அப்துல் கலாமின் பிறந்தநாள். அவரை கொச்சைப்படுத்தாதீர்! ஸ்ரான்லி ராஜன்
நாம் காந்தியினை கண்டதில்லை, காமராஜரை கண்டதில்லை, அப்படி விஞ்ஞானி ஜஹாங்கீர் பாபாவினையும் கண்டதில்லை, ஆனால் கலாமினை கண்டிருக்கின்றோம், அவர் காலத்தில் வாழ்ந்தோம் என்பதற்காக பெருமைபடுகின்றோம்
இன்று கலாமிற்கு பிறந்த நாள். ஆரியபட்டரின் மறுபிறப்பாக நம்மிடம் அவதரித்த கலாமின் பிறந்தநாள்.
அய்யா கலாம் அவர்களே, அக்னி நாயகனே , பிரித்வி கொடுத்த பிதாமகனே உங்களுக்கு அஞ்சலில் செலுத்துமுன் இங்கு சில சில்வண்டுகள் கலாம் தமிழகத்திற்கு என்ன செய்தார் என புலம்பிகொண்டிருக்கின்றன. உங்கள் சார்பாக சில கேள்விகளை கேட்டுவிட்டு வந்துவிடுகின்றோம்
கலாம் ஒன்றுமே செய்யவில்லை அழும் பதர்களே, அவர் யாருக்குத்தான் செய்தார்?
நீங்கள் செய்யும் கொடுமைகளை என்ன சொல்லி அழுவது என்றே தெரியவில்லை. இத்தேசத்தில் படித்து இந்த தேசத்திற்கே உழைத்து மறைந்த உத்தமர் அவர்
ராக்கெட் உலகில் இந்தியா கால்பதித்து தள்ளாடிய பொழுதுதான் அவர் பணிக்கு வந்தார். எஸ்எல்வி ராக்கெட்டுகளை அவர் தோல்விக்கு பின் வெற்றியாக்கி நாட்டிற்கு பெருமை சேர்த்தார். சதிஷ் தவானின் சீடர் அவர்
இந்திராவின் கனவான ஏவுகனை பணிகளில் அவர் தன்னை அர்பணிக்க பிரித்வி, அக்னி, நாக், திரிசூல் என சூப்பர்ஹிட் ஏவுகனைகளாக வந்து குவிய குவிய அவர் பிரபலமானார், உச்சமாக காளி எனும் லேசர் கதிரில் எதிரி விமானங்களை சிதறடிக்கும் நுட்பத்தில் இந்தியா ஓரளவு வெற்றிபெற்றபொழுது உலக விஞ்ஞானிகளின் வரிசையில் மகா பிரபலமானார்.
(அணுசக்திக்கும் அவருக்கும் தொடர்பில்லை, ஆனால் ஏவுகனை பாதுகாப்பும் அணுநுட்பமும் கலந்தவை. அதனால் அணுசக்தி கழக தலைவர் அவரும் தமிழர்தான், ஆர்.சிதம்பரத்துடன் இணைந்து பணியாற்றினார்.)
இந்த வெற்றியில் அவருக்கு காலம் ஓடிப்போனது, திருமணம் இல்லை, பெரும் சொத்து இல்லை, சுருக்கமாக சொன்னால் ஒன்றுமே இல்லை. வயது கிட்டதட்ட 70 ஆனது. யாருமில்லா தனிகட்டை என்ன செய்ய?
இந்த 70 வயதில்தான் மாணவர்களை வளமாக உருவாக்கும் திட்டம் என ஒன்றை உருவாக்கி நாடு முழுக்க ஓடினார், அழைத்த கல்லூரிகளுக்கு எல்லாம் சென்று வருங்கால தொழில்நுட்பம் முதல் பொருளாதார வாய்ப்புகள் வரை போதித்தார்.
ஆயிரம் சர்ச்சைகள் இருந்தாலும் பிஜேபி அரசின் பெரும் நல்லதிட்டங்களில் ஒன்று அப்துல்கலாமை ஜனாதிபதி ஆக்கியது, நிச்சயமாக பெரும் நன்றிகடன்.
அதனை விட உச்சமாக மோடி செய்தார், அதாவது இந்தியராணுவத்தின் அடுத்தகட்ட ஏவுகனைகளுக்கெல்லாம் பெயர் கலாம் சீரியல்.
பெரும் சர்ச்சைகள் இருந்தாலும் பிஜேபி இதில் ஜொலிக்கின்றது, கைதட்டி வாழ்த்தலாம். பிராமணசம், ஆரியாசிசம், வர்ணாமசிரமம் பேசுபவர்கள் கவனிக்கலாம், கலாம் அலுவலகத்தில் எத்தனையோ பிராமாணர்கள் உண்டு, ஆனால் திறமையும், தியாகமும் அங்கீகரிக்கபட்டது நிச்சயம் வாழ்த்தவேண்டியது.
இன்று கலாமை போட்டு தாக்குகின்றார்கள். அவர் ஆரிய அடிவருடி, திராவிட எதிரி, தமிழ்வழிகல்விக்கு ஒன்றும் செய்யவில்லை, ஈழதமிழர் படுகொலையை கண்டிக்கவில்லை என கடுமையாக தாக்குகின்றார்கள்.
தாக்குங்கள் கொஞ்சம் அவர் வாழ்வினை நோக்கிவிட்டு தாக்குங்கள்.
அவர் பிறந்தது பிரிட்டிஷ் இந்தியா, அவர் வெள்ளையனை எதிர்த்துபோராடவில்லை. அதன்பின் நடந்தது இந்திய பாகிஸ்தான் பிரிவினை. நீங்கள் சொல்லும் குஜராத், ஈழத்தை விட ஆயிரம் மடங்கு ரத்த சரித்திரம், அங்கும் கலாம் போராடவில்லை.
1948 காஷ்மீர் பிரச்சினையில் துப்பாக்கி தூக்கிகொண்டு இந்தியா ஓழிக என கோஷமிடவில்லை
அதனை கண்டித்தும் அவர் உண்ணாவிரதம் இருக்கவில்லை, அடுத்து நடந்த மொழிவாரி மாநிலபிரிவினையில் அவர் என்ன சொன்னார்? ஒன்றுமில்லை.
அடுத்து வந்த அண்ணா நடத்திய போரான மொழிப்போரில் அவர் பங்கு என்ன? அல்லது 1965ல் கதற கதற மலையக மக்களை யாழ்பாணத்தார் அனுப்பும்பொழுது அவர் என்ன சொன்னார்?
அவர் அப்பொழுதெல்லாம் வறுமையோடு போராடி படித்து முடித்து, வேலைக்கு வந்து சேர்ந்திருந்தார். இப்பொழுது இருப்பது போல விஞ்ஞான இணையமில்லை, ஆய்வு என்பது அதுவும் ராக்கெட் ஆய்வு என்பது தற்கொலைக்கு சமம்.
அவர் அவர்போக்கில் ஆய்வு செய்தார், அதாவது தனக்கு என்ன தெரியுமோ அதனை நாட்டிற்கு கொடுக்க எண்ணினார்.
சீன யுத்தம் இந்தியாவிற்கு எச்சரிக்கை கொடுத்தது, 1972 வங்கபோர் வலிமையான ராணுவமில்லாமல் இந்தியா சாதியமில்லை என காட்டிற்று.
ஏழை மீணவ குடும்பமாணவனாக படித்து வந்த கலாமிடம் இந்திய ஏவுகனைகள் திட்டம் கொடுக்கபட்டது, அவர் அதில்தான் கவனமாக இருந்தார்.
எமர்ஜென்சி கொடுமைகள்,இந்திரா படுகொலை, கொழும்பு கலவரம், சீக்கிய கலவரம்,ராஜிவ் படுகொலை இதை எல்லாம் பற்றி கண்ணீர் சிந்தினாரே அன்றி அவர் என்ன செய்யமுடியும்?
அலுவலகம் தவிர்த்த அவரது வாழ்க்கை 2000களில் ஆரம்பமாயிற்று, குஜராத் படுகொலைகளை அவர் கண்டிக்கவில்லை என சர்ச்சை வேறு. அவர் இஸ்லாமியன் தீவிரமாக குரான் படிக்கும் இஸ்லாமியன், ஆனால் பாபர் மசூதி பிரச்சினையில் ஒரு வார்த்தை பேசியிருப்பார்?
ஈழம் எரிந்ததாம், இவர் ஒன்றும் சொல்லவில்லையாம். அவர் என்ன சொல்லமுடியும்? 1983ல் தலையிட்ட இந்தியா 1989ல் அவமானத்தோடு வெளியேறிற்று. அதன்பின் புலிகளின் தலைவருக்கு 19 ஆண்டுகள் காலம் உச்சத்தில் இருந்தது. என்ன செய்தார்? இந்தியா துரோகி சரி, நார்வே குழு பேசியதல்லவா? அவர்கள் ஏன் திரும்பி பார்க்காமல் ஓடினார்கள்?.
19 ஆண்டுகால மாவீரர் உரைவாசித்தார் அந்த தலைவர், ஒரு அறிக்கையில் ஒரே ஒரு அறிக்கையில் ஸ்ரீபெரும்புதூர் பற்றி அதாவது செய்தோம் அல்லது செய்யவில்லை என ஒரு வார்த்தை பேசியிருப்பார்?, முள்ளிவாய்க்காலில் சொந்த மக்களை காக்கும் பொறுப்பு அவருக்கு இல்லையாம், அப்துல் கலாமிற்கும் மட்டும் உண்டாம்.
அவர் என்ன செய்திருக்கவேண்டும்? எனது ராக்கெட்டுகள் எல்லாம் இனி இந்திய ராணுவத்திற்கு அல்ல என போராடவேண்டுமா? அல்லது வன்னிகாட்டிற்கு சென்று ராக்கெட் தயாரித்திருக்கவேண்டுமா?
அவர் என்ன கலாமா? இல்லை ரூபாய்க்கு 2 என அணுகுண்டுகளை விற்ற பாகிஸ்தானின் கானா?
கலாம் தமிழ்மொழி கல்விக்கு உதவவில்லையாம். அட சிந்திக்க திராணியற்றவர்களே, தமிழ்மொழி கல்வியில்தான் அவர் கல்லூரிவரை கற்றார். விமானத்தை ராஜராஜசோழனின் படைதலைவன் கண்டுபிடித்து புத்தகம் எழுதியிருந்தால் அவர் ஏன் ஆங்கிலம் படிக்கபோகின்றார்.
ஜனாதிபதி உரையிலும் திருகுறளை காட்டிய தமிழனை உங்களுக்கு தெரியவில்லையா?. ஐரோப்பா பாராளுமன்ற கூட்டத்தில் "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என பேசிவிட்டு, மொத்த மேதை கூட்டமும் கேட்டதே, கலாம் அவர்களே இந்த வரிகளை சொன்ன கணியன் பூங்குன்றனார் யார்? வணங்க வேண்டிய மனிதன் என்று. அந்த கலாம் தெரியவில்லையா?
தமிழ்நாட்டின் குக்கிராம மூலையில் நின்றுகொண்டு என் பாட்டன், முப்பாடன் என முழங்கினால் தமிழனின் பெருமை தரணியில் உயருமா?
உலகம் மிக பெரியது, அந்த உலகத்தில் பாரதமும் பெரிது. எல்லோரும் எல்லாவற்றையும் கவனித்துகொண்டேதான் இருப்பார்கள், அதனால்தான் 2009ல் உலகம் அப்படி அமைதியாக இருந்தது.
விஞ்ஞானிகள் வித்தியாசமானவர்கள், அமெரிக்க உள்நாட்டுபோரை பற்றி சிந்தித்திருந்தால் எடிசன் கிடைத்திருக்கமாட்டார், நாசிசத்தை கண்டித்து அறிக்கை மட்டும் விட்டுகொண்டிருந்தால் ஐன்ஸ்டீன் கிடைத்திருக்கமாட்டார். யூதர்களை ஒழிப்பேன் என ஹிட்லரோடு கத்திதூக்கி அலைந்திருந்தால் வார்ன் பிரவுன் கிடைத்திருக்கமாட்டார்.
வார்ண் பிரவுண் ஏவுகனை உலகின் தந்தை, பிதாமகன்,கடவுள் எல்லாம். அவரை சந்தித்துவிட்டு அப்துல்கலாம் சொன்னார், "இவரை போல மேதைகள் இந்தியாவில் உருவாக்கபடவேண்டும் என்பதுதான் என் விருப்பம்", சற்று யோசித்து பாருங்கள், ஒரு இளம்வயது சராசரி இந்திய விமானபொறியாளார், பிரவுண் போன்ற மேதைகளை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் என்ன கேட்பார்கள்?
"அய்யா...நாசாவில் நேர்முகதேர்வுகள் எப்படி இருக்கும், பணி கிடைக்க நான் என்ன செய்யவேண்டும்? ஹிஹிஹிஹிஹீஹ்", இங்குதான் கலாம் தனித்து நின்றார்.
அவருக்கு அரசியல் தெரியாது, தெரிந்திருந்தால் 2000களில் தமிழகத்தில் கட்சிதொடங்கி இருப்பார் (அப்படி வந்துவிட கூடாது என தமிழகத்தில் நடந்த குள்ளநரி திட்டம் ஏராளம்), அவருக்கு மதம்,இனம்,மொழி தெரியாது. பாவம் படித்துவிட்டு அரசு வேலை பார்த்த இந்தியன் அவர்.
தனக்கு தெரிந்த ராக்கெட் நுட்பத்தை மேலும் வலுபடுத்தி இந்தியாவின் பாதுகாப்பை வலுபடுத்தினார்.
நாளை ஏதும் ஆபத்தென்றால் அது பாயும், காப்பாற்றும். அதற்கு திராவிடன், ஆரியன்,சாதி,மொழி இனம் எல்லாம் தெரியாது. இந்தியனை காப்பாற்றும்.
இந்திய ஒவ்வொரு ஏவுகனையின் வெற்றிக்கு பின்னும் அவர் இருப்பார். எல்லையில் சாகின்றார்கள் அல்லவா வீரர்கள். அவர்கள் சீக்கியனாக, மலையாளியாக, வங்காளியாக சாவதில்லை, அல்லது அந்த இனங்களுக்காக சாகவில்லை. நாட்டிற்காக செத்தார்கள்.
நீங்கள் குதிக்கும் ஈழத்திலும் அமைதிபடை காலத்தில் 1350 சீக்கியர்கள் செத்தார்களே, அது என்ன தலைவிதியா?
அப்துல்கலாம் திராவிடத்திற்கோ, தமிழருக்கோ ஒன்றும் கிழிக்கவில்லை என நீங்கள் நினைத்தால் கொஞ்சம் சீக்கிய சகோதரர்களை நினையுங்கள். பிரிவினையிலும் இன்னும் ஏராளமான அவமானங்களிலும் சிக்கி தவித்த இனம் அது.
இன்றும் ராணுவத்தில் பாதி அவர்கள்தான், பொற்கோயில் ஆப்ரேசனுக்காகவோ அல்லது தற்போதைய பென்சன் பிரச்சினைக்கோ பொங்கி எழுந்தால் என்ன ஆகும்? ராணுவம் இருக்குமா? நாடு என்ன ஆகும்?
ஈழத்தில் ஏன் சாகிறோம் என தெரியாமல் செத்து அம்மண பிணமாக (அப்படித்தான் புலிகள் ஒப்படைத்தார்கள்) வந்த சீக்கியனின் மகனும் ராணுவத்திற்கு சென்றானே. அந்த ராணுவ வீரர்களில் ஒருவனாக, விஞ்ஞான ராணுவவீரனாக, அறிவுநிறை தமிழ்வீரனாக பாருங்கள். வாமண அவதாரம் விஸ்வரூபம் எடுத்ததுபோல அவர் பெரிதாய் தெரிவார்.
இல்லாவிட்டால் விட்டுவிடுங்கள், அவருக்கு சந்ததிதான் இல்லை, புகழாவது எஞ்சியிருக்கட்டும்.
அவர் சொந்த மண்ணிற்கு ஒன்றும் செய்யவில்லை என ஊரிலும் சலசலப்பு, அவர் இஸ்லாமிய சமூகத்தவருக்கு என்ன செய்தார் என ஒருவித சலசலப்பு, அவர் திராவிடனுக்கு என்ன கிழித்தார் என இங்கும் குற்றசாட்டு, தமிழனுக்கு என்ன செய்துவிட்டார் இந்த ஆரிய் அடிமை என இங்கும் வசைமாறி.
கொஞ்சம் நிதானித்து சிந்தியுங்கள்? அவர் அவருக்கே என்ன செய்துவிட்டார்? காரணம் அவர் நேசித்தது இந்தபாரத திருநாட்டையும் இம்மண்ணின் மாணவர்களையுமே. கொச்சைபடுத்துகின்றீர்கள் அல்லவா? உங்கள் பிள்ளைகளுக்கோ அல்லது பேரபிளைகளுக்கோ யாரை முன்மாதிரியாக சொல்வீர்கள்?
திராவிடம் பேசி , சகலத்தையும் நாசமாக்கிவிட்டு பாபநாசம் படத்தின் கிளைமேக்ஸ் போல "நான் சொயநலம் பிடிச்சவன், என் குடும்பத்துக்கு எது தேவையோ அதத்தான் செஞ்சேன்" என சொல்லாமல் சொல்லும் தலைவர்களையா?
அல்லது ஈழம்பேசியே அங்கும் சுடுகாடாக்கிவிட்டு அடுத்து தமிழகத்தை சுடுகாடாக மாற்ற எண்ணும் அவர்களையா?
படிப்பு ஒரு மனிதனை உச்சம் கொண்டு செல்லும் என நீங்கள் உதாரணமாக காட்ட அம்பேத்தாருக்கு பின் யாரை மாணவர்களுக்கு காட்ட முடியும்?
சிந்தித்து பாருங்கள் அமைதியாவீர்கள், இதற்கு மேலும் நீங்கள் சொல்லிகொண்டே இருந்தால் அப்துல் கலாமுக்காக மட்டுமல்ல உங்களுக்காகவும் அழுது தொலைக்கவேண்டியதுதான்.
அய்யா கலாமே, நீர் கோடிகணக்கான இந்தியர்களை பாதித்தீர், அதில் லட்சகணக்கான மாணவர்கள் உண்டு.
ஆயிரகணக்கில் உம்மை தீவிரமாக பின்பற்றும் இளைஞர்கள் உண்டு.
அதில் சில நூறுபேர் ராக்கெட் விஞ்ஞானி ஆவார்கள், ஏவுகனை விடுவார்கள் உங்களை போல.
அதில் நீர் மறுபடியும் எங்களோடு வந்து இந்நாட்டிற்கு சேவையாற்றலாம். நிச்சயம் வருவீர்.
அந்த நம்பிக்கைய்யோடு காத்திருக்கின்றோம் கலாம். நீங்கள் நிச்சயம் ஆயிரம் கலாம்களாக திரும்பி வருவீர்கள்.
இத்தேசம் அதில் அமைதியாகவும், பாதுகாப்போடும் வாழும்.
அன்று எம்மை அடித்துவிட்ட சீனா, இன்று அமைதியாக ஒதுங்கிபோகும் பொழுதெல்லாம் உம்மை கண்ணீரோடு நினைக்கின்றோம்
இன்னொரு முறை வந்து பிறந்துவிடும் அய்ய்யா, ஏங்குகின்றோம்
அந்த நம்பிக்கையோடு உங்கள் பிறந்த நாளில் அக்னி அஞ்சலி செலுத்துகின்றோம்
வந்தே மாதரம்.. ஜெய் ஹிந்த்
0 comments :
Post a Comment