Monday, October 29, 2018

ஜனநாயகத்தை நிலைநாட்ட எங்களுடன் இணையுங்கள். முன்னாள் பிரதமரின் விசேட வேண்டுகோள்.

குறுகிய அரசியல் வாதங்களில் இருந்து விலகி இலங்கையின் எதிர்காலத்திற்காக ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு அனைவரும் ஒன்றிணையுமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகையில் இன்று (29) மாலை இடம்பெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகளை பாதுகாத்து நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டதாகவும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நேற்று (28) மாலை ஜனாதிபதி மேற்கொண்ட விஷேட உரையில் தனக்கும் அமைச்சரவைக்கும் குற்றம் சுமத்தியதாகவும், 19 ஆவது சீர்திருதத்தின் அடிப்படையில் நாட்டில் நிறைவேற்று அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ஒருவரை தெரிவு செய்யும் சந்தர்ப்பத்தில் அரசியலமைப்பு சீர்திருத்தின் 42(4) சரத்தின் அடிப்படையில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை வெல்லக்கூடிய அமைச்சரே நியமிக்கப்பட வேண்டும் எனவும் இருப்பினும் மஹிந்த ராஜபக்ஷவின் நியமனம் அரசியலமைபிற்கு முரணானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி, சிறு பிள்ளைகளால் கூட நம்ப முடியாத கருத்துக்களை வெளியிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வரலாற்றில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இவ்வாறான சட்ட விரோத செயற்பாடுகளை காணக்கூடியதாக இருக்கவில்லை எனவும் அரச ஊடகங்களில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் மூலம், ஊடக சுதந்திரத்தை கண்டுகொள்ள முடியுமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது ஏற்பட்டுள்ள நிலமைக்கு பாராளுமன்றத்திலேயே தீர்வு உள்ளதாகவும், அதனால் உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டுமாறும் சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பிற்கு முரணான, சர்வாதிகார ஆட்சியை எந்த சந்தர்ப்பத்திலும் அனுமதிக்க முடியாது எனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com