Monday, October 22, 2018

ஜமால் மரணம் குறித்து முழு உண்மையும் வெளியிடப்படும்: துருக்கி மிரட்டல். சவுதி புதிய விளக்கம்

ஜமால் மரணம் குறித்த முழு உண்மையும் வெளியிடப்படும் என்று துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து இஸ்தான்புல்லில் ஞாயிற்றுக்கிழமை நடந்த பேரணியில் எர்டோகன் பேசும்போது, ”நாம் அனைவரும் இங்கு நீதியை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறோம். இதன் மூலம் ஜமால் கொலையில் முழு உண்மையும் வெளியாகும். ஏன் சவுதியை சேர்ந்த 15 பேர் துருக்கிகு வர வேண்டும். அவர்கள் ஏன் கைது செய்யப்பட வேண்டும்” என்றார்.

இந்த நிலையில் ஜமால் எவ்வாறு கொல்லப்பட்டார் என்பது குறித்த விளக்கத்தை சவுதி அளித்தே தீர வேண்டும் என பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

இதுகுறித்து அந்த மூன்று நாடுகள், ”பத்திரிகையாளர்களுக்கு எதிரான எந்த வன்முறை தாக்குதலையும் நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். ஜமால் வழக்கில் நாங்கள் நம்பகத்தன்மையின் அடிப்படையில் எங்கள் முடிவை எடுப்போம். இம்மாதிரியான சம்பவம் இன்னொரு முறை நடக்க கூடாது” என்று சவுதியை எச்சரித்துள்ளன.

ஜமால் அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன் போஸ்டில் சவுதி அரசை விமர்சித்தும் குறிப்பாக அதன் இளவரசர் முகமது பின் சல்மானை விமர்சித்தும் கட்டுரைகளை எழுதி வந்தார்.

துருக்கியைச் சேர்ந்த பெண்ணை ஜமால் திருமணம் செய்யவிருந்த நிலையில் இம்மாத தொடக்கத்தில் துருக்கி இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி தூதரக அலுவலகத்துக்குச் சென்றவர் மாயமானார்.

இவ்வழக்கு தொடர்பாக, சவுதியைச் சேர்ந்த 15 பேரின் பெயரை துருக்கி வெளியிட்டது. ஜமாலை சவுதிதான் கொலை செய்திருக்கிறது என்று துருக்கி உறுதியாகக் கூறியதுடன், இதற்கான வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரத்தை துருக்கி வெளியிட்டது.

துருக்கியில் உள்ள சவுதி அரேபியா தூதரகத்தின் உள்ளே ஜமால், விரல்கள் துண்டிக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டு, பின்னர் அவரது தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதாகவும் துருக்கி சமீபத்தில் குற்றம்சாட்டியது.

இந்த நிலையில் ஜமாலின் உடலை இஸ்தான்புல்லிலுள்ள பெல்கிரேட் வனப் பகுதியின் அருகே தேடும் பணியை துருக்கி அரசு மிக தீவிரமாக முடுக்கிவிட்டுள்ளது. ஜமாலின் உடல் இவ்வனப் பகுதியில் இருக்க வாய்ப்பிருப்பதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜமால் கொலை: சவுதி அளித்த புதிய விளக்கம்

சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்திய பத்திரிகையாளர் ஜமாலின் கொலை குறித்து புதிய விளக்கத்தை சவுதி அளித்துள்ளது.

இதுகுறித்து சவுதி வெளியுறவுத் துறை அமைச்சர் அதெல் அல் ஜூபிர், ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சியில் கூறும்போது, ”ஜமால் மோசமான முறையில் கொல்லப்பட்டிருப்பது சர்வதேச அளவில் கண்டனத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஜமால் கொல்லப்பட்டிருப்பது மிகப் பெரிய தவறு. அவர் மரணத்துக்கு சவுதி இளவரசர் முகமது பின் சல்மான்தான் உத்தரவிட்டார் என்பதை நான் மறுக்கிறேன்.

எங்களுடைய மூத்த புலனாய்வு அதிகாரிகளுக்கு ஜமாலின் கொலை குறித்து தெரியாது. ஜமாலின் உடல் எங்கு இருக்கிறது என்று எங்களுக்குத் தெரியாது. ஜமாலின் கொலை தொடர்பாக நாங்கள் அனைத்து உண்மைகளையும் கண்டறிந்து குற்றம் செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கச் செய்ய தீர்மானமாக இருக்கிறோம்” என்றார்.

ஜமால் கொல்லப்பட்ட பிறகு அவரது ஆடையை அணிந்து வந்த சவுதியின் கூலிப்படை நபர்: ஆதாரத்தை வெளியிட்ட துருக்கி



சவுதி தூதரகத்தில் ஜமால் கொல்லப்பட்ட பிறகு அவரது ஆடைகளை அவரைப் போன்ற தோற்றமுடைய சவுதியைச் சேர்ந்த நபர் அணிந்து வரும் வீடியோ ஆதாரத்தை துருக்கி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து துருக்கி அதிகாரிகள் தரப்பில், ”ஜமாலின் மரணம் தொடர்புடைய சவுதியைச் சேர்ந்த 15 பேரில் ஒருவர் இஸ்தான்புல்லிலுள்ள சவுதி தூதரகத்தில் ஜமால் கொல்லப்பட்ட பிறகு அவரது ஆடையை அணிந்து வெளியே வரும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த நபர் தூதரகத்தின் பின் வாசல் வழியாக வெளியேறுகிறார்.

மேலும் அவர் ஜமாலைப் போன்ற தோற்றம் பெற போலியான தாடியை தனது முகத்தில் பொருத்தி இருக்கிறார்” என்று கூறியுள்ளனர்.

ஜமாலின் ஆடை அணிந்து வருபவரின் பெயர் முஸ்தபா அல் மதானி. அவர் சவுதி அனுப்பிய கூலிப்படைகளில் ஒருவர் என்று துருக்கி ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

ஜமால் கொலை குறித்த பல உண்மைகள் வெளிவர உள்ளன என துருக்கி அதிபர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த சிசிடிவி காட்சியை துருக்கி வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment