சிவசக்தி ஆனந்தனின் கருத்து சுதந்திரத்தை பறித்தெடுக்கும் தமிழரசு. செம்பியன்
தமிழரசு கட்சியானது ஊடக அடக்குமுறை, கருத்து சுதந்திரம், அரச பயங்கரவாதம், ஜனநாயகம் என மேடைகளில் முழங்குகின்றது. ஆனால் சக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் குரல்வளையை அது நசுக்குகின்றது. அவ்வாறு குரல்வளை நசுக்கப்படுபவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சிவசக்தி ஆனந்தன்.
சிவசக்தி ஆனந்தனின் குரல்வளை கடந்த பத்து மாதங்களாக நசுக்கப்பட்டு , பாராளுமன்றில் அவரது பேச்சு சுதந்திரம் மறுக்கப்படுவதற்கான காரணம் ஒன்றும் விளங்கிக்கொள்ள முடியாதது அல்ல. தமிழ் தேசியக் கூட்டமைப்பு சிவசக்தி ஆனந்தனின் பேச்சுருமையை மறுத்ததற்கு அவர் ஏதோ தேசத்துரோகக் குற்றம் இழைத்து விட்டதாக வியாக்கியானம் தெரிவிக்கின்றனர்.
சிவசக்தி ஆனந்தனுக்கும் த.தே.கூ வினருக்கும் இங்குதான் முரண்பாடு வலுக்கின்றது. கடந்த வருடம் ஜயம்பதி மற்றும் சுமந்திரன் கொண்ட குழுவினரால் வரையப்பட்ட இடைகால அறிக்கையினை ஆதரிக்க வைக்க வேண்டும். அதன் உள்ளடக்கம் என்ன? என்ற தொனிபொருளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பதினாறு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு, சட்டவல்லுனர்கள் இருவரை அழைத்து கொழும்பில் பயிற்சிப்பட்டறை ஒன்று இடம்பெற்றிருந்தது. இப்பட்டறையில் சிவசக்தியானந்தன் தவிர அனைத்தது உறுபினர்களும் பங்குபற்றி இருந்தனர்.
குறித்த இடைகால அறிக்கை ஒற்றை ஆட்சியையே முதன்மைப்படுத்தி நிற்கிறது என்ற கருதுதலில் ஈபிஆர்எல்எப் வரைபிற்கு ஆதரவு வழங்குவதில்லை என்ற முடிவை எட்டியிருந்தமையே, சிவசக்தியானந்தன் குறித்த பயிற்சிப்பட்டறையில் பங்கெடுக்காமைக்கு காரணமாகும்.
அத்துடன் கொழும்பில் நடைபெற்ற கூட்டமொன்றில் பேசிய ஜயம்பதி விக்ரமரட்ண: „திட்டவரைபு தொடர்பில் சிங்கள மக்கள் ஐயம் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை என்றும் அது சிங்கள பௌத்த கோட்ப்பாடுகளை பாதுகாக்கும் வகையிலேயே வரையப்பட்டுள்ளது' என்ற கருத்துப்பட ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
இவாறான ஓர் இடைகால அறிக்கையினை ஆதரிப்பதற்காக வகுபெடுக்கப்பட்ட பட்டறைக்கு ஆனந்தன் செல்லவில்லை என்ற ஒரே காரணத்திகாகவே சிவசக்தி ஆனந்தனின் பேச்சு சுதந்திரம் கடந்த பத்து மாதங்களாக பறிக்கப்பட்டு வருகின்றது.
நேற்றுமுன்தினம் (10.10.2018) பாராளுமன்றில் தனது சிறப்புரிமை மீறப்படுவதாக விவாதிக்க சிவசக்தியானந்தன் சபாநாயகரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, மூன்று நிமிடம் வழங்கப்பட்டிருந்தபோது, சபாநாயகரிடம் சென்ற பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் சிறிதரன் ஆகியோர் சிறப்புரிமை தொடர்பாக விவாதிக்க ஆனந்தனுக்கு சந்தர்ப்பம் வழங்க கூடாது என விண்ணப்பம் செய்துள்ளனர்.
ஆனாலும் தமிழரசுக் கட்சியினரின் கருத்துச் சுதந்திர அடக்கு முறைக்கு எதிரான கோரிக்கையை நிராகரித்த சபாநாயகர், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சிறுப்புரிமையை தன்னால் மறுக்க முடியாது என்று பதிலளித்துள்ளார். தமிழ் மக்களின் உரிமைக்காக குரல்கொடுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பேச்சு சுதந்திரத்தை முடக்க பாராளுமன்றிலேயே முற்பட்டு மூக்குடைந்த வரலாற்று பதிவொன்றை மேற்கொண்டுள்ளனர்.
சிவசக்தி ஆனந்தனுக்கு வழங்கப்பட்ட 3 நிமிடங்களுக்கு மேலதிகமாக பொது எதிரணி தரப்பினரால் வழங்கப்பட்ட மேலதிக நிமிடங்களுடன் 20 நிமிடங்கள் சிவசக்தி ஆனந்தன் சபையில் பேசினார். அதன்போது தனது பேச்சு சுதந்திரம் தமிழரசுக் கட்சியினரால் மறுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். அவ்வேளையில் குறுக்கிட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், தமிழரசுக் கட்சியில் போட்டியிட்டு பாராளுமன்றிற்கு நுழைந்துவிட்டு, சுயாதீனமாக இயங்குகின்ற ஒருவருக்கு தங்கள் கட்சிக்கான நேரத்தை ஒதுக்க முடியாது எனவும், அவருக்கான நேரத்தை சபாநாயகரே வழங்கவேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
சுமந்திரனின் கருத்தினை எதிர்துரைத்த பா.உ தினேஸ் குணவர்த்தன , பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சிறப்புரிமையை இந்த உயரிய சபையிலே அனுமதிக்க முடியாது என்றும் இது உச்சகட்ட அடக்குமுறை என்றும் தெரிவித்ததுடன் முன்னைய காலங்களில் கூட பலருக்கு இவ்வாறு சுயாதீனமாக செயற்பட்ட உறுப்பினர்களுக்கு கருத்துரிமை வழங்கப்பட்டிருந்தது என்றும் அவ்வாறே சிவசக்தி ஆனந்தனுக்கும் வழங்கப்படவேண்டும் என்றும் வாதிட்டார்.
மேலும் பொது எதிரணியின் பலர் சிவசக்தி ஆனந்தனுக்காக குரல்கொடுத்திருந்த அதே சமயத்தில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஒருவர் பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் கட்சிகளைத் தவிர சுயாதீனமாக இயங்கும் ஒருவருக்கு சந்தர்ப்பம் வழங்கக் கூடாது எனத் தெரிவித்தைமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
தனது சிறப்புரிமை மீறப்படுகின்ற விடயம் தொடர்பில் சபாநாயகருக்கு பா.உ சிவசக்தி ஆனந்தன் அவர்களால் நான்கு முறை தெரியப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் சபாநாயகரால் நீதியை நிலை நிறுத்த முடியாமல் போயுள்ளது. இதற்கான காரணம் நல்லாட்சி அரசிற்கு முட்டுக்கொடுத்துக்கொண்டிருக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பை எதிர்க்க திராணியற்ற நிலையிலேயே ஐக்கிய தேசியக் கட்சி உள்ளது என்பதாகும்.
இங்கு வேதனைக்குரிய விடயம் யாதெனில், தமிழரசுக் கட்சியினரின் இத்தகைய அடக்கு முறைக்கு ரெலோ மற்றும் புளொட் துணைபோவதாகும். சக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அநீதி இழைக்கப்படுகின்றபோது, அரசியல் பேதங்களை மறந்து, பாராளுமன்ற சிறப்புரிமைக்காக சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்கள் குரல்கொடுத்தபோது, சித்தார்த்தன் , செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் பெட்டிப்பாம்பாக அடங்கி கிடக்கின்றனர். அவர்களுடைய முழு இலக்கும் அடுத்த தேர்தலில் சீட்டை பெற்றுக்கொள்வதே அன்றி நியாயத்தை இந்நாட்டில் நிலைநாட்டுவது அல்ல.
பாராளுமன்ற சிறப்புரிமைக்காக கட்சி பேதங்களுக்கப்பால் பெரும்பாண்மையின உறுப்பினர்கள் , சிவசக்தி ஆனந்தனுக்காக குரல்கொடுக்கின்றபோது, தமிழ் ஊடகங்கள் தமிழரசுக் கட்சியின் அராஜகத்தை மறைப்பதற்காக தன்மீது மஹிந்த சாயம் பூச முற்படுவதாகவும் சிவசக்தி ஆனந்தன் குறிப்பிடுகின்றார்.
கருத்துச் சுதந்திரத்திற்காக போராடும் ஊடகங்கள், மக்கள் பிரதிநிதி ஒருவனின் குரல்வளை நசுக்கப்படுகின்றபோது, அது அவர் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மக்களின் குரலே நசுக்கப்படுவதாக கருதி அடக்குமுறையாளர்களை அப்பலப்படுத்துவதையிட்டு அவர்களை நியாப்படுத்துவது எந்தவகையில் ஊடக மற்றும் கருத்துச் சுதந்திரத்தை காக்கும் ?
0 comments :
Post a Comment