மஹிந்த – மைத்திரிக் கிடையேயான சந்திப்பிற்கு தானே மத்தியஸ்தம் வகித்ததாக கூறும் வாசுதேவ நாணயக்கார எதிர்வரும் சில வாரங்களில் அரசியலில் பெரும் மாற்றம் ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.
இன்று பொரலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் மேற்கண்டவாறு தெரிவித்த வாசுதேவ நாணயக்கார, இடைக்கால அரசு ஒன்றை நிறுவுவதற்கு ஜனாதிபதி யின் எதிர்ப்பு கிடையாது எனவும் கூறியுள்ளார்.
அதன் பிரகாரம் இடைக்கால அரசாங்கம் ஒன்றை நிறுவ உள்ளதாகவும் அதனூடாக பாராளுமன்ற தேர்தல் ஒன்றை நடாத்துவதற்கு தேவையான பாராளுமன்றின் மூன்றில் இரண்டு பெரும்பாண்மையை பெற்றுக்கொள்வதன்பொருட்டு சகல கட்சிகளுடனும் பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டால் சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்களை இணைத்துக் கொண்டு, தனி அரசாங்கம் அமைப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை எம்.பிக்கள் தீர்மானித்திருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் நேற்று தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்ஷவின் அணியுடன் கூட்டு சேர்வதற்கு சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்கள் தமது அதிருப்தியை எம்மிடம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சுதந்திரக்கட்சியுடன் மஹிந்த அணியினர் இணைக்கப்பட்டால் சுமார் 10 தொடக்கம் 15 உறுப்பினர்கள் ஐ.தே.கவுடன் இணைவதற்கு தயாராக உள்ளனர்.
அவர்களையும் இணைத்துக் கொண்டு ஐ.தே.க தனி அரசாங்கம் அமைக்குமென்றும் அவர் கூறினார்.
சிறிகொத்தவில் நேற்று காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே துஷார இந்துனில் எம்.பி இவ்வாறு தெரிவித்தார். சுதந்திரக் கட்சியினர் வேண்டுமானால் வரவு செலவுத் திட்டத்தை தோற்கடித்து தமது பலத்தை நிலைநாட்ட முடியும்.
எவ்வாறாயினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இத்தீர்மானத்துக்கு உடன்படமாட்டாரென்ற நம்பிக்கையை பின்வரிசை எம்.பிக்கள் கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment