Friday, October 26, 2018

மணல் மாபியாவால் வரண்டு போகும் எம் பசுமை தேசம். றிசாத் ஏ காதர்

எங்கு இயற்கை வளங்கள் திட்டமிடப்பட்டு துவம்சம் செய்யப்படுகின்றதோ அங்கு அனர்த்தங்கள் அல்லது அழிவுகள் நடந்தேறுகின்றது. இவைகள் வரலாற்று நெடுகிலும் உணரப்பட்டுவந்தவைகள். வளங்கள் கடவுளின் அருட்கொடை அவற்றுக்கு நிகர் இந்த உலகத்தில் எதுவுவேமயில்லை.

ஒரு காலத்தில் இயற்கை வளங்களுக்கு இருந்த மதிப்பும், பாதுகாப்பும் இன்று இல்லாமல் போயிருப்புது இந்த மனித சமூகத்துக்கு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரும் சாபக்கேடு என்று சொன்னால் மிகையாகாது.
அனர்த்தங்கள் எங்கெல்லாம் ஏற்படுகின்றதோ அங்கெல்லாம் இயற்கை வளங்கள் துவம்சம் செய்யப்பட்டதன் விளைவேயன்றி வேறில்லை.

இத்துணை வருடங்களும் இந்தப் பூமிப்பந்துக்கு பாதுகாப்பான கதிர்வீச்சுக்களை வழங்கி, நச்சுக்கதிர்களிலிருந்து மனிதன் தொடக்கம் விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் என அனைத்தையும் பாதுகாத்த ஓசோன் படலம் துளையிடப்பட்டது மனிதனின் சுயலப்போக்கும், சூழலை பேணிப்பாதுகாப்பதுக்கு தவறியதன் விளைவேயாகும்.

தற்போது இலங்கையில் போதைப் பொருள் வியாபாரம் எப்படி தடுக்கமுடியாத இலக்கை நோக்கி நகர்கின்றதோ அவ்வாறான ஒரு சூழலியல் மோசடி மிகச் சர்வசாதாரணமாக நடந்தேறுகின்றது. இந்த நிலை தொடர்வதுக்கு அனுமதித்தால் இந்த நாடு பாரிய சூழலியல் சிக்கல் நிலைக்குத் தள்ளப்படும்.

இலங்கையின் நில அமைப்பு மிக வித்தியாசமானது. எல்லாப்பிரதேசங்களும் ஒரேயமைப்பில் இல்லை. மிக அழகான இலங்கைத் தீவில் எல்லா வளங்களும் ஒருசேர கிடைக்கின்றது.

அப்படியான வளங்கள் நிறைந்த ஒரு பிரதேசம் கிழக்கு மாகாணத்தின் 'மீன்பாடும் தேனகம்' மட்டக்களப்பு மாவட்டம். கடல், வயல்வெளிகள், காடுகள் மற்றும் குளங்கள், ஏரிகள் என எல்லா வளங்களையும் ஒரு சேர கொண்டுள்ள மாவட்டம்.

இந்த வளங்கள் இன்று மெல்லச் சூறையாடும் நிலை மேலோங்கியுள்ளது. அதிகாரமிக்க கரங்கள் இதற்குப்பின்னால் இருப்பதாக மக்கள் அங்கலாய்க்கின்றனர்.

இங்குள்ள எல்லா வளங்களும் செழிப்புற மிக முக்கியமானது அதன் நிலம்சார் அமைப்பும், மண்ணும். ஆனால் நில அமைப்பு மாற்றப்பட்டு இங்குள்ள மணல் சூரையாடப்படுகின்றது. இவ்விடயம் பற்றி பேசாமல் இருப்பது இந்த சூழலினை தத்தமது கரங்களினால் கொல்வதுக்குச் சமனே.

ஒரு நாட்டினுடைய மிகச் சிறந்த வளம் ஆறு. அவ்வாறான ஆறு அழிக்கப்படுவது பற்றிய கவலை சிறிதளவேனும் எம்மில் எத்தனை பேருக்கு ஏற்படுகின்றது. பொதுவாக நம்முன்னே உள்ள மண் வளங்கள் பற்றி நாம் யாரும் சிந்திப்பதில்லை. கட்டுமாணப்பணிக்கான மணல் கிடைக்காதவிடத்து அல்லது அதற்கான விலை எகுறுகின்ற போதே அதனை பற்றி நம்மில் அதிகம் பேர் சிந்திக்கின்றோம். அதுவரைக்கும் அதனுடைய எந்த நன்மைகளையும் நாம் சிந்திப்பதேயில்லை.

மணல் பற்றிய அறிமுகம்

ஆற்றுக்கு மிக முக்கியம் அதிலுள்ள மண். மணல் என்பது எம்மால் உருவாக்க முடியாத பொக்கிஷம். இயற்கையாக உருவாகின்ற பொருள். ஆனாலும் சில மாதங்களிலோ அல்லது வருடங்களிளோ உருவாகுகின்ற பொருள் அல்ல. ஒரு கன அடி மணல் உருவாக 100வருடங்கள் எடுப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றது.

பருவகால வேறுபாடு காரணமாக குளிர்காலங்களில் இறுக்கமாகவும், வெயில் காலத்தில் விரிவடைந்து இலகுவாகியும் நொறுக்குகின்றன பாறைகள். இவ்வாறு நொறுங்கும் பாறைகள் மழைகாலம் வரும்போது, மழைநீரின் வேகத்தால் உருட்டப்பட்டு, உடைந்து சிறு சிறு துகள்களாகி மணலாக மாற்றம் அடைகின்றன.

மணலும் - கட்டுமானமும்

ஆரம்ப காலங்களில் மனிதனுடைய கட்டுமாணப்பணிகள் கம்புகளும், குச்சிகளுமே பயன்படுத்தப்பட்டது. எப்போது கற்களையும், மண்ணையும் பயன்படுத்தி கட்டுமாணப்பணி ஆரம்பிக்கப்பட்டதோ அன்றே கட்டுமானப்பணிகளுக்கு மணல் பயன்படத் தொடங்கியது. அப்போதெல்லாம் மாட்டுவண்டி மூலமாகவே மணல் எடுக்கப்பட்டது. தொன்னூறுகளுக்கு பிற்பட்ட காலத்திலே சிறிய ரக இயந்திரங்கள் மூலம் மண் கொள்ளை ஆரம்பமாகின்றது.
-----
உலகமயமாதலின் காரணமாக இலங்கையில் பெரும் பெரும் நிறுவனங்கள் கால்பதிக்கத் தொடங்கின. அதன் பின்னர் கட்டுமானப்பணிகள் ஆரம்பமாயிற்று. மேலும் சுனாமி அனர்த்தம், அதனையும் விட முப்பது வருட கால யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர்; பல்தேசிய கம்பனிகள் வடக்கு, கிழக்கு மற்றும் அதற்கு வெளியேயான பிராந்திய அபிவிருத்திக்கு தங்களை இணைத்துக்கொண்டன. இதனால் இந்நடவடிக்கைகளுக்கு தேவையான கட்டுமாணப் பணிகளுக்கு மணல் அதிகளவில் தேவைப்பட்டது. அதற்காக நவீனங்கள் புகுத்தப்பட்டது. அதுவரையில் மாட்டுவண்டி, சிறிய ரக வாகனங்களில் மணலை அகழ்ந்து எடுத்துவந்த நிலையில், மணல் அகழும் தொழிலில் களம் இறங்கியவரகள் மண் அள்ள இயந்திரங்களை பயன்படுத்தினர். கட்டுமான நிறுவனங்களோடு மறைமுக கூட்டொன்றை இப்பிராந்தியங்களிலுள்ள அரசியல்வாதிகள் மேற்கொண்டிருற்தனர். விஸ்வரூபம் எடுத்த கட்டுமானப் பணிகளுக்கு தீனிபோட ஆற்றங்கரைகள் மணல் விற்கும் குவாரிகளாக மாற்றம் பெற்றது. கோடிகள் கொட்டும் தொழிலாக மண் விற்பனை மாறிவிட்டது.

குத்தகை அடிப்படையில் ஏலம் எடுத்து ஆறுகளில் மணல் அகழும் பணி தீவிரமடைந்தது. இன்று இதனை கட்டுப்படுத்த முடியாத ஒரு நிலை காணப்படுவதனை அவதானிக்க முடிகின்றது.

மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரைப் பிரதேசத்து பெருநிலங்களான காலபோட்டமடு, குருந்தையடிச்சேனை மற்றும் மணல்பிட்டி, சாமந்தியாறு, குழுவினமடு, விடுதிக்கல், மாவடிமுன்மாரி, பனிச்சையடி முன்மாரி நெல்லிக்காடு, வாழைக்காலை, காஞ்சிரங்குடா போன்ற வயற் கிராமங்களிலுள்ள ஆறுகள் முதல் வாய்க்கால் வரை எவ்வித அனுமதியுமின்றி சட்டவிரோதமாக மணல்; அகழ்வு மேற்கொள்ளப்படுவதாக அப்பிரதேச மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் இந்தப் பிரதேசம் எதிர்காலத்தில் பாரிய அழிவுகளை சந்திக்கும் நிலை ஏற்படுவதுக்கான அபாயங்கள் இருப்பதாக இங்குள்ள மூத்தவர்கள் கருத்துரைக்கின்றனர்.

அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவது வளங்களை சமப்படுத்துவதுக்கேயாகும். ஒரே இடத்தில் தொடர்ந்து மணல் அகழ்வில் ஈடுபடாமல் சூழலுக்கும், குறித்த காலத்தில் ஏற்படுகின்ற நீரோட்டத்தையும் மையப்படுத்தி நடைமுறைப்படுத்துவதே அதன் நோக்கம். ஆனால் சட்டவிரோதமாக ஒரே இடத்தில் தொடர்ந்து இவ்வாறான செயற்றபாடுகள் இடம்பெற அனுமதிப்பது அந்த பிரதேசத்தின் சூழலை மிக விரைவாக துவம்சம் செய்வதாகும். இதனை பொலிசாரிடம் எத்தனை முறை சொன்னாலும் இது தொடர்பில் கண்டுகொள்வதாக அவர்கள் இல்லை என்கிற வெளிப்படை உண்மையை மக்கள் கூறுவதுக்கு தயங்கவில்லை.

நாளொன்றுக்கு பத்து (10) முதல் பதினைந்து (15) லொறிகள் கொக்கட்டிச்சோலை பிரதான வீதியூடாக எழுவான்கரைக்கு மணல் கடத்துவதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த மணல் அகழ்வுக்கு சம்பந்தப்பட்ட அரச அலுவலக அதிகாரிகள் தொடக்கம் பொலிஸ் நிலையம் வரை மௌனிகளாகவே இருந்துவிடுகின்றனர்.

மணல் அகழ்வினை மேற்கொள்ளும் பெரும் முதலாளிகளில பெரும்பாலானோர் வயற்காணிகளை சமப்படுத்துவதுக்கே அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்வதாகவும், அதன் பிற்பாடு ஆற்றங்கரைகளை அண்டி மணல் அகழ்வில் ஈடுபடுவதாகவும் ஒரு குற்றச்சாட்டும் இருக்கின்றது. இந்த குற்றச்சாட்டு உண்மையானதுவே. இதுவே இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமல்ல இயற்கை வளங்களை அண்டியுள்ள பிரதேசங்களில் நடந்தேறுகின்றது.

வளங்களை பாதுகாக்க நிறுவப்பட்ட அலுவலகங்கள் கூட இதில் தவறிழைத்துவிடுகின்றது. அல்லது பணங்களால் கட்டப்படுகின்றது என்கிற உண்மையை எளிதில் மறுத்துவிட முடியாது. இதற்குச் சிறந்த உதாரணம் அண்மையில் 'அனுமதிப்பத்திரமின்றி மணல் அகழ்வில் ஈடுபட்ட சம்பவத்தில் நேரடியாக ஈடுபட்ட ஒருவரை கைது செய்த போது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விடுவித்த சம்பவமும், அதற்கு எதிராக உரிய பொலிஸ் சார்ஜன்ட் துப்பாக்கி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தமையும்' எனவே நாம் வாழுகின்ற சூழல் வியாபார மாபியாக்களிடமிருந்து பாதுக்காக்கப்படல் வேண்டும். இல்லையேல் நமது சந்ததிகளுக்கு பசுமையற்ற, பாலைவன தேசத்தையா கையளித்துவிட்டுச் செல்லவிருக்கின்றோம் என்கிற கேள்விக்கு விடைகாணுதல் அவசியம்.

இலங்கையின் மிக முக்கியமான கங்கைகளில் மஹாவலியும் ஒன்று. அதன் முடிவிடம் திருகோணமலையின் கிண்ணியா, மூதூர் பிரதேசங்களாகும். இங்குள்ள சீனன்வெளி, மணலாறு, சாவாறு, நிலாப்பொல கண்டல்காடு, பாடுகாடு போன்ற பகுதிகளில் அதிகமான மண் அகழ்வு இடம்பெறுவதாகவும், அதனை தடுக்காது விட்டால் எதிர்காலத்தில் இப்பிரதேசம் நீரில் மூழ்கும் அபாயம் நிலவுவதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது. மேலும் கடந்த வருடம் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் 15க்கும் மேற்பட்ட ஆறுகள் பெருக்கெடுத்ததனையும், அதனால் ஏற்பட்ட உயிரிழப்புக்களையும் நாம் எளிதில் மறந்துவிட முடியாது.

திருகோணமலை மாவட்டத்தினை பொறுத்தமட்டில் தற்போதுவரை 395 மண் அகழ்வு அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதில் 80வீதமான அனுமதிப்பத்திரங்கள் வெளி மாகாணங்களை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், மண் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர் அங்குள்ள மக்கள். வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திரங்கள் குறைக்கப்படல் வேண்டும் என்கிற கோரிக்கைக்கும் செவிசாய்க்கப்படல் வேண்டும்.

திருகோணமலை மக்களுக்கு தேவையான மணலை பெற்றுக்கொள்ள 395 அனுமதிப்பத்திரங்கள் தேவையா என்கிற கேள்விக்கு பதிலளிப்பது யார். நல்லாட்சியில் காடுகளை, குளங்களை மற்றும் இயற்கை வளங்களை பாதுகாப்பதாக தொண்டை கிழியக்கத்துகின்றனர். அந்த வரிசையிலே வில்பத்து விவகாரமும் கையாளப்பட்டதாக அரசியல்வாதிகள், அதிகாரிகளின் அறிக்கைகளில் குறிப்பிடுகின்றனர். நீதிக்கு புறமபான விவகாரங்களில் காட்டுகின்ற அக்கறை மணல் அகழ்வு விடயத்தில் காட்டமுடியமல் போவது ஏனோ.

வேறு சில மாவட்டங்களிலுள்ள அரசியல் பிரமுகர்கள் மண் அகழ்வுக்கு அம்பாரை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையை தளமாக பயன்படுத்துவதாகவும் அவ்வப்ப பிரதேசங்களிலுள்ள மக்கள் குறிப்பிடுகின்றனர்.
கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் உள்ள இயற்கையான எழில் மிக்க ஆறுகள், கங்ககைளில் ஆற்று மணல் அகழ்வு வேலைகளில் அரசியல்வாதிகளினதும், அதிகாரிகளினதும் தலையீடுகள் இருப்பதாக அநேகமான குற்றச்சாட்டுகள் கிளம்புகின்றது. இதுவிடயத்தில் ஆளும் கட்சி அரசியல்வாதிகள் சிபாரிசின் பிரகாரமே அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படுகின்றது. முதலில் இந்த நடவடிக்கை நிறுத்தப்படல் வேண்டும். இதனூடாக ஒரு விடயத்தை எம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது. ஆளும் கட்சி அரசியல்வாதிகளின் அனுமதி இல்லாமல் அனுமதிப்பத்திரங்களை வழங்கமுடியாது என்பதுடன், முதலில் அந்த நடவடிக்கைக்கு ஆளும் கட்சியை சேர்ந்தவர்களே பொறுப்புக்கூறவேண்டியவர்கள் என்பதும் தெளிவான வியடம்.

ஆக மொத்தத்தில் திருகோணமலை மாவட்டம் மாத்திரம் இந்த பிரச்சினைக்குட்டபட்டதல்ல. இங்குள்ள ஒவ்வொரு மாவாட்டமும் இதற்குள் அகப்பட்டுள்ளது. முறையான ஒரு செயற்றிட்டம் ஒன்றினூடாக மண் கொள்ளை கட்டுப்படுத்தப்படல் வேண்டும். அதனூடாகவே வளங்களை, பொக்கிஷங்களை பாதுகாக்க முடியும்.

ஒருபுறம் ஆற்றங்கரைகளில் மண் அகழ்வு நடைபெறுகின்றது. மறுபுறம் அம்பாரை மாவட்டத்தின் கரையோர பிராந்தியத்தின் கடற்கரையில் மண் அகழ்வு கூடுதலாக இடம்பெறுவதும் சுட்டிக்காட்டவேண்டியது. பலமிக்க அரசியல் பின்புலங்களை கொண்டு இந்த மண் அகழ்வு இடம்பெறுவதாகவும், சட்டம் இது விடயத்தில் அசமந்தமாக நடந்துகொள்வதாகவும் மக்கள் கவலைபட்டுக்கொள்கின்றனர். இதில் வேடிக்கையான விடயம் என்னவென்றால் கனரக, சிறியரக வாகனங்களில் கடற்கரை மணல் அகழ்வோரை கண்டுகொள்ளாத பாதுகாப்புத் தரப்புதனது குழந்தைகள் வீட்டு முற்றத்தில் கடற்கரை மணலில் விளையாட ஆசைப்படும் ஒருவர் உர பையில் மணல் அகழ்ந்தால் நுணுக்குக் கண்ணாடி கொண்டு கடமையாற்றும் பாதுகாப்புத் துறையினரும் இருக்கின்றனர்.

இயற்கையான வளங்களை அழித்து நமது சந்ததிகளுக்கு எதனை விட்டுவைக்கப்போகின்றோம். வளங்களை விற்று பெற்றுக்கொள்ளும் பணங்களினூடாக எதனை பெற்றுக்கொள்ளமுடியும்.

இயற்கை வளங்களை அநியாயமாக கொள்ளையடிப்பதால் நீர் மட்டம் குறைகின்றது, சுற்றுச் சூழல் பாதிக்கப்படுகின்றது. ஆற்றுப்படுக்கைகளில் அளவுக்கு அதிகமாக மண்ணை அகழ்வது 'தாயின் மடியை அறுத்து பால்குடிப்பதுக்கு சமனானது' என்று பல ஆண்டுகளாக சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் குறிப்பிட்டுவருகின்றனர். ஆனால் மணல் கொள்ளை மட்டும் தடுக்கப்படவேயில்லை. நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும், சுற்றுச் சூழல் பாதிக்கும் என்பதெல்லாம் ஆட்சியாளர்களுக்கு தெரியாத விடயமல்ல. ஆனால் இதனை ஆட்சியாளர்கள் கண்டுகொள்வதாகவில்லை. எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மணல் கொள்ளை மட்டும் தடுக்கப்படவேயில்லை. மாறாக குறிப்பிட்ட ஒரு சிலர் (ஆட்சியாளர்களுக்கு நெருக்கமானவர்கள்) இந்த மண் அகழ்வில் கோடீஸ்வரர்களாக கோலோச்சுவதே வழமையாகிவிட்டது.

நன்றி தினகரன் 2018.10.26

No comments:

Post a Comment