Saturday, October 6, 2018

சௌதி அரேபியாவில் முதல்முறையாக வங்கியொன்றின் தலைவராக பெண் தேர்வு.

சௌதி அரேபியாவின் வரலாற்றில் முதல்முறையாக வங்கியொன்றின் தலைவராக பெண்ணொருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போதுள்ள சௌதி பிரிட்டிஷ் பேங்க் மற்றும் அலவ்வால் பேங்க் ஆகியவற்றை ஒருங்கிணைத்து உருவாக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள புதிய வங்கியின் தலைவராக சௌதி அரேபியாவின் பிரபல பெண் தொழிலதிபர் லுப்னா அல் ஒலயன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பழமைவாதத்தை காலங்காலமாக கடைபிடித்துவரும் சௌதி அரேபியா, கடந்த ஓராண்டாக பெண்களுக்கான உரிமைகளை சமூகத்தின் பல நிலைகளில் வழங்கி வருகிறது.

குறிப்பாக, கடந்த ஜூன் மாதம் சௌதி அரேபியாவில் முதல் முறையாக பெண்கள் வாகனம் இயக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

தங்களது குடும்பத்தினர் நடத்தி வரும் தொழில் குழுமத்திற்கு தலைமை வகித்து வரும் ஒலயன், சௌதி அரேபியாவின் நிதித்துறையில் அந்நாட்டின் மற்ற பெண்களுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறார்.

அமெரிக்காவில் தனது மேற்படிப்பை பயின்ற ஒலயன், போர்ப்ஸ் இதழின் மத்திய கிழக்கு நாடுகளில் 2018ஆம் ஆண்டு ஆதிக்கம் நிறைந்த பெண்களுக்கான பட்டியலில் முதலாவது இடத்தை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சௌதி அரேபியாவை நவீனமயமாக்கும் அதன் பட்டத்து இளவரசர் முகமத் பின் சல்மானின் 'சௌதி விஷன் 2030' என்ற கருத்தாக்கத்தின்படி, அந்நாட்டில் பெண்களின் வாழ்க்கைப்போக்கில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை மேற்கொள்ளும் வகையிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

சௌதி பிரிட்டிஷ் பேங்க் மற்றும் அலவ்வால் பேங்க்கை ஒன்றிணைத்து அறிவிக்கப்பட்டுள்ள இந்த வங்கி, 17.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடன் அந்நாட்டின் மூன்றாவது மிகப் பெரிய வங்கியாக உருவெடுத்துள்ளது.

நன்றி பிபிசி

No comments:

Post a Comment