Saturday, October 27, 2018

பிரதமரை நீக்கியது சட்டப்படியானதா? வை எல் எஸ் ஹமீட்

19வது திருத்தத்திற்குமுன் பிரதமரை ஜனாதிபதி விரும்பிய நேரம் நீக்குவதற்கு அதிகாரம் இருந்தது. [47(a)]

19வது திருத்தத்தில் அச்சரத்து நீக்கப்பட்டுவிட்டது. தற்போது பிரதமர் பதவியிழக்கின்ற சந்தர்ப்பங்களில் பதவி நீக்கம் செய்யப்படுதல் என்கின்ற ஒன்று இல்லாமலாக்கப்பட்டு விட்டது. எனவே, பாராளுமன்றத்தின் எண்ணம் பிரதமரை நீக்கக்கூடாதென்பதாகும்; என்று சிலர் வாதாடுகின்றனர்.

பிரதமரை நியமித்தல்


சரத்து 42(4) இன் பிரகாரம் ஜனாதிபதியினுடைய அபிப்பிராயத்தில் யாருக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டிருக்கக்கூடிய சாத்தியம் இருக்கின்றதோ அவரைப் பிரதமராக நியமிக்க வேண்டும்.

பொதுவாக எந்தவொரு நியமனமாயினும் நியமிக்கின்றவருக்கு அவரை நீக்குகின்ற அதிகாரம் இருக்கின்றது சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு.

இங்கு எழுகின்ற கேள்வி, ஏற்கனவே, பிரதமரை நீக்குவதற்கு ஜனாதிபதிக்கு இருந்த அதிகாரத்தை பாராளுமன்றம் 19வது திருத்தத்தினூடாக நீக்கி தன் எண்ணத்தை வெளிப்படுத்தியதன் பின்னும் நியமிக்கின்ற அதிகாரிக்கு நீக்குகின்ற அதிகாரம் இருக்கின்றது; என்கின்ற தத்துவம் செல்லுபடியாகுமா? என்பதாகும்.

பிரதமர் பதவி இழக்கும் சந்தர்ப்பங்கள்

தானாக ராஜினாமா செய்தல்.
பாராளுமன்ற உறுப்புரிமையை இழத்தல்,
இதனைத்தவிர அமைச்சரவை இயங்கும் காலமெல்லாம் அவர் பதவி தொடரும். சரத்து 46(2).

அமைச்சரவை கலைதல்

1. பிரதமர் பதவியிழத்தல் ( மேற்சொன்ன இரண்டு சந்தர்ப்பங்கள் )
2. அரச கொள்கைத் தீர்மானம், அல்லது வரவு செலவுத்திட்டத்தில் தோற்றல்.
3. அரசுக்கெதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் தோற்றல்.

இதன்மூலம் ஜனாதிபதிக்கு அமைச்சரவையைக் கலைக்கமுடியாது; என்பது தெளிவாகின்றது. ஏனெனில் இங்கு கலைதல் மாத்திரம்தான் இருக்கின்றது, கலைத்தல் இல்லை.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை

அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்து நிறைவேற்றினால் அமைச்சரவை கலையும் பிரதமரும் பதவியிழப்பார்:
; என மேலே பார்த்தோம்.

இப்பொழுது பிரதமருக்கு எதிராக மாத்திரம் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்து நிறைவேற்றப்படுகின்றது; என வைத்துக்கொள்வோம். இப்பொழுது பிரதமர் சுயமாக பதவியிழக்கமாட்டார். அவர் ராஜினாமா செய்வது அவருடைய தனிப்பட்ட முடிவு. ராஜினாமா செய்யாவிட்டால் என்னசெய்வது.

பெரும்பான்மை இல்லை; என்று நிரூபிக்கப்பட்ட ஒருவர் எவ்வாறு பிரதமராக இருக்கமுடியும்? இந்த சந்தர்ப்பத்தில் “ நியமிக்கின்ற அதிகாரிக்கு நீக்குகின்ற அதிகாரம் இருக்கின்றது” என்ற தத்துவத்தின்கீழ் ஜனாதிபதி செயற்படக்கூடாது; என்பதும் பாராளுமன்றத்தின் எண்ணமாக இருந்திருக்குமா?

வியாக்கியானத்தில் பாராளுமன்றத்தின் எண்ணம்

ஒரு சட்டத்தின் ஏதாவது ஒரு பிரிவில் கருத்து மயக்கம் வரும்போது பாராளுமன்றம் அச்சட்டத்தைக் கொண்டுவருவதில் அல்லது திருத்துவதில் என்ன எண்ணத்தைக் கொண்டிருந்தது; என ஆராய்ந்து அந்த எண்ணத்திற்கு இசைவாக அச்சட்டத்தை வியாக்கியானப்படுத்துகின்ற நடைமுறை இருந்து வருகின்றது.

இது பிரித்தானிய நடைமுறையில் இருந்து வந்ததாகும். பிரித்தானிய பாராளுமன்றம் இறைமையுடையது. அதேநேரம் பிரித்தானியாவில் எழுதப்பட்ட அரசியல் அமைப்புச் சட்டம் இல்லை. எனவே, சட்டத்தில் மயக்கம் இருக்கும்போது பாராளுமன்றத்தின் எண்ணத்தைப் பார்ப்பது வழமையாகும். ஆனால் அரசியலமைப்பினால் ஆளப்படுகின்ற மேற்கத்திய நாடுகளில் இன்று நடைமுறை மாறிவருகின்றது.

சாதாரண சட்டத்தை வியாக்கியானப்படுத்தும்போது அரசியலமைப்புச் சட்டத்திற்கு இசைவாகவே வியாக்கியானப்படுத்தப்படுகின்றது. அதற்கு முரணில்லாதபோது பாராளுமன்றத்தின் எண்ணம் பார்க்கப்படுகின்றது.

அரசியலமைப்புச் சட்டத்தைப்பொறுத்தவரை பாராளுமன்றத்தின் எண்ணம் அடியோடு பார்க்கப்படுவதில்லை; என்று கூறமுடியாது. ஆனாலும் சமகால சூழ்நிலை, தேவை போன்றவைக்கே முன்னுரிமை வழங்கப்படுகின்றது.

அரசியலமைப்பு என்பது சாதாரண சட்டத்தைப்போல் நினைத்த நேரமெல்லாம் திருத்தமுடியாது. அதேநேரம் சமகால சூழ்நிலைகளுக்கு, தேவைகளுக்கு அரசியல்யாப்பு பொருந்தக்கூடியதாக இருக்கவேண்டும். எனவே, என்றோ ஒருநாள் அரசியல்யாப்பை எழுதியவர்களின் எண்ணங்களுக்குள் அரசியலமைப்பை வியாக்கியானப்படுத்துவதில் எங்களை நாங்கள் ஏன் கட்டிவைக்க வேண்டும்? என்ற கேள்வி அமெரிக்காபோன்ற நாடுகளில் எழுப்பப்படுகின்றது.

இந்தவகையில் அந்நாடுகளில் புதிய வியாக்கியான முறைமைகள் தோற்றம் பெற்றிருக்கின்றன. இது பிரதானமாக இருவகைப் படுத்தப்படுகின்றது. ஒன்று, Interpretivism or originalism இரண்டு, non interpretivism or non originalism.

இதில் முதலாவது வகை பாராளுமன்றத்தின் எண்ணம் போன்ற சில மரபுரீதியான வியாக்கியானமுறையைக் குறிக்கின்றது. இரண்டாவது வகை, சமகால சூழ்நிலைக்கேற்ப வியாக்கியானப்படுத்தப்பட வேண்டுமென்கின்றது. இவை இரண்டிற்குள்ளும் பல பிரிவுகள் இருக்கின்றன.

குறிப்பாக, இரண்டாவது வகை, சட்டத்தின் ஒவ்வொரு சொல்லுக்கும் பெறுமானம் ( value) இருக்கின்றது. சமகால மாற்றத்திற்கேற்ப அச்சொற்களின் பெறுமானம் கருத்திற்கொள்ளப்பட்டு வியாக்கியானப்படுத்தப்பட வேண்டும்; என்பதை அடிப்படையாகக் கொண்டது.

அமெரிக்காவில் கடந்த இரண்டு மூன்று வருடங்களுக்குமுன் ‘ஸ்கலியா’ என்ற ஒரேயொரு நீதியரசரே முதலாவது வகைக்கு ஆதரவாக இருந்தார். அவர் தற்போது மரணித்துவிட்டார். ஏனையவர்களெல்லாம் இரண்டாவது வகைக்கே ஆதரவாக இருந்தார்கள்.

இந்தியாவில் அண்மைக்காலம்வரை திருமணமுடித்தவர்களின் கள்ளத்தொடர்பு தண்டனைக்குரிய குற்றம் என்ற தண்டனைக்கோவை பிரிவை சரிகண்ட உயர்நீதிமன்றம் அண்மையில் அதே அரசியலமைப்பினடிப்படையில் பிழைகண்டிருக்கின்றது.

அரசியலமைப்பு மாறவில்லை. அவ்வாறாயின் எது மாறியது. சொற்களின் பெறுமானம் மாறியது. சமத்துவம் என்றசொல் சமகால மாற்றத்திற்கேற்ப பொருள்கோடல் செய்யப்பட்டது.

திருமணமுடித்தவர்களின் கள்ளத்தொடர்பு கூடாது; என்று பாராளுமன்றம் நினைத்ததனால்தான் தண்டனைக்கோவையில் அதைக்குற்றமாக்கியது. ஆனால் நீதிமன்றம் பாராளுமன்றத்தின் எண்ணத்தைப் பார்க்கவில்லலை. தற்போதைய சூழ்நிலைக்கேற்ப அரசியலமைப்புச் சட்டத்தின் பொருள் எவ்வாறு மாற்றமடைந்திருக்கின்றது; என்றே பார்த்தது.

எனவே, இலங்கையில் பாராளுமன்றத்தின் எண்ணம்தான் இன்னும் கூடுதலாக பார்க்கப்படுகின்றது; என்றபோதிலும் யதார்த்தத்திற்கு இசைவாக அரசியலமைப்புச் சட்டம் வியாக்கியானப்படுத்தப்பட வேண்டிய தேவையையும் கருத்திற்கொள்ளப்பட வேண்டும்.

பிரதமரின் பெரும்பான்மை இழப்பு

இது ஒரு தேசிய அரசாங்கம். ஐ தே கட்சி 106, SLMC 1 = 107 மிகுதி UPFA.

ஆட்சியமைக்க தேவை 113. இப்பொழுது UPFA அரசில் இருந்து வெளியேறிவிட்டது. வெளிப்படையாக ஐ தே கட்சியிடம் இருப்பதோ 107. பெரும்பான்மை இருக்கின்றதா? பாராளுமன்றத்தின் பெரும்பான்மை இல்லாதவரை எவ்வாறு பிரதமராக வைத்திருப்பது? இங்கு ஜனாதிபதியின் அபிப்பிராயத்தில் ( in his opinion) பெரும்பான்மை இருக்கின்றதா? என்பதுதான் கேள்வி.

பிரதமருக்கு பெரும்பான்மை இல்லாவிட்டாலும் என்னால் ஒன்றும் செய்யமுடியாது; விரும்பினால் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவாருங்கள்; என்று சொல்வதா? அவ்வாறு கொண்டுவராவிட்டால் பெரும்பான்மையற்ற பிரதமரை பதவியில் வைத்திருப்பதா?

நம்பிக்கையில்லாப்பிரேரணை கொண்டுவருவதும் கொண்டுவராமல் விடுவதும் அரசியல் முடிவு. தற்போது பிரதமர் பெரும்பான்மையை இழந்திருக்கின்றார்.

எனவே, பெரும்பான்மை இருக்கின்றது; என்று கருதி அவரைப் பிரதமராக நியமித்தார். பெரும்பான்மை இல்லை; என்று தெளிவாகத் தெரிந்ததும் நீக்கியிருக்கின்றார். பிரதமரை நீக்கமுடியாது; என்று அரசியலமைப்பு சொல்லவில்லை.

சுருங்கக்கூறின், 19 இற்குப்பின் நினைத்தமாதிரி பிரதமரை ஜனாதிபதி நீக்கமுடியாது. ஆனால் திட்டமாக பெரும்பான்மை இல்லையென்று தெரிந்தால் நீக்கலாம். ஆனாலும் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கே இருக்கின்றது.

இப்பொழுது மஹிந்த பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கின்றார். பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு எதுவும் தேவையில்லை. விரும்பினால் எதிரணியினர் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரலாம்.

குறிப்பு: இது சட்டரீதியான நிலைப்பாடு. எனது அரசியல் ரீதியான நிலைப்பாட்டிற்கும் இந்தக்கருத்திற்கும் எந்தத்தொடர்புமில்லை.

குறிப்பு-2: UPFA தேசிய அரசாங்கத்திலிருந்து விலகியவுடன் தேசிய அரசாங்கம் கலைந்துவிட்டது. 30 இற்குமேல் அமைச்சர்கள் இருக்கமுடியாது. எனவே அமைச்சரவை கலைந்துவிட்டது; என்ற ஒரு கருத்து முன்வைக்கப்படுகின்றது.

அமைச்சர்கள் 30ஐத் தாண்டமுடியாது; என்பது சரி. அது வேறுவிடயம். ஆனால் அமைச்சரவை கலைந்துவிட்டது; என்பது பிழையாகும். மேற்சொன்ன சந்தர்ப்பங்களைத் தவிர அமைச்சரவை கலையாது.

No comments:

Post a Comment