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பொருளாதார மற்றும் அரசியல் கொள்கையின் அடிப்படையில் முன்வைக்கப்பட்ட இந்த நாட்டின் காணி உரிமை பற்றிய இந்த விசேட சட்ட ஏற்பாடுகளை முழுமையாக நாம் அப்புறப்படுத்த வேண்டும்.

அதேபோன்று இங்கு இன்னொரு விடயத்தையும் நான் குறிப்பிட வேண்டும். ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் உருவாக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்ட பொருளாதார முகாமைத்துவ சபை பாரிய ஊழல்களைக் கொண்டதாகும். அதனை இரத்துச் செய்வது பெரும் சவாலாகவே இருந்தது. இருப்பினும் கடும் முயற்சியின் பின்னர் அதை நான் இரத்துச் செய்தேன்.

அச்சபையினால் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் ஊழல் மிக்கவையாக இருந்தன. அதற்கான ஒரு மாற்றுத்திட்டமாகவே நாட்டின் பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்யும் வகையில் நான் தேசிய பொருளாதார சபையை உருவாக்கினேன். அந்த தேசிய பொருளாதார சபையை பலவீனப்படுத்துவதற்கு ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தன்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். அந்த பொருளாதார சபைக்கு நியமிக்கப்பட்ட பொருளாதார நிபுணருக்கான மாதாந்த கொடுப்பனவு உலக அங்கீகாரத்தைப் பெற்ற எம்முடன் தொடர்புகளை வைத்திருக்கும் விசேட சர்வதேச நிதி நிறுவனம் மூலமே வழங்கப்பட்டது.

அந்த சர்வதேச நிதி நிறுவனம் பெற்றுக்கொடுத்து வந்த மாதாந்த கொடுப்பனவு கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அந்நிறுவனத்திற்கு பெற்றுக்கொடுத்த ஆலோசனைக்கமைய நிறுத்தப்பட்டது. அவ்வாறு தேசிய பொருளாதார சபையினை பலவீனப்படுத்துவதற்கும் அதன் செயற்பாடுகளை தடுப்பதற்கும் தன்னாலான அனைத்தையும் அவர் செய்து வந்தார். ரணில் விக்கிரமசிங்க அவர்களின் முரட்டுத்தனமான தீர்மானங்களே இந்த அனைத்து நெருக்கடிகளுக்கும் காரணமாக அமைந்தது என்பதை நான் தெளிவாகக் கூறவேண்டும்.

இதனால் இவ்வாறான அனைத்து செயற்பாடுகளுக்கும் எனக்கிருந்த ஒரே மாற்றுவழி கௌரவ மகிந்த ராஜபக்ஷ அவர்களை புதிய பிரதமராக நியமித்து புதிய அரசை அமைப்பது மாத்திரமே ஆகும். மகிந்த ராஜபக்ஷ அவர்களை புதிய பிரதமராக பதவியில் அமர்த்தி இந்த புதிய அரசாங்கத்தை அமைப்பது இலங்கை அரசியல் யாப்புக்கு முரணான செயலாகுமென கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ் சுமத்துகின்றது.

என்னால் மேற்கொள்ளப்பட்ட இந்த தீர்மானமானது சட்ட நிபுணர்களின் ஆலோசனைகளின்படி அரசியல் யாப்புக்கு அமைவாக எந்தவித முரன்பாடுகளும் அற்ற விதத்திலேயே இந்தப் பதவிப் பிரமாணமும் பதவியிலிருந்து நீக்கப்பட்டமையும் புதிய அரசாங்கத்தை உருவாக்குவதும் செய்யப்பட்டிருக்கின்றது. ஆகையால் இந்த செயற்பாடுகள் அரசியல் யாப்புக்கு முரனானவை என்ற குற்றச்சாட்டை நான் முழுமையாக நிராகரிக்கின்றேன் என்பதை மிகுந்த கௌரவத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அதேபோல் இன்று நிலவுகின்ற அரசியல் நிலைமையின்படி இந்த நாட்டின் பொதுமக்கள், அரச உத்தியோகத்தர்கள், பொலிஸ், இராணுவம், கடற்படை, வான்படை, படைத்தளபதிகள் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பு எனக்கு பெற்றுத்தரும் ஒத்துழைப்பைக் கொண்டு நாட்டின் சட்டத்தையும் ஒழுங்கையும் பலப்படுத்தி ஜனநாயகக் கட்டமைப்பை பலப்படுத்தி நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை இலகுவாக முன்னெடுப்பதற்கு வசதியளிக்கும் வகையில் இந்த அனைத்து தரப்புகளும் அவர்களது கடமைகளை முன்னெடுத்து வருவதையிட்டு அவ்வனைவருக்கும் நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அதேபோன்று எனது இந்த உரையை பூர்த்தி செய்யும் நேரத்தில் நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போன்று ஐக்கிய தேசியக் கட்சியினர் என்னை ஜனாதிபதியாக நியமிப்பதில் பாரிய அர்ப்பணிப்புகளை செய்தார்கள் என்பதை நினைவு கூறும் அதே நேரத்தில் நமது இந்த தாய் நாட்டின் சுபீட்சத்திற்காக அன்று நாம் ஏற்படுத்திக் கொண்ட குறிக்கோள்களை அடைய நாம் அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். எனக் கூறிக்கொள்வதுடன் உங்களுக்கும் உங்களது ஐக்கிய தேசியக் கட்சிக்கும் நன்நோக்குமிக்க தேசப்பற்றுமிக்க நாட்டின் சாதாரண குடிமகனின் வேதனைகளை உணர்கின்ற சேனாநாயக்க, ஜயவர்தன, பிரேமதாச ஆகியோரின் தூரநோக்கையும் குறிக்கோள்களையும் பாராட்டுகின்ற ஒரு தலைவரை எதிர்காலத்தில் நீங்கள் பெறுவீர்களாயின் நாங்கள் அனைவரும் எதிர்பார்க்கின்ற அந்த உன்னத குறிக்கோளை அடைய முடியும் என நான் நம்புகின்றேன்.

ஆகையால் எனது நாட்டுக்காகவும் எனது அன்புக்குரிய மக்களுக்காகவும் நான் மேற்கொண்ட இந்த அரசியல் தீர்மானத்தினால் பொருளாதார நெருக்கடியை தீர்த்து அரசியல் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைத்து சுபீட்சமான பொருளாதாரத்துடன் நல்லதோர் சமூகத்தைக் கட்டியெழுப்ப உயரிய ஆன்மீக சமூகத்தை உருவாக்க நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயற்படுவோம் எனக்கூறிக் கொள்வதுடன் அதற்காக ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் அனைத்து அரச ஊழியர்களையும் சகல அரசியல்வாதிகளையும் மதிப்புக்குரிய மகா சங்கத்தினரையும் ஏனைய மதத் தலைவர்களையும் மிகுந்த கௌரவத்துடன் அழைப்பதுடன் இப்பணிகளை இனிதே நிறைவேற்ற உங்களது உத்துழைப்பையும் ஆசீர்வாதத்தையும் நல்குமாறு மிகுந்த கௌரவத்துடன் கேட்டுக்கொள்கின்றேன்.

நன்றி.
வணக்கம்.

- ஜனாதிபதி ஊடகப் பிரிவு
(2018.10.28)

No comments:

Post a Comment