ஐக்கிய தேசியக் கட்சியின் தேவைகளை பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவும், பூஜித் ஜயசுந்தரவின் தேவைகளை ஐக்கிய தேசியக் கட்சியும் மாறி மாறி நிறைவேற்றிவருவதாக கூட்டு எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான வாசுதேவ நாணயக்கார குற்றஞ்சாட்டியுள்ளார்.
மைத்திரி - ரணில் தலைமையிலான கூட்டு அரசாங்கத்தின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவராவிடின், நாடு பொருளாதார பின்னடைவைச் சந்திக்கும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
ஸ்ரீலங்காவின் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் அண்மைக்கால செயற்பாடுகள் மற்றும் நடத்தைகள் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளதுடன், ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாக அவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.
2015 ஆம் ஆண்டு ஆட்சிபீடமேறிய நல்லாட்சி அரசின் கீழ் நியமிக்கப்பட்ட பொலிஸ் மா அதிபரின் இவ்வாறான செயற்பாடுகளை முன்நிறுத்தி, அவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது விசுவாசிகள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர்.
இவ்வாறான நிலையில் கூட்டு எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவருமான வாசுதேவ நாணாயக்கார கொழும்பு மரதானையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட வாசுதேவ நாணயக்கார..
“பொலிஸ் மா அதிபர் புஜித் ஜயசுந்தர கெட்ட சகுணத்திற்குள்ளாகியுள்ளார். அவரது செயற்பாடுகள் நடவடிக்கைகள் மாத்திரமல்லாது அவர் மீது தற்போது பண மோசடியொன்று தொடர்பிலும் குற்றச்சாட்டு எழும்பியுள்ளது.
கண்டி டிரின்ட்டி கல்லூரியில் கடமையாற்றிய அதிபர் மூலமாக 12 மில்லியன் ரூபா பணம் பொலிஸ் மா அதிபர் புஜித் ஜயசுந்தரவின் வங்கி கணக்கொன்றில் வைப்பிலிடப்பட்டமை தொடர்பில் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வைப்பிலிடப்பட்ட பணம் எவ்வாறு வந்தது? எதற்காக வைப்பிலிடப்பட்டது என பொலிஸ் மா அதிபரிடம் விசாரணைகள் நடாத்தப்பட்டுள்ளது.
எனினும் சட்டத்தரணி தொலவத்த இந்த வழக்கு பிரதிகளை பார்த்து விட்டு, குறித்த வழக்கில் மிக முக்கியமாகக் கருதப்படும் சில விடயங்கள் உள்ள பக்கங்கள் காணாமல் போயுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு மிக முக்கியமாக கருதப்படும் வழக்கு விசாரணைப் பத்திரிகையிலிருந்து பக்கங்கள் காணாமல் போகின்ற வேளையில் அதன் பின்னால் பொலிஸ் மா அதிபரே நிற்கின்றாரா என்ற சாதாரண சந்தேகம் எழும்புகின்றது.
இவ்வாறான நிலையில் பொலிஸ் மா அதிபரை உடனடியாக பதிவியிலிருந்து விலகுமாறு அரச தரப்பினர் அழுத்தம் பிறப்பிக்க வேண்டும். அவர் விலக மறுப்பு தெரிவித்தாலும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அதேசமயம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக த சில்வாவிற்கும் கொலை சதித்திட்டமொன்று தொடர்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், நெருங்கிய நண்பரான அவரை பொலிஸ் மா அதிபர் பாதுகாத்து வருகின்றாரோ என்ற சந்தேகமும் ஏற்படுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தேவைகளை பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவும், பொலிஸ் மா அதிபர் புஜித் ஜயசுந்தரவின் தேவைகளை ஐக்கிய தேசியக் கட்சியும் நிறைவேற்றி வருகின்றனர்.
அதன் காரணத்தாலேயே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் பொலிஸ் மா அதிபரை பாதுகாத்து வருகின்றார். பொலிஸ் மா அதிபரும் கடந்த காலத்தினைப் போலல்லாது அரசியல் பிரசாரங்களை முன்வைத்து அரசாங்கத்தினை வர்ணித்துள்ளார்.” எனக் குறிப்பிட்டார்.
தேசிய அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியில் நீடித்தால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து, மக்களால் தாங்கிக் கொள்ள முடியாத நிலை உருவாகும் எனவும் வாசுதேவ நாணயக்கார எச்சரித்துள்ளார்.
நடைமுறையிலுள்ள மைத்திரி-ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அவரது சுதந்திரக் கட்சியினுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் கீழேயே பயணிக்கின்றது.
அதனை தொடர்ந்து செயற்படுத்துவது தொடர்பிலேயே அவர்களது நோக்கம் தங்கியுள்ளது அவ்வாறான நிலையில் இந்த அரசாங்கத்தின் ஆட்சியினை முடிவுக்கு கொண்டு வருவது பிரதான பொறுப்பாகும்.
தொடர்ந்து இந்த அரசாங்கம் செயற்பட்டால் நாட்டின் பொருளாதாரம் பூச்சியத்தை தொடும். அதனை நாட்டு மக்களினால் தாங்கிக் கொள்ள முடியாத நிலையுருவாகும் எனவும் வாசுதேவ நாணயக்கார எச்சரித்துள்ளார்.
No comments:
Post a Comment