ஊடகவியலாளர் ஒருவரை அச்சுறுத்திய வழக்கில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் சகா என்று சொல்லப்படுகின்ற அப்துல் அஸீஸ் முஹமட் அஷாம் என்பவர் வெளிநாடு செல்வதற்கு கல்முனை நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை தடை விதித்தது.
கல்முனையை சேர்ந்த ஊடகவியலாளரான முஹமட் இப்ராஹிம் என்பவரை கடந்த 26 ஆம் திகதி நள்ளிரவில் தொடர்ந்தேச்சையாக தொலைபேசியில் தகாத வார்த்தைகளால் இவர் பேசினார் என்று கல்முனை பொலிஸ் நிலைய பொலிஸார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து உள்ளனர்.
இவ்வழக்கு அழைக்கப்பட்டபோது முறைப்பாட்டாளரான ஊடகவியலாளரை ஆதரித்து சட்டத்தரணிகளான ஏ. ஜி. பிறேம் நவாத், அனோஜ் பிருதர்ஸ் ஆகியோர் ஆஜராகி நீதிமன்றம் சந்தேக நபருக்கு அழைப்பாணை விடுப்பதுடன் அவர் வெளிநாட்டுக்கு தப்பி செல்ல முடியாதவாறு தடை போட வேண்டும் என்றும் கோரினர்.
இதை அடுத்து இச்சந்தேக நபரை வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டாம் என்று குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்துக்கு கல்முனை நீதிவான் ஐ. என். ரிஸ்பான் உத்தரவிட்டதுடன் சந்தேக நேபர் எதிர்வரும் 04 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று அழைப்பாணை பிறப்பித்தார்.
நீதிமன்ற உத்தரவு கல்முனை பொலிஸ் நிலைய பொலிஸார் மூலமாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்துக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது. கல்முனை பொலிஸ் நிலைய பொலிஸாரின் சார்பில் பொலிஸ் சார்ஜன் அப்துல் ஹை நீதிமன்றத்தில் ஆஜரானார்.
No comments:
Post a Comment