Monday, October 15, 2018

நாமல் ராஜபக்ச குழுவினரை வெற்றிலை கொடுத்து வரவேற்ற புலம்பெயர் தமிழர்.

கடந்தவாரம் பொது எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அலகப்பெரும தலைமையல் பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச , உதய கம்பன்பில, சனத் நிசாந்த உட்பட சில மாகாண சபை உறுப்பினர்களை உள்ளடக்கிய குழுவொன்று ஐரோப்பிய பயணம் மேற்கொண்டிருந்தது. இக்குழுவினர் லண்டனில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களை சந்தித்து நாட்டின் நிலைமைகள் தொடர்பில் விரிவாக எடுத்தியம்பினர்.

குறித்த நிகழ்வுக்கு சென்றிருந்த மேற்படி குழுவினரை புலம்பெயர் தமிழர்கள் வெற்றிலை கொடுத்து வரவேற்றுள்ளனர். பிரதமர் ரணில் விக்கரமசிங்கவின் பிரித்தானிய வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்ட இத்தருணத்தில் நாமல் குழுவினரை புலம்பெயர் தமிழர் வெற்றிலை கொடுத்து வரவேற்ற நிகழ்வானது மக்கள் மனங்களில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளதற்கான குறியீடாக பார்க்கப்படுகின்றது.

இந்நிகழ்வில் பேசிய பா.உ நாமல் ராஜபக்ச:

கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் எம் நாட்டின் மக்கள் 62 லட்சம் பேர் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களை நாட்டின் தலைவராக தேர்ந்தெடுத்தனர். அவர் அதிமேதகு ரணில் விக்கரமசிங்க அவர்களுடன் இணைத்து அரசொன்றை நிறுவினார். அவ்வரசுக்கு அவர்கள் இட்ட பெயர் நல்லாட்சி. அவர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களின் அரசிற்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தினர். மஹிந்த ராஜபக்சவின் அமைச்சரவையிலிருந்த அனைத்து அமைச்சர்களுக்கும் கள்வர்கள் என்று பெயர் சூட்டினர். ஆனால் அந்த அமைச்சர்கள் மூன்று மாதங்களின் பின்னர் மைத்திரிபால அவர்களின் அரசில் இணைந்தவுடன் அவர்கள் சுத்தமானவர்கள் ஆனார்கள். அவ்வாறு அரசுடன் இணையாதவர்கள் இன்றும் கள்வர்களாகவே இருக்கின்றனர்.

இந்த அரசாங்கம், சுயாதீன நீதிமன்று தொடர்பில் பேசியது, சுயாதீனமான பொலிஸ் திணைக்களம் ஒன்று தொடர்பில் பேசியது. ஆனால் அரசாங்கம் அதிகாரத்தை கைப்பற்றி 100 நாட்கள் செல்வதற்குள் மத்திய வங்கியில் வரலாற்றில் இடம்பெறாத மாபெரும் கொள்ளை ஒன்று நடைபெற்றது. இவ்வாறன ஒரு கொள்ளை இடம்பெற்றுள்ளது என இந்நாட்டின் ஜனாதிபதியே பகிரங்க மேடைகளில் பேசுகின்ற அளவுக்கு நிலைமை சென்றுள்ளது.

பிரத மந்திரி வெளிநாடுகளுக்கு சென்று நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ளது என குறிப்பிடுகின்றார் என்றால் நிலைமை தொடர்பில் நான் உங்களுக்கு சொல்வதற்கு வேறு எதுவும் இல்லை. இன்று நாட்டு மக்கள் மீது தாங்கமுடியாத வரிச்சுமை சுமத்தப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் வாழுகின்ற உங்களுக்கும் எங்களுக்கும் ஒரு நாட்டின் வரி விதிகள் தொடர்பில் நன்கு தெரியும். ஆனால் இன்று அரசிடம் ஒழுக்கமான வரிக்கொள்கை இல்லை. மக்கள் மீது சுமத்தப்படுகின்ற வரியானது, நியாமனதாகவும் அவர்கள் செலுத்துகின்ற வரிப்பணம் நாட்டின் மூதலீடுமாகுமாக இருந்தால் மக்கள் விருப்புடன் அதைச் செலுத்துவார்கள்.

மஹிந்த ராஜபக்ச அரசு சீனாவிடம் பெரும் கடனை பெற்றுள்ளதாக கூறினார்கள். அக்கடனை செலுத்த முடியாது என்றார்கள். கடனை செலுத்துவதற்காக மத்தளை விமான நிலையத்தை விற்பனை செய்யவுள்ளதாக கூறினார்கள். ஆனால் அண்மையில் வியட்னாமில் நடைபெற்ற உலக பொளாதார பேரவையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பேசுகையில் „இலங்கை சீனாவிற்கு கடனாளிகள் இல்லை" என்று குறிப்பிட்டிருந்தார். அவ்வாறாயின் அவர்கள் இத்தனை காலமும் கூறியது யாது?

அண்மையில் ஐ.நா விற்கு சென்றிருந்த ஜனாதிபதி „உள்நாட்டில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு நாங்கள் ஒரு உள்நாட்டு பொறிமுறையை உருவாக்குவோம், வெளியார் தலையிடமுடியாது" என்று தெரிவித்திருந்தார். மறுபுறத்தில் கடந்த வருடம் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு அனுசரனை வழங்கியுள்ளனர். இது பரஸ்பர முரண்பாடான நிலைமையாகும். இவர்களிடம் தெளிவான வெளிநாட்டுக்கொள்கையொன்று இல்லை என்பதே இதனூடாக புலனாகின்றது.

இந்தநாட்டிலே ஜனாதிபதியை கொலைசெய்கின்ற சூழ்ச்சி ஒன்று பிரதமரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அது தொடர்பான ஆவணங்களும் வெளியாகியுள்ளது. ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. குறித்த டிஐஜி நாட்டை விட்டு ஓடலாம் என்று சிஐடி யினர் அவரது கடவுச்சீட்டை தடுக்குமாறு நீதிமன்றை கோருகின்றனர். ஆனால் ஓய்வு பெற்றிருந்த டிஐஜி அனுர சேனநாயக அவர்களை கைது செய்து சிறையிலடைத்தே விசாரணைகளை மேற்கொண்டனர். அவ்வாறே பாராளுமன்ற உறுப்பினர்களையும் சிறையிலடைத்து விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸார் குறித்த டிஐஜி யை கைது செய்யவில்லை என்றால் இந்நாட்டில் யாவருக்கும் சட்டம் பொதுவானது என்பது பொய்யாகியுள்ளது.

நான் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் ஒரு வேண்டுதலை விடுக்கின்றேன். எனது லம்போகினி , தங்கத்தாலான குதிரை மற்றும் எனது 18 பில்லின் டொலர்களுக்குரிய வங்கிக்கணக்கு என்பவற்றை தேடித்தாருங்கள். அவ்வாறு எனது 18 பில்லியன் டொலர்களை இலங்கைக்கு கொண்டுவருவீர்களானால் இலங்கை ரூபாவின் வீழ்ச்சியை நிவர்த்தி செய்து கொள்ளலாம். அந்த 18 பில்லியன் டொலர்களும் நாட்டிலிருந்தால் 1 டொலரின் பெறுமதி 100 ரூபாவாக மாறும்.

பொய்களுக்கு மேல் பொய்களை கூறி, ஒரு பொய்யை மறைப்பதற்கு நூறு பொய்களை கூறி வருகின்றனர். பிணை முறி வழக்கின் நிலைமைகளை மாற்றுவதற்கு தனக்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதாக நீதிபதி திணைக்களத்தின் பிரதானி ஒருவர் நீதிமன்றுக்கு சத்தியக் கடதாசி ஒன்றை வழங்கியுள்ளதாக நிலைமைகள் உள்ளது.

இன்று நாட்டிலே ஜனநாயகம் மரணித்து விட்டது. பாராளுன்றில் உறுப்பினர்களுக்கான சிறப்புரிமை மீறப்படுகின்றது. ஆனால் அன்று இலங்கையிலே கருத்துச் சுந்திரம் ஊடக சுதந்திரம் என ஓலமிட்ட மேற்குலக நாடுகள் மௌனிகளாக நிற்கின்றனர்.

இந்நிலையிலே நாட்டுக்கு வெளியே வாழுகின்ற இலங்கையர்களாகிய நீங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து நாட்டின் மேன்மைக்காக உழைக்க முன்வரவேண்டும். உங்களிடையே வெவ்வேறு அரசியல் கருத்துக்கள் மற்றும் நம்பிக்கைகள் இருக்கலாம். ஆனால் அவற்றை துறந்து நாட்டை இன்றுள்ள இக்கட்டான நிலையிலிருந்து மீட்க முன்வரவேண்டும். அதற்கான காரணம் மைத்திரி-ரணில் அரசாங்கம் ராஜபக்சர்கள் மீண்டும் அரசை கைப்பற்றக்கூடாது என்ற ஒரே நோக்கத்திற்காக செயற்படுகின்றார்களே தவிர அவர்களிடம் நாட்டின் முன்னேற்றம் தொடர்பில் கரிசனை கிடையாது. ஆனால் எமக்கிருக்கின்ற பிரச்சினை இந்நாட்டின் முன்னேற்றமாகும். எங்களுக்கு தெரியும் நீங்கள் அனைவரும் இங்கிலாந்தில் வாழ்ந்தாலும் உங்களுடைய ஆண்மா தாய்நாட்டிலேயே இருக்கின்றது. எனவே நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டின் நலனை காப்போம் என்று கூறி எனது உரையை முடிக்கின்றேன் என்றார்.





No comments:

Post a Comment