தெமட்டகொட பிரதேசத்திலுள்ள பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைமையகத்தில் முன்னாள் அமைச்சர் அர்ஜூண ரணதுங்கவிற்கும் தொழிலளார்களுக்குமிடையே ஏற்பட்ட முரண்பாட்டினை தொடர்ந்து பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை கலைக்கப்பட்டதை தொடர்ந்து அங்கிருந்த கோப்புக்கள் சிலவற்றை எடுத்துச்செல்வதற்கு சென்ற முன்னாள் அமைச்சருடன் தொழிலாளிகள் முரண்பட்டுள்ளனர். அதை தொடர்ந்து அர்ஜூண ரணதுங்க தனது பாதுகாவலர்களிடம் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளுமாறு கட்டளையிட்டதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
மரணமடைந்த செய்திகேட்ட ஊழியர்கள் தெருவுக்கு இறங்கியுள்ளதுடன் அர்ஜூண ரணதுங்க கைது செய்யப்படாது விட்டால், பணிபகிஸ்கரிப்பை மேற்கொண்டு முழுநாட்டையும் முடக்குவதாக அவர்கள் சவால் விடுக்கின்றனர்.
அதேநேரம் சம்பவ இடத்திற்கு விரைந்திருந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட அர்ஜூண ரணதுங்கவின் பாதுகாவலரை தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகவும் கைது செய்யவுள்ளதாகவும் மக்கள் மத்தியில் தெரிவித்ததாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர் ஒருவர் தெரிவிக்கையில்:
முன்னாள் அமைச்சர் கோப்புக்களை அள்ளிச்செல்ல முற்படுவதாக சில ஊழியர்கள் என்னிடம் வந்து கூறினர். அவ்விடத்திற்கு விரைந்து சென்ற நான் அமைச்சர் அவர்களே, நீங்கள் இப்போது அமைச்சர் இல்லைதானே எதற்காக கோப்புகளை எடுக்கின்றீர்கள், அவ்வாறு எடுத்துச் செல்ல அனுமதிக்கமாட்டோம் என்றேன். அப்போது அங்கிருந்தவர் ஒருவர் கூறினார் இவன்தான் நகரசபை உறுப்பினர் குலதிஸ்ஸ என்று, உடனேயே அர்ஜூண ரணதுங்க என்னை அடித்தார், அடித்து இழுத்துச் சென்றார், அப்போது எனது சக ஊழியர்கள் பின்னே ஓடிவந்தனர். அர்ஜூண ரணதுங்க வெடிவைக்க சொன்னார். அதன்போது அங்கு நின்றிருந்த பொலிஸ் பிரத இன்ஸ்பெக்டர் ஒருவர், வெடிவைக்க வேண்டாம் இங்குள்ள ஊழியர்கள் எனது கட்டுப்பாட்டினுள் நிற்கின்றார்கள் எனும்போது, அர்ஜூணவின் பாதுகாவலர் வெடிவைத்தார், எனது ஒரு நண்பனுக்கு வயிற்றில் வெடி வீழ்ந்தது மற்றவருக்கு எங்கு பட்டது என்பது எனக்கு ஞாபகம் இல்லை.
இது கொலை தொடர்பான பிரதான சாட்சியாகும். அங்கு நின்றவர்கள் பலர் அர்ஜூண ரணதுங்க வெடிவைக்க உத்தரவிட்டதாக கூறுகின்றனர்.
தற்போது அர்ஜூண ரணதுங்க உள்ளே இருக்கின்றார் அவரை கைது செய்யவேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர். அச்சந்தர்ப்பத்தில் அர்ஜூண விசேட அதிரடிப்படையினரின் சீருடையில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பெட்ரோலிய கூட்டுத்தாபனத்துக்குள் சிக்கியிருந்த முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) மீட்டுள்ளனர்.
இதன்போது இடம்பெற்ற பதற்ற நிலையை அடுத்து அவர் வெளியே வர முடியாமல் இருந்துள்ளார்.
இதனை அடுத்து முன்னாள் அமைச்சருக்கு STF சீருடை அணிவித்து, தலைக்கவசம் அணிவித்து அவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.
சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட முழு வீடியோ
No comments:
Post a Comment