Friday, October 19, 2018

அரசமைப்பு வெற்றிபெறாவிட்டால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறப்பாராம் சுமந்திரன்!

புதிய அரசமைப்புப் பணிகளின் முன்னகர்வதைத் தடுப்பதற்கு திட்டமிட்ட செயற்பாடுகள் சில முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா எழுப்பிய சர்ச்சையும் அரசமைப்பு முயற்சியைக் குழப்புவதற்கான திட்டமிட்ட சதி வேலைதான். தடைகளுக்கு மத்தியில் ஆமை வேகத்தில் பணிகள் முன்னெடுக்கப்பட்டாலும், நிச்சயம் புதிய அரசமைப்பு வெற்றிபெரும். அவ்வாறு வெற்றிபெறத் தவறின் நான் எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் தூக்கி எறியவும் தயாராக உள்ளேன்.”

– இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன்.

யாழ்ப்பாணத்திலுள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“அரசமைப்பு விவகாரத்தில் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளோம். ஒரு வரைவு நிபுணர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது. அந்த வரைவு 3 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு அரசமைப்புப் பேரவைக்கு எதிர்வரும் 25 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

கடந்த 11ஆம் திகதி வழிநடத்தல் குழுவில் அந்த வரைவை ஆராய்ந்தபோது அதில் சர்ச்சை ஒன்று ஏற்பட்டது. குறிப்பாக மொழிபெயர்ப்புகள் இன்னமும் கிடைக்கவில்லை என்றும், அந்த மொழிபெயர்ப்பை பெற்றுச் சரிபார்க்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்கள்.

எதிர்வரும் மாதம் 7ஆம் திகதி மீண்டும் அரசமைப்புப் பேரவை கூடும். அதன்போது 3 மொழிகளிலும் அந்த வரைவு கையளிக்கப்படும். இதுதவிர 25 ஆம் திகதி வழிநடத்தல் குழு மீண்டும் கூடிஇறுதியாக்கப்பட்ட மொழிபெயர்ப்புக்களை ஆராய்ந்து அனுமதி வழங்கும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வழிநடத்தல் குழுவில் நடைபெறும் விடயங்கள் பகிரங்கப்படுத்தப்படமாட்டா என்று எமக்குள் உடன்பாடு ஒன்று இருந்தாலும் கூட, ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பத்திரிகைகளுக்கு அங்கு நடைபெற்ற விடயங்கள் தொடர்பில் ஓர் அறிக்கை விடுத்துள்ளார். இதனால் அவர் குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் சில தெளிவுபடுத்தல்களைச் செய்ய வேண்டியுள்ளது.

வழிநடத்தல் சந்திப்புக்களை நடத்த ஆரம்பித்த நாள்களில் இருந்தே எப்படியாக நாட்டை வர்ணிப்பது என்பது தொடர்பில் பேசப்பட்டபோது பிரதமர் ஒரு கருத்தை முன்வைத்திருந்தார். ‘யுனிட்டரி ஸ்டேட்’ என்று சொல்லப்படும் ஆங்கிலச் சொற்பதத்திற்கு ‘ஏக்கிய ராச்சிய’ என்ற தவறான மொழிபெயர்ப்பு 72 ஆம் ஆண்டில் இருந்து பயன்படுத்தப்பட்டு வருவதாகப் பிரதமர் சொல்லியிருந்தார். ‘ஏக்கிய ராச்சிய’ என்பது ஒரு நாடு என்பதைத்தான் குறிக்கின்றதே தவிர அது ஆட்சி முறையைக் குறிக்கவில்லை என்பதையும் பிரதமர் விளக்கியிருந்தார்.

பிரதமர் கூறிய விளக்கத்தை நாங்கள் ஏற்றுக் கொண்டதால்தான் ‘ஏக்கிய ராச்சிய’ என்ற சொற்பதம் பயன்படுத்தப்பட முடியும் என்ற இணக்கப்பாட்டிற்கு வந்திருந்தோம். ஆனாலும், ஏக்கிய ராட்சிய என்பது நாட்டை மட்டும் குறிப்பது என்றும், அது ஆட்சி முறையை குறிப்பதாக அமையாது என்றும் புதிதாக ஒரு வரைவிலக்கணம் எழுதப்படவேண்டும் என்று கேட்டிருந்தோம்.

ஏக்கிய ராச்சிய என்பதற்கான சரியான தமிழ்ச் சொல் என்ன என்று நாங்கள் ஆராய்ந்தபோது ஒற்றையாட்சி என்று சொல்லும்போது, அதில் ஆட்சி முறை குறிப்பிடப்படுவதால் அது பொருத்தமற்ற சொல் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

நாட்டில் சுபாவத்தை மட்டும் குறிக்கும் சொல்லாக இது இருக்க வேண்டும். ஆகையால் ‘யுனிட்டரி ஸ்டேட்’ என்ற சொற்பதமோ ஒற்றையாட்சி என்ற சொற்பதமோ உபயோகிக்க முடியாது. ஏக்கிய ராச்சிய என்பது நாட்டின் சுபாவத்தை குறிப்பது போன்று அதற்கேற்ற தமிழ்ச் சொல்லையும் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் தீர்மானித்திருந்தோம்.

இதன்போது நான் அடுத்த கூட்டத்தில் ஒரு முன்மொழிவை செய்திருந்தேன். ஏக்கிய ராச்சியவுக்கு பதிலாக ஒன்றுபட்ட நாடு அல்லது ஒருமித்த நாடு என்ற சொற்பதத்தைப் பயன்படுத்தலாம் என்று முன்மொழிவு செய்தேன். இதில் ஒருமித்த நாடு என்பதை பயன்படுத்தலாம் என்று அதிகமானவர்களால் பிரேரிக்கப்பட்டது.

இடைக்கால வரைவின்போது ஏக்கிய ராச்சிய சமன் ஒருமித்த நாடு என்ற சொற்றொடர் 3 மொழிகளிலும் அப்படியே உபயோகிக்கப் வேண்டும் என்றும், அதற்கான வரைவிலக்கணம் அந்த உறுப்புரையிலேயே கொடுக்கப்படவேண்டும் என்றும், அதற்கான விளக்கமாக அந்தச் சொற்பதம் ஆட்சி முறை சம்பந்தப்பட்டதாக இல்லாது, நாட்டின் சுபாவத்தைக் குறிப்பதாக அதாவது பிரிக்கப்படாத – பிரிக்க முடியாத – ஒரு நாடு என்ற வரைவிலக்கணம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இடைக்கால அறிக்கை இறுதி செய்யும்போதுதான் டக்ளஸ் தேவானந்தா ‘ஒரு மித்த நாடு’ என்பதற்குப் பதிலாக ‘ஒரு நாடு’ என்ற சொல் பொருத்தமானது என்றார். இவ்விடயம் தொடர்பில் வழிநடத்தல் குழுவில் உள்ளவர்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அவ்வாக்கெடுப்பில் டக்ளஸ் மட்டும் ‘ஒரு நாடு’ என்றார். ஏனையவர்கள் ‘ஒருமித்த நாடு’ என்பதையே ஆதரித்தனர். இதனடிப்படையில் தான் இடைக்கால அறிக்கையில் ‘ஒருமித்த நாடு’ என்று சொற்பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் இந்த விடயங்களைப் பகிரங்கமாகத் தெளிவுபடுத்தியுள்ளார்.

மீண்டும் டக்ளஸ் தேவானந்தா அந்தச் சர்சையை எழுப்பியபோது பிரதமர் மீண்டும் அவருக்குத் தெளிவுபடுத்தியிருந்தார். அத்துடன் அவருடைய கருத்தை அவர் சார்ந்த கட்சியின் நிலைப்பாடாகப் பதிவு செய்வதென்றும் தீர்மானிக்கப்பட்டது.

‘ஒரு நாடு’ என்ற சொல் உபயோகிப்பதாக இருந்தால் ‘ஏக்கிய ராச்சிய’ என்று சொல்லாமல் நேரடியாக ‘எக்க ரட்ட’ என்ற சொற்பதத்தை உபயோகிக்க வேண்டும் என்பது என்னுடைய நிலைப்பாடாக உள்ளது.

அரசமைப்பில் நாட்டின் சுபாவத்தை வர்ணிக்கும் சொற்பதங்கள் பேச்சுவழங்கில் உள்ள சொற்பதங்களாக இல்லாமல் சற்று உயர்ந்த சொற்பதங்களாக இருக்க வேண்டும். இந்த முடிவுகளை நாங்கள் ஏற்கனவே எடுத்துள்ளோம்.

ஆனால், தற்போது சிறு குளறுபடி ஏற்பட்டதால் முன்னேற்ற நடவடிக்கையில் சற்றுப் பின்னகர்வு ஏற்பட்டுள்ளது. அரசமைப்பை பிற்போடுவதற்காக வெவ்வேறு சர்ச்சைகளை வெவ்வேறு தருணங்களில் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனாலும் அந்தச் சர்ச்சைகளை எவ்வளவு தூரம் ஏற்படுத்துகின்றார்கள் என்று நாங்களும் பொறுத்திருந்து பார்ப்போம். டக்ளஸ் தேவானந்தாவின் செயற்பாடு அரசமைப்பு நடவடிக்கையைப் பின்னகர்த்துவதற்காகச் செய்யும் திட்டமிட்ட செயற்பாடாகவே எமக்குத் தோன்றுகின்றது” – என்றார்.

No comments:

Post a Comment