Monday, October 15, 2018

உள்ளுர் உற்பத்தியை மேம்படுத்துவதற்கு பதிலாக மக்கள் மீது வரிச்சுமையை சுமத்துகின்றது அரசு. ரில்வின்

நாட்டு மக்கள் மீது அரசாங்கம் அளவுக்கதிகமாக கடன் சுமையை ஏற்றுகின்றது. உள்ளூர் உற்பத்திகளை அபிருத்தி செய்யாது வரியையும், தண்டப்பணத்தையும் மக்களுக்கு திணிக்கின்றது என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.

கொத்மலை மேத்தகம பகுதியில் (13) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நாட்டில் அமெரிக்க டொலரின் ஊடாக செய்யப்படும் செலவீனத்தை குறைக்க வேண்டுமென தெரிவிக்கும் நாட்டு தலைவர்கள் மாறி மாறி வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டு உறவினர்களையும், நண்பர்களையும் கூடவே அழைத்து செல்வதற்கு ரூபாவின் செலவைவிட டொலரின் செலவினத்தையே மேற்கொள்கின்றனர்.

அண்மையில் நியூயோர்க்கில் சர்வதேச தலைவர்களின் மாநாட்டுக்கு நாட்டின் ஜனாதிபதிக்கே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

நாட்டின் தலைவர்கள் என்ற வகையில் இவர் அங்கு சென்றதில் தவறில்லை. ஆனால் கூடவே குடும்பத்தாரையும், நண்பர்களையும் அதிகாரிகளையுமாக 62 பேரை அழைத்து சென்றதை நாம் குறை கூறுகின்றோம்.

காரணம் நம் நாட்டுக்கு பொதுமக்களின் வரி மற்றும் தண்டப்பணங்களை உயர்த்தி அதன் மூலமான பணம் இந்த பயணத்திற்கு செலவு செய்யப்படுகின்றது.

நாட்டில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் மாறி மாறி வெளிநாட்டு பயணங்களை உல்லாச பயணங்களாக மேற்கொள்கின்றனர். இதற்கு மக்களின் பணமே வீண்விரயோகம் செய்யப்படுகின்றது.

நாட்டில் ஆட்சியைக் கைப்பற்ற பணத்தை விரையம் செய்யும் தலைவர்கள் ஆட்சியை பிடித்த உடன் மக்களின் சொத்துக்களை சுரண்டி விற்பணை செய்து பணம் சம்பாதிக்கின்றனர்.

தேர்தல் காலம் ஒன்றில் இவர்களை வீட்டுக்கு அனுப்பும் மக்கள் அடுத்து ஒருவரை சிறந்த தீர்மானமின்றி ஆட்சியில் அமர்ந்துகின்றனர். இவர்களும் மக்களை வருத்தி நாட்டின் சொத்துக்களையும் விற்று சம்பாதிக்கின்றனர்.

இவ்வாறாகவே இலங்கையின் ஆட்சி மாற்றங்கள் நடைபெற்று வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். இவர்கள் செய்யும் ஊழலை கண்டுபிடிக்க அதிகாரிகளை ஆட்சியாளர்கள் நியமிப்பார்கள் அவர்களும் சில வேளைகளில் ஊழல்வாதிகளாக மாறிவிடுகின்றனர்.

இலங்கையின் பொருளாதார நிலமை அபிவிருத்தியடையவில்லை. உள்ளூர் உற்பத்திக்கு ஊக்குவிப்பில்லை. மசகு எண்ணெயின் விலையில் நாளுக்கு நாள் உயர்வு ஏற்படுகின்றது. மானியம் வழங்குவது தொடர்பில் மக்கள் நிலை குறித்து ஆராயப்படுவதில்லை.

பாராளுமன்றத்திலும் நாடகம் ஆடுகின்றனர். காலையில் சட்டமாகி பகல் வரை நாடகத்தில் பங்கு கொண்டு தொலைக்காட்சிகளுக்கு பார்வையாக இரண்டு மணிநேரம் செயற்பட்டு விட்டு பின் சிற்றுண்டிசாலையில் உணவு சாப்பிட்டு மாலையில் வாக்கெடுப்புகளில் பங்குபெறாமல் நழுவி செல்லும் நிலையும் உள்ளது.

இந் நிலையில் நாட்டை நாட்டின் வளங்களை மக்களின் எதிர்காலத்தை பாதுகாக்க கூடிய ஆட்சி மாற்றம் மக்களுக்கு தேவைப்பாடாக உள்ளது.

மாறி மாறி ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களை மாற்றி புதிய ஆட்சியாளர்களுக்கு இடங்கொடுக்க வேண்டும் என்பதில் மக்கள் நிலை மாற்றம் பெற்று வருகின்றது. நாட்டின் பாரத்தை ஏற்று கொள்ள மக்கள் விடுதலை முன்னணி தயாராகி வருகின்றது.

இதற்கு மக்கள் ஆணை பலமாக அமைய வேண்டும். அதற்கு முன் நாட்டின் இன்றைய நிலை மக்களுக்கு தெளிவுப்பட வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com