புலிகளின் ஆட்சி வேண்டுமென்ற விஜயகலாவுக்கு நாட்டை விட்டு வெளியேற முடியாது. நீதிமன்று கட்டளை.
யாழ்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது புலிகளின் ஆட்சி வேண்டப்படுகின்றது என கருத்து தெரிவித்த விஜயகலா மகேஸ்வரன் இன்று ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற செயலக விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டு , கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வடக்கின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டுமாயின் தமிழீழ விடுதலைப் புலிகளின் கை மேலோங்க வேண்டும் எனவும், அவ்வாறு மேலோங்கினாலேயே சிறுவர்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் எனவும் விஜயகலா கருத்து தெரிவித்தமையால் சிக்கலுக்குள் தள்ளப்பட்டார்.
ராஜங்க அமைச்சு பதவி பறிக்கப்பட்ட விஜயகலா மீது ஐக்கிய தேசியக் கட்சி உள்ளக விசாரணை ஒன்றை மேற்கொண்டு, சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரைத்தது. அதன் பிரகாரம் சட்ட மா அதிபரின் ஆலோசனையும் பெறப்பட்டது.
சட்ட மா அதிபரின் ஆலோசனைகளின் பெயரில் வாக்கு மூலம் ஒன்றை பெற்றுக்கொள்ள கொழும்பு ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற செயலக விசாரணை பிரிவிற்கு அழைக்கப்பட்ட விஜயகலா மகேஷ்வரன் கைது செய்யப்பட்டு, கொழும்பு பிரதான நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரை 5 இலட்சம் ரூபா சரீர பிணையில் செல்ல அனுமதித்துள்ளதோடு, குறித்த வழக்கு தொடர்பான அடுத்த கட்ட விசாரணை டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜயகலாவை ஆஜர்படுத்திய பிரதி பொலிஸ் மா அதிபர் கமால் சில்வா, பிணை வழங்கலுக்கு ஆட்சேபனை தெரிவித்தபோதும், பிணை மறுப்பதற்கான போதிய காரணங்கள் இல்லை என பிணை வழங்கிய நீதவான், விஜயகலா நாட்டை விட்டு வெளியேற முடியாது என்ற நிபந்தனையும் விதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment